கற்பித்தலில் AI

முனைவர் . D. நித்யா

தமிழ் உதவிப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

Summary

Language serves as the primary identity of a community and plays a crucial role in guiding its progress. Linguistic researchers consistently assert that the extinction of a language signifies the decline of the corresponding culture and people. While individuals may adopt new languages, customs, food habits, and festivals due to migration and changing needs, they rarely relinquish their native language, civilization, and cultural values. The internet plays a pivotal role in preserving and promoting these elements. This study examines the emerging influence of Artificial Intelligence (AI) in the digital realm, where it is increasingly regarded as a central and transformative force.

மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம். மொழி தான் இனத்தை வழி நடத்துகிறது. மொழிகள் தொடர்பான ஆய்வு செய்பவர்கள், மொழியின் அழிவே அந்த இனத்தின் அழிவு என்று தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். மனிதன் தன் தேவைகளுக்காக இடம் பெயரும் போது புதிய மொழி, பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், விழாக்கள் என அனைத்தையும் கற்றுக்கொள்ள நேர்ந்தாலும் தன் மொழி, நாகரீகம், பண்பாடு போன்றவற்றை மறப்பதும், விட்டுக்கொடுப்பதும் இல்லை. இதற்கு இணையம் பெருந்தொண்டாற்றுகிறது. இவ்விணையத்தில் தற்போதைய செல்லக் குழந்தையாக திகழும் AI செயல்பாடுகளைப் பற்றி இவ்வாய்வு விவரிக்கிறது.

உலகமெங்கும் தமிழர்கள்

தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் தங்கள் மொழியையும் இலக்கியத்தையும் எடுத்துச் செல்கின்றார்கள். மொழி தமிழர்களுக்கு வெறும் தகவல் தொடர்புக்கருவி மட்டுமன்று. அது அவர்களது கலாசார அடையாளம். மொழி சார்ந்த அடையாளமும், உலகு தழுவிய பார்வையும், ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதற்கு சங்கத்தமிழ் இலக்கியங்கள் சான்றாகின்றன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல சிந்தனைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், உலகில் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசி வாழ்ந்த சமூகத்திற்கு மாத்திரம் பொருத்தமுடையனவாக நின்றுவிடவில்லை, எல்லாக் காலத்திற்கும் எல்லா சமூகத்திற்கும் எல்லா மொழினருக்கும் பொருந்துவனவாக இருப்பது தமிழ் மொழி தரும் ஆச்சரியங்களில் ஒன்றாகும். திருக்குறளில் காணப்படும் அறம் பற்றிய கருத்துக்கள், அரசியல் நிர்வாகம் பற்றிய யோசனைகள், மனிதர்களின் பண்புகள் குறித்த சிந்தனைகள் இன்னும் உலகு முழுக்கப் பொருந்தத்தக்க பொதுத் தன்மை கொண்டிருக்கின்றன. 

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் பிள்ளைகள் தமிழை ஏன் கற்க வேண்டும்? அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் யாவை? அவர்களைத் தமிழ்க்கல்வி பயிலுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்த வேண்டியதற்கான தேவைகள் யாவை? என்பன சிந்திக்கத்தக்க ஒன்று தமிழ்மொழியைப் புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தமிழ் மொழியைக் கட்டாயம் கற்கவேண்டும் என்பதற்குரிய முக்கியமான ஒன்று அவர்களது அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். தமிழர் அடையாளம் அழிந்து போய்விடும் என்ற கவலை தொடர்ச்சியாக தமிழர்கள் மத்தியில் இருக்கிறது.

தமிழ் இணையம் 

 இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சியில் கணிப்பொறியின் கண்டுபிடிப்பு மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கவல்ல வியத்தகு படைப்பாக அமைந்தது. கணிப்பொறியின் செயற்பாட்டு மென்பொருள்கள் ஆங்கில மொழியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், கணிப்பொறியின் செயற்பாடுகள், இணையச் செயற்பாடுகள் ஆகிய யாவும் ஆங்கில மொழியைச் சார்ந்தே அமைந்தன. உலகெங்கும் பரவிவாழும் தமிழர்கள் இணையத்தின் வழியாகத் தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். கணினியுகத்தில் ஒவ்வொரு மொழியும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள தனது அடுத்தகட்ட இலக்கை நோக்கி செல்கின்றன. இவ்வரிசையில் தமிழும் முன்னோக்கிச் செல்கின்றது. கணினிக் கண்டறியப்பட்ட தொடக்கக் காலத்தில் இணையத்தின் பயன்பாடு, தமிழ் மொழியை உள்ளீடுச் செய்வது, தமிழ் வழியில் தகவல்களைத் தேடிப் பெறுவது என்பது கடினமாகக் கருதப்பட்டது.

                  கணிப்பொறி வல்லமை பெற்றவர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர். பல மாநாடுகள், கருத்தரங்கங்கள் மூலம் சொற்செயலி மாற்றங்கள், விசைப்பலகைகள் தமிழ் இணையத்தில் தயக்கமின்றி செயல்பட துணைப்புரிந்தன. “பாரதி” சொற் செயலி, “முரசு அஞ்சல்” சொற்செயலி, “துணைவன்” சொற்செயலி என அனைத்தும் வெவ்வேறு குறியீட்டு முறைகளைப் பயன்படுத்தி உருவமைக்கப்பட்டிருந்தன. தமிழைக் கணிப்பொறியில் பயன்படுத்த வழிபிறந்தபின், தமிழ் இணைய தளங்கள் உருவமைக்கத் தொடங்கினர். பல இணைய தளங்கள் பயன்பாட்டில் வந்தன. பல குழப்பங்களும் வந்தன. தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு தமிழ் எழுத்துரு தரப்பாடு வடிவமைக்கப்பட்டு தமிழக அரசின் தரமாக TACE – 16 என்ற பெயரில் மின்னுலகில் தமிழ் வேகமாக வளரத் தொடங்கியது. கல்விப்பணி, நூலகப்பணி, தமிழ் மென்பொருள் வளர்ச்சிப்பணிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இணையத்தின் வழி தமிழ் கற்பது எளிமையானது. எனினும் ஒரு நூலகத்திற்கு சென்று படிப்பது போன்ற அனுபத்தினைத் தமிழ் இணையம் தருவதில்லை. இணையத்தில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்த மகிழ்வும், சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை அனைத்து பாடல்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட பெருமையும் மனதில் எழுகின்றன.

ஏஐ (AI)

செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாகக் கருதப்படும் ஒரு புதிய குழந்தை சாட் ஜீபிடி.அமெரிக்காவில் 2015- இல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மஸ்க் போன்ற பலர் சேர்ந்து தொடங்கப்பட்ட ஓபன் ஏஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இது உருவான ஐந்து நாட்களிலேயே 10 லட்சம் பயனாளர்களைச் சென்றடைந்துள்ளது. இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள், மாதிரியின் பயிற்சிக்கும் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2018 – ஆம் ஆண்டில் நிர்வாகப்பொறுப்பில் இருந்து மஸ்க் வெளியேறினார். ஆனால் அவர் தொடர்ச்சியாக இந்நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்து வந்தார். இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம், அமேசான் நிறுவனம், இன்போசிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. நவம்பர் மாதம் – 2022 – இல் ஓபன் ஏஐ நிறுவனம்  சாட் ஜீ்பிடியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.

சாட் ஜீபிடி

Generative pre – training Transformer என்கிற கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையான விதத்தில் வார்த்தைகளை உருவாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேள்விகள் என்ன விதத்தில் கேட்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அதே விதத்தில் பதில் சொல்லும் படி உருவாக்கப்பட்டு இருப்பது தான் சாட் ஜீ்பிடி. இணைய உலகைக் கலக்கிக் கொண்டு இருக்கும் ஒரு தொழில் நுட்பம். இது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட் புரோகிராம்.யார் வேண்டுமானாலும் உரையாடல் திகழ்த்திட முடியும். மனிதர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்கள் ஏற்கனவே கேட்ட கேள்வி்கள் ஆகியவற்றை நினைவிலே வைத்துக் கொண்டு உரையாடல்களை நிகழ்த்தும் விதத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தான் உருவாக்கி்ய புரோகிராமில் உள்ள தவறைச் சரி செய்திட இது உதவுகிறது. ஒரு மாணவன் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத உதவி செய்கிறது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு உரையை மொழிபெயர்க்க பயன்படுத்தலாம். நீண்ட உரையை சுருக்கமாக்கப் பயன்படுத்தலாம். கட்டுரைகள், கதைகள் பலவற்றை உருவாக்கப் பயன்படுகிறது. ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், சீன மொழி உள்ளிட்ட பல மொழிகளை இதனால் புரிந்து கொண்டு பதில் தர முடியும். ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே அதிக தகவல்களைத் தருகிறது. 

மனித மூளை யோசித்து பதில் கூறுவது போன்று தன்னுள் உள்ளீடாக உள்ள தரவுகளை கொண்டு சாட் ஜீபிடி பதில் அளிக்கிறது. லாபநோக்கமற்ற நிறுவனம் என்று கூறுகிறது.  தற்போது 100 மில்லியன் பயனாளர்கள் சென்றடைந்துள்ளது. இது நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு மைல்கல்லாக காணப்படுகிறது. சாட் ஜீபிடியை உருவாக்க மைக்ரோ சாப்ட் நிறுவனமும் நிதி உதவி செய்துள்ளது. எனவே தனது தேடு பொறியான பிங் என்பதனுடன் இணைத்து பிங் சாட் என்பதை வெளியிட்டுள்ளது. சீனா, ஈரான், வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் சாட் ஜீபிடியை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளது. எனவே சாட் ஜீபிடி – யும் இந்த நாடுகளில் தங்களின் வணிகத்தை செய்ய விருப்பமில்லை என தெரிவித்துள்ளது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதுபோல் இயந்திரத்தை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாட் ஜீபிடி மனிதன் யோசிப்பது போன்று யோசித்து தனக்கு உள்ளீடு செய்த செய்திகளை நமக்கு பகிர்கிறது. இயந்திரத்தை சிந்திக்க செய்வதால் சாட் ஜீபிடி ஆபத்தானது என்ற கருத்தும் மக்களிடையே நிலவுகிறது.

புற்றீசலாய் AI

பிங், க்ரோம், ஃபயர் பாக்ஸ், போன்று தேடு பொறியாக சாட் ஜீ்பிடியை பயன்படுத்தலாம். ஆனால் அதில் ஒரு படி உயர்ந்து நாம் எழுதிய புரோகிராமை சரி செய்து தரும். ஒரு கதை கூற சொன்னால் கதை கூறும். கூகுளில் நாம் ஒரு வார்த்தையின் பொருளைத் தேடினால் அவ்வார்த்தையின் பொருள் ஒரு வார்த்தையாகக் கிடைக்கும். மேலும் அவ்வார்த்தை எங்கெங்கு இலக்கியத்தில் பயின்று வந்துள்ளன என்பன போன்ற செய்திகளும் கிடைக்கும். ஆனால் சாட் ஜீ்பிடியில் வார்த்தையின் பொருள் ஒருபத்தியாக கிடைக்கிறது. மாணவர்கள் தங்கள் பணிகளுக்கு ஆயத்த பதில்களைக் கண்டறிய இதைப் பயன்படுத்தத் தொடங்கியதை அடுத்து, இது வெளியான ஒரு மாதத்திற்குள் நியூயார்க்கில் கல்வி நிறுவனங்கள் இதன் பயன்பாட்டைத் தடை செய்துள்ளது.  இந்தியாவில் சில பல்கலைக்கழகங்கள் இதைத் தடை செய்துள்ளது. 

  • • Microsoft-Bing-copilot (gpt-4)

  • • Google-Gemini 

  • • Open Al- chat gpt

  • • Meta-Llama

  • • Leonordo AI 

ஜெமினி, ஜாட் ஜிபிடி,  பெர்பிளக்சிட்டி, மேட்டா மற்றும் பிற ஏஐ பயன்பாடுகளில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

  • • உரையாடல் 

  1. • எழுத்துப்பணி

  2. • சரி பார்த்தல் 

  3. • தகவல் தொகுப்பு

  4. • ஆய்வுப் பணி

  5. • மொழிபெயர்ப்பு  

என பல துறைகளில் கற்றலில்  பயன்படுகிறது.

உரையாடலில் நண்பர்களைப் போன்று உரையாடுகிறது. கட்டுரை, கவிதை என எழுத்துப்பணிகளில் அனைத்து நிலைகளிலும் உதவுகிறது. தகவல்களைச் சேகரித்து தருகிறது. அதை பதிவேற்றம் செய்தால் சரிப்பார்த்து தருகிறது. தகவல்களைத் தொகுத்து தருகிறது. ஆய்வு பணிக்கான வேலைகளை எளிதாக்குகிறது. ஆங்கிலத்தில் உள்ள செய்திகளைத் தமிழ் மொழி பெயர்த்து தருகிறது. தமிழில் உள்ள செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு தருகிறது. நாம் வார்த்தைகளின் மூலம் அதனை  கட்டுப்படுத்தலாம். வார்த்தைகளை தெளிவாகக் கூறுவதின் மூலம் நாம் சொல்லும் செயலை புரிந்து கொண்டு அதற்கேற்ற பதிலை அது நமக்கு தெரிவிக்கின்றது.  நாம் கூறும் செய்திக்கு ஏற்ற புகைப்படத்தை  உருவாக்கித் தருகிறது. அதை அசையும் படி தெரிவித்தால் அதையும் செய்து தருகிறது. குதிரை என்றால், குதிரை என்ற புகைப்படத்தை கொடுத்து, அதை நடப்பதாக செய்ய வேண்டும் என்றால் அது நடந்து வருவது போன்று நமக்கு உருவாக்கித் தருகிறது. இதனைக் கொண்டு நாம் ஒரு குரும்படத்தையே உருவாக்க முடிகிறது.

குரல் சார்ந்த ஏஐ

உரை வடிவத்தில் உள்ள தகவல்களை  இயற்கையான மனிதக் குரல் போல மாற்றுவது இந்த குரல்  தொழில் நுட்பக் கருவியின் வேலை ஆகும். வெறும் இயந்திர குரல் போல ஒழிப்பதில்லை. மாறாக உணர்ச்சி, அழுத்தம், உச்சரிப்பு போன்ற நுணுக்கங்களுடன் பேசுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை குரல் சார்ந்த ஏஐ என்று கூறலாம். உரையை, கட்டுரையை கதையாகக் கூறுகிறது. பல குரல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நமக்குத் தேவையான குரல்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். முதுமையான, சாந்தமான, அமெரிக்க உச்சரிப்புடன் ஆண் குரல், பெண் குரல் என பல வடிவங்களில் குரல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் குரலை தேர்வு செய்து, நாம் கொடுக்கும் உரையை அதை வாசிக்க செய்து, நாம் தேர்ந்தெடுத்த புகைப்படங்களுடன் இணைத்து ஓர் படத்தையே நாம் உருவாக்கி கற்பிக்கலாம். Elevan labs, Murf, Descript, Lovo, play.ht, Resemble என்ன பல கருவிகள் குரலுக்காக பயன்பாட்டில் உள்ளன.

இணையமும் குழந்தைகளும்

இன்றைய தலைமுறைகள் அனைத்தும் இணையத்தை நம்பியே உள்ளது. குழந்தைகள் உணவு உண்பதில் இருந்து உறங்கும் வரை இணையம் தேவைப்படுகிறது. சினிமா, பாடல்கள், கதைகள்  என அனைத்திற்கும் இணையம் அவசியம், ஆரம்ப நிலை கல்வி கற்பதற்கு இணையம் தேவைப்படுகிறது. அதனால் அன்றாட தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி என எவ்வித கல்வி சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ள கற்று கொள்ள இணையம் அவசியமானது. தங்களுக்கு தெரியாத செய்திகளை, பாடங்களை தற்காலத்தில் வலையொளி (you tube) மூலமாக கற்றுக் கொள்கின்றனர்.

முடிவுரை

தமிழ் இணையப் பல்கலைக்கழகப்பணிகள் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் தனித்தனியே இயங்கிவந்த சில கணிப்பொறி நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து கணித்தமிழ்ச் சங்கம் என்ற ஒரு அமைப்பை நிறுவி கணித்தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகின்றது. தமிழ் இணையம் 97, தமிழ் இணையம் 98, தமிழ் இணையம் 2000 போன்ற மநாடுகளின் விளைவு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்பதனை நாம் பெருமையாக சொல்ல முடிகிறது. AI – யில் தமிழ்மொழி பயன்பாட்டில் இருப்பது பெருமையான செயல். நாம் அனைத்து வேலைகளையும் சாட் ஜீ்பிடி மூலம் செய்ய தொடங்கினால் நம்மில் சிந்திக்கும் திறனை நாம் இழக்க நேரிடும். மாணவர்களுக்கு படைப்பாற்றல் பாதிக்கப்படும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவினை நாம் தேவைக்கு ஏற்ப பயன்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்

துணை நூற்பட்டியல் 

  1. * Meta AI: https://ai.meta.com/

  2.  * Eleven Labs: https://elevenlabs.io/

  3.  * ChatGPT: https://openai.com/chatgpt/

  4.  * Gemini AI: https://gemini.google.com/      

  5.  *https://youtu.be/gI5l7szfEcs?si=BQtlP6ZhaDDZ3u


Author
கட்டுரையாளர்

முனைவர் . D. நித்யா

தமிழ் உதவிப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்