கணிப்பொறியில் தமிழ்

முனைவர் கி. சாந்தினி

இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை

ஜி. டி. என் கலைக் கல்லூரிதிண்டுக்கல்.

Summary

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்துத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் எந்த மொழிக்கு இல்லையோ, அந்த மொழி காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும். எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் தன்வயப்படுத்திக் கொண்டு தன்னிலை மாறாது, வாழும் மொழியாகப் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவது நமது செந்தமிழ்.

“ பிறநாட்டு நல்லறிஞர் சரித்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புது நூல்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.”

என நம் முன்னோடிக் கவிஞர் கூறியபடி, இருபதாம் நுாற்றாண்டின் இணையற்ற மனிதக் கண்டுபிடிப்பான கணிப்பொறியில் தமிழ் வளர்ச்சிநிலையை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகிறது.

இணையத்தில் தமிழ்:
 உலகின் பழமை வாய்ந்த உயர்தணிச் செம்மொழிகள் எட்டில் ( கிரேக்கம், இலத்தின், அரபி, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம் ) இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகளாக தமிழும் சீனமும் திகழ்கின்றன. இன்றைய உலகமயமாக்கலான காலகட்டத்திலும் வழக்காற்றில் நவீன மொழியாகவும், வரலாற்றில் வளமான மொழியாகவும் நம் தமிழ்மொழி வளர்ந்து நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு கணினித்தமிழ்நான்காம் தமிழாய் வளா்ந்து வருகிறது.

 இணையம் இன்று ஒவ்வொரு சாதாரண மனிதனின் வாழ்விலும் பிரிக்கவியலா ஓர் அங்கமாகிவிட்டதை நாம் அறிவோம். இணையம் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப சாதனம். இணையத்தின் மூலம் நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். சிங்கப்பூரை தலைமையமாகக் கொண்ட KPMG என்ற நிறுவனம் கூகுளுடன் இணைந்து ஆகஸ்ட் 2017 – ல் நடத்திய ஆய்வில் 2016 – ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் இணையத்தில் அதிகமாகப் பயன்படும் மொழிகளில் தமிழ் முதலிடம் வகிப்பதாகவும், 42%  பேர் தமிழ் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 2021 – ம் ஆண்டு வாக்கில் 74 % பேர் தமிழில் இணையத்தை அணுகுவார்கள் என்றும், அப்போதும் இந்தியாவில் இணையத்தில் தமிழே முதலிடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழில் தேடுபொறிகள்:
 இணையம் என்ற அகன்ற வெளியில், உங்களுக்குத் தேவையான தகவல்களை நொடிப்பொழுதில் தேடித்தருபவை தேடுபொறிகள். பல தேடுபொறிகள் இருந்தாலும் அவற்றில் சிறந்து விளங்குபவை ஒரு சில மட்டுமே. இணைய உலகில் சிறந்த பத்து தேடுபொறிகளில், கூகுள் (Google)  முதலிடத்திலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் (Bing) இரண்டாம்  இடத்திலும் யாகூ (Yhoo) மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதில், கூகுள் மற்றும் பிங்  தமிழில் தேடும் சேவைகளை வழங்கி வருகின்றன. கூகுள் தமிழில் தேடுவதற்கு வசதியாக, தமிழ் தட்டச்சு வசதியையும் வழங்குகின்றது.

மின்  அரசாண்மை:
 ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது மின் அரசாண்மை எனப்படும். நமது தமிழ்நாடுஅரசு தனது அனைத்துத் தேவைகளையும் இணையத்தின் வழியே வழங்கி வருகின்றது. தமிழகத்தின் எந்த மூலையாக இருந்தாலும் அரசுடன் உடனடியாக இணையத்தின்  வழியே தொடா்பு கொள்ள முடியும். முக்கிய அறிவிப்புகள், அரசாணைகள், அரசின் திட்டங்கள், சேவைகள் போன்றவை இணையத்தின் வழியே கிடைக்கின்றன.

 இந்தியாவிற்கு வெளியே, இலங்கை அரசு தனது இணைய சேவை முழுவதும் தமிழில் வழங்குகிறது. சிங்கப்புர் அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை தமிழில் இயக்கவில்லை எனினும், அனைத்து அரசு  சேவைகளைத் தமிழிலும் வழங்கி வருகின்றது.

மின் நுாலகம்;
 சென்னையில் 17.02.2001 அன்று, முதல் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தோற்றம் பெற்றது. மின் நுால்களைத் தொகுத்து வழங்கியவையே மின் நூலகங்கள். இலட்சக்கணக்கான தமிழ் நூல்களைக் கொண்ட மின் நூலகங்கள் பல நிறுவப்பட்டுள்ளன. இவை இணையத்தின் வழியே அச்சுப் புத்தகங்கள் போய்ச் சேர முடியாத இடங்களில் வாழும் தமிழர்களுக்கு நல்ல பல தமிழ் நுால்களைக் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்து வருகின்றன. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மின் நூலகத்தில், நூல்கள், அகராதிகள், பிறவகை நூல்கள் என முப்பெரும் பிரிவுகள் உள்ளன. நூல்கள் பிரிவில் சங்ககாலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் உருவாக்கப்பட்ட இலக்கண இலக்கிய நூல்கள் உரையுடன் மிக எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகப்பேரகராதி, ஆங்கிலம் – தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி ஆகியவற்றுடன் ”தமிழ் மின் நிகண்டு” என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கலைச்சொற்களாக தகவல் தொழில்நுட்பவியலும், அறிவியல், சமுதாயவியல், மானிடவியல், வேளாண்மை போன்ற துறைகளில் இந் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் தட்டச்சு இடைமுக மென்பொருள்:
 கணிப்பொறியை பயன்படுத்தி சொற்செயலிகளில் ஆவணங்களை தட்டச்சு செய்யவும், இணையத்தின் வழியே தகவல்களைத் தேடவும், பெறவும் மட்டுமே தமிழ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கணிப்பொறியில் தமிழ் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில், தமிழ் இடைமுக மென்பொருள்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறை தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாகும். கணிப்பொறிகள் மட்டுமின்றி ஸ்மார்ட் கைபேசிகளிலும் இம்முறையில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும். இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, பிழை திருத்தி, தொடரமைப்பு, சொல்லமைப்பு முறைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்கள். தமிழ், கலப்பை, தாரகை, இ-கலப்பை என பல தமிழ் மென்பொருட்கள் தோன்றியுள்ளன.

பிரபலமான தமிழ் இடைமுக விசைப்பலகைகள்:
NHM Writer -  இ கலப்பை மற்றும் லிப்பிகார்  போன்றவை ஆங்கில ஒலியியல் முறையில் தமிழ் யுனிக்கோட், தமிழ் 99 போன்ற தட்டச்சு முறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருட்கள் ஆகும். செல்லினம் மற்றும் பொன்மடல் போன்றவை ஸ்மார்ட் கைபேசிகளில் ஆன்ட்ராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒலியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருள் ஆகும்.
மேற்கண்டவாறு மெல்ல மெல்லக் கணிப்பொறியில் தமிழ் மொழியானது வளர்ந்து வருகின்றது.  ஒரு நாள் நிச்சயம் நம் மொழி உலகை வெல்லும் என நம்புவோமாக.

துணை நூல் பட்டியல்:
 கணிணி அறிவியல் பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு அரசு.


Author
கட்டுரையாளர்

முனைவர் கி. சாந்தினி

இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை

ஜி. டி. என் கலைக் கல்லூரிதிண்டுக்கல்.