கணினித் தமிழும் பணி வாய்ப்புகளும்

அ.சாந்தி ராணி & முனைவர் சா. சுஜாதா

முனைவர் பட்ட ஆய்வாளர் & இணைப்பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர்

ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி),

திண்டுக்கல்

Summary

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையத்தின் பயன்பாடு வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய வளர்ச்சி தமிழ்மொழிக்கும் பொருத்தமானது ஆகும். முந்தைய காலத்தில் தமிழ்மொழியானது மாநில மொழியாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் பல இடங்களில் பல நாடுகளில் பேச்சு மொழியாக மட்டுமின்றி ஆட்சி மொழியாகவும் மாற்றம் பெற்று வளர்ச்சி பெற்றதோடு மட்டுமல்லாமல் அலுவலக மொழியாகவும் உருப்பெற்று விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதன்வளர்ச்சியானது இணையத்தின் வாயிலாகவும் வளர ஆரம்பித்துள்ளது. இணையத்தில் தமிழ் மொழியானது உருவாக வேண்டுமாயின் தமிழுக்கான எழுத்துருக்கள் தேவை என்ற போதிலும் அதை உருவாக்குவதிலும் வெற்றி பெற்று ஆட்சிசெய்து கொண்டிருக்கின்றது. முந்தைய காலத்தில் ஆங்கில குறியீட்டு முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினிகள் இன்று தாய்மொழியிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் வணிகத்திற்கு அது உதவியாக மாற வேண்டும் என்றும் பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்துள்ளனர்.

தமிழ்மொழியானது இணையத்தில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகின்றது. எங்கும் தமிழாகவும் எதிலும் தமிழாகவும் மாற்றம் பெற்ற காரணத்தால் இன்றைய வேலைவாய்ப்புத் தேடல்களும் அதிகமாகின்றது. அதிகமான துறைத் தேர்வுகளிலும் இன்று தமிழ் மொழி பயின்ற மற்றும் தமிழ் தட்டச்சு தெரிந்தவர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு இன்றைய இளம் தலைமுறையினரும் கணினித் தமிழில் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காக தங்களை தயார்படுத்தி முன்னேறிக் கொண்டு இருப்பதை அறிவதாக இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச்சொற்கள்: இணையம், வலைபூக்கள்,தொழில்நுட்பம், கணினித்தமிழ்

முன்னுரை:
“கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று அறிவியலின் பரிணாமம் பல வழிகளில் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. பல போராட்டங்களைக் கடந்துதான் மனித இனம் இன்று வெற்றி கண்டு கொண்டிருக்கின்றது. இருப்பினும் இன்னும் இயற்கையை வென்று விடவில்லை. இயற்கையை மட்டுமே பார்த்துப் பழகி வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்று படிப்படியாக வளர்ச்சி பெற்று முற்றிலும் தன்சுய இலாபத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சி என்ற போர்வையில் பல அறிவியல் தொழில்நுட்பங்களில் வளர்ந்து கொண்டு குறிப்பாக இணையத்தின் வாயிலாக அனைத்தையும் கற்றுக்கொண்டும் வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டும் இருக்கின்றோம். சமுதாயத்தை அடையாளம் காட்டும் கருவியாகக் கணினி வலம் வந்து கொண்டிருக்கின்றது. மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மக்களின் அன்றாட நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் கணினியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. 

தமிழின் வளமும் இணையமும்:
ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், குகைகள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவற்றில் மட்டும் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் இன்று மின் ஊடகங்களில் படிஎடுக்கப்பட்டு அனைவரும் அறியும் வண்ணம் வலம் வந்து கொண்டிருக்கின்றது. சங்க இலக்கியம் தொடங்கி இக்காலத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்ற இலக்கியங்கள் வரை அனைத்தையும் பார்க்கும்படியாக இருக்கின்றது. மேலும் பல்வேறு அகராதிகள், சொற்கோவைகள், படக்கோவைகள், உருவாக்கப்பட்டு இருப்பது மதிப்பிற்குரியதாகவும் அதன்மூலம் பிறமொழி பேசும் குழந்தைகளும் தமிழைக் கற்றுக் கொள்ளும் விதமாகவும் இருக்கின்றது. இத்தகைய வளர்ச்சி பெற்று கணினியில் வேலை வாய்ப்புகளும் அதிகமாகவே காணக்கிடக்கின்றது. 

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற ஒளவையாரின் வாக்கை உண்மையாக்கும் பொருட்டு தமிழகத்தில் பயின்றவர்கள் கூட அதிக பணம் ஈட்டும் நோக்கத்தோடும் முன்னேற்றத்திற்காகவும் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு பெறுவதையும் அறிய முடிகின்றது இத்தகைய நிலைப்பாடானது சுய தேவைக்காக இருந்தாலும் தமிழ்மொழி பரவுவதற்கு  காரணமாகவும்;, தமிழ்மொழியானது வளர்ச்சி பெற்று தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையத்தளங்கள் போன்றவை உருவாக வாய்ப்பாகவும் அமைந்தது. தமிழனாய்ப் பிறந்தவர்களுக்குச், 

“சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!”

என்று பாரதி கூறினார். இதில் கலைச்செல்வம் என்று குறிப்பிடுவது வெறும் கலை மட்டுமே அல்ல தொழிற்கலை, விஞ்ஞானம், அறிவியல் போன்ற கலைச்செல்வங்களும் இதில் அடங்கும். 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,

“உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சல சலவென எவ்விடத்தும் பாய்ச்சி விட வேண்டும்!

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பல கழித்தோம்

குறைகளைந்தோமில்லை

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்”

என்று தமிழர்களின் மாண்பினைக் கண்டு முழக்கமிட்டார். எனவே இவற்றையெல்லாம் நாம் மனதில் இருத்திக் கொண்டு தமிழை பிற நாடுகளுக்கும் பரவிடச் செய்வதோடு மட்டும் நில்லாமல் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தும் வண்ணமாகவும் அதன் மூலம் வளர்ச்சி காணும் விதமாகவும் மாற்றம் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.

இணையத்தைப் பொறுத்தவரை தாயகத்திலிருந்து வெளிநாடு சென்று வாழ்ந்து வருகின்ற தமிழர்களே இன்று அதிகமாக உள்ளனர். கணினி சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் வெளிநாட்டில் தான் இருக்கின்றது என்ற எண்ணமே இதற்கு  காரணமாகும். இதைமாற்ற வேண்டும் எனில் நம் தாய் வீடான தமிழ்நாட்டில்தான் தமிழ்சார்ந்த தொழில்நுட்பங்கள் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்தும் வடிவமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் வேலை வாய்ப்பும் அதிகமாக உருவாகும்.

தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலம்:
புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பத்தில் சாதனைகளையும் உருவாக்குவதில் வெற்றி பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் தமிழர்கள். எந்த ஒரு கண்டுபிடிப்பும் உணர்வுப்பூர்வமாக மட்டுமன்றி அது அனுபவப் பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்றே எண்ணினர். அவ்வாறு அமையவேண்டும் எனில் முதற்படியாக ஏன்? எதற்கு? எப்படி? என்ற  வினாவிற்கு பதில் தரும்படியாகவும் தொழில்நுட்பக் கனவுகள் நிறைவேறிட தேவையான முயற்சியும் உழைப்பும் தேவையானதாகும். இதில் வெற்றி தோல்வி என்ற இரண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது அதை ஏற்றுக்கொள்வதற்கான பக்குவ மனப்பான்மையோடும் இருத்தலே சிறப்பானது.

இன்றைய காலநிலையில் தொழில்நுட்பமே அனைத்திற்கும் முழுமுதற் காரணமாக இருப்பதனால் கண்டுபிடிப்புகள் அதிகமாக இருந்தாலும் அதனைக் கண்டு மிரண்டு விடாமல், அதனைப் பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் அடிமையாகிவிடாமல் அவற்றை வளர்ச்சிப் பாதைக்கும் வேலைவாய்ப்புத் திறனுக்காகவும் மட்டுமே பயன்படுத்தி வெற்றி பெறுவதே நம் சமுதாயத்தின் வெற்றியாக அமையும்.

அன்றைய காலத்தில் அச்சுப் புத்தகங்கள் இல்லாத காரணத்தால் பல நூல்கள் மறைந்து போனதற்கு முக்கியக் காரணமாகின்றது. அச்சுப் புத்தகங்கள் இருந்திருந்தால் அப்புத்தகங்களின் பிரதிகள் பலரிடத்தில் இருந்திருக்கும். சில இடங்களில் அந்தப் புத்தகங்கள் அழிந்து இருந்தாலும் பிற இடத்தில் இருக்கும் புத்தகங்கள் அழியாமல் இருந்திருக்கும். மறைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும். 

சமயக் கொள்கைகள் பல அழிந்துபோயின பல ஏட்டுச் சுவடிகளும் மறைந்து போயின. சில மூடப்பழக்கங்களினால் அழிந்தன. பதினெட்டாம் பெருக்கு ஆற்று வெள்ளத்தில் போடப்பட்ட ஏடுகளும் எத்தனை என்று சொல்லி விட முடியாது. அரசர்களின் போரினாலும் புத்தகச் சாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்து போயின.

இவ்வாறு சில முக்கியக் காரணங்களினாலே பல தமிழ் நூல்கள் மறைந்து போயின. எத்தனை நூல்கள் மறைந்து போயிற்று என்று கணக்கிட முடியாது. உரையாசிரியர்களும், நூலாசிரியர்களும், சாசனங்களும் குறிப்பிட்டுள்ள மறைந்து போன நூல்கள் பற்றி அறிய முடிகின்றது. குறிப்பிடாமல் மறைந்த போன நூல்களை இதுவரை அறிவதற்கு இல்லை.

மீயறிவுச் செயல்பாடு:
மனித அறிவினை வைத்து உருவக்கப்படும் எந்த ஒரு படைப்பும் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பது சாத்தியமே. இத்தகைய படைப்புகளானது நம்மைவிட வேகமாக வளர்ந்து புதிய தொழில்நுட்பங்களை மிகக் குறுகிய கால அளவில் உருவாக்குவதை அறியமுடிகின்றது. மனித அறிவுத் துறையில் மிக முக்கியச் சாதனைகளுள் ஒன்று கையளவு கணிப்பானைக் கண்டுபிடிப்பது. இது மனிதனின் அறிவாற்றிலை அதிகரிக்க வழி செய்கின்றது. மனிதன் உருவாக்கிய கணிப்பொறியானது அவன் செய்ய வேண்டிய பல்வேறு பணிகளை எந்த ஒரு சோர்வும் இன்றி விரைவாகச் செய்து முடிக்கின்றது.

செயற்கை அறிவுத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களினால் சில வியத்தகு விளைவுகளும் ஏற்படுகின்றது. உதாரணமாக பார்வை இழந்தவருக்கு பார்வை அளித்தல், இதயம் சார்ந்த சிறு குறைபாடுகளைப் புகைப்படக் கருவிகளை உள்ளே செலுத்துவதன் மூலம் நோயின் திறன் அறிந்து தீர்த்தல் போன்றவை. 

செயற்கை அறிவினைப் பயன்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள பெருமளவு வாய்ப்புகளினால் அதிகமான பணிவகைகள் உருவாகும். அதே சமயம் சில சிக்கல்களும் எழ வாய்ப்பு இருக்கின்றது. 

முடிவுரை:
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமாயின் இளம் தலைமுறையினர் தமிழ் மொழியினை விட்டு விலகி விடாமல் காப்பதற்கு வலைதளங்கள் தான் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தமிழ் மேலும் வளர்ச்சி அடைந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது என்பதே உண்மையாகும்.

அடிக்குறிப்புகள்:
http://www.tamilvu.org/ 

டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், பாரதியும் பாரதிராசனும், 1990, நறுமலர்ப் 

பதிப்பகம், சென்னை.

கல்பனா தாசன் (தொ.ஆ) – பாரதிதாசன் பாடல்கள், பாவை பதிப்பகம், சென்னை – 2009.
Author
கட்டுரையாளர்

அ.சாந்தி ராணி & முனைவர் சா. சுஜாதா

முனைவர் பட்ட ஆய்வாளர் & இணைப்பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர்

ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி),

திண்டுக்கல்