கற்றல் கற்பித்தல் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை முன்வைத்து தமிழ் மொழி
- 2025
- கட்டுரை
- By முனைவர் கோ.திலகவதி
முனைவர் கோ.திலகவதி
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி ,கோவை – 6374702134
Summary
ஒரு மொழி தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்வதற்கு காலந்தோறும் ஏற்படுகின்ற சூழலியல் மாற்றங்களைக் கிரகித்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வருகிறது. மொழி தன்னுள் ஏற்ற மாற்றங்களை ஆக்கப்பூர்வமான அடையாளங்களாக வெளிக்கொணர அவற்றை புழக்கப்படுத்துதல் வேண்டும். அவ்வகையில் அசூர வளர்ச்சிக் கொண்டு உலகையே தன்ள் அடக்க எத்தனித்திருக்கும் செயற்கை நுண்ணறிவு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்தியாவில் பலதரப்பட்ட பள்ளிக் கல்வி பின்புலங்களிலிருந்து வருகின்ற மாணவர்கள் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான தொழிற்கல்வியை தேர்ந்தெடுக்கின்றனர். தமிழகத்தில் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களோடு மொழிபாடங்களான தமிழ் / பிரெஞ்சு /இந்தி/ மலையாளம் (PART-I) போன்றவை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கற்பிக்கப்படுகின்றன. மேல்நிலைப் பள்ளிகளில் மொழிப்பாடமாக தமிழைக் கற்காத மாணவர்கள் கால இடைவெளியின் காரணமாக கல்லூரிகளில் தமிழை விருப்பப்பாடமாக எடுக்கும் பொழுது கற்றல் கற்பித்தலில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியுமா என்ற நோக்கத்தை மையமிட்டதாக இக்கட்டுரை அமைகின்றது.
திறவுச் சொற்கள்
.மொழிப்பாடங்கள் – Language papers. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence கைப்பேசி செயலிகள் - MOBILE APP
கல்லூரியில் மொழிப்பாடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இடைநிலை (10-ம்)வகுப்பு வரை தமிழ்கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ளது.ஆனால்,மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக மொழிப்பாடங்கள் அமைவதால் தமிழை தேர்ந்தெடுப்பதில் மாணவர்களிடையே தொய்வு ஏற்படுகின்றது. இந்நிலை கல்லூரியிலும் தொடர்கின்றது. உலகிலேயே தமிழ் தொன்மையான மொழி. இலக்கிய வளம் நிறைந்தது. யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் செய்யுள், ஓசை நயம், பா இவற்றால் கட்டமைக்கப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது. எனவே தற்கால தலைமுறையினர் இத்தகைய செய்யுள் நடையிலுள்ள இலக்கண இலக்கியங்களைக் கற்பதில் தயக்கம் கொள்கின்றனர். இந்நிலையே கல்லூரிகளிலும் பெரும்பாலான மாணவர்கள் தமிழை மொழிப்பாடமாக எடுப்பதற்கு தடையாகின்றது. இடைநிலை வரை தமிழ் பயின்று மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிப்பாடமாக பயிலாத மாணவர்கள் சிலர் கல்லூரிகளில் தமிழ் மொழி கற்கின்றனர். கால இடைவெளி காரணமாக மாணவர்களுக்கு இலக்கியங்களை கற்றல் மற்றும் கற்பித்தலில் ஆசிரியர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
தாய் மொழியாம் தமிழ்
தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டு, அதனை படிக்க விரும்பாத அல்லது படிப்பதில் சிரமம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்லூரியில் பெரும்பான்மையாக உள்ளனர். வாழ்வியல் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. இருப்பினும் மதிப்பெண் அடிப்படையிலான வகுப்புத் தேர்வுகள் மற்றும் பாடங்களை மனப்பாடம் செய்தல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களிடம் அத்தகைய விழுமியங்களைக் கொண்டு சேர்ப்பதில் தாமதம் கொள்கின்றன. இச்சூழலில் மாணவர்களை திரும்பவும் பள்ளி பின்புல பயிற்சி முறைக்கே கொண்டு செல்வதாக மாணவர்களும், ஆசிரியர்களும் உணருகின்றனர். உலகளாவிய சிந்தனை முறையை அடைய சொற்ப நேரங்களே மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. தமிழைப் பேசுவதில், படிப்பதில் மிகப்பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. ஆனால் தேர்வு களத்தில் சிரமங்களை மேற்கொள்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவும் தமிழும்
அனைத்து துறைகளிலும் அணுஅணுவாய் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கின்றது செயற்கை நுண்ணறிவு (AI).மனித ஆற்றலை மிஞ்சிய பேராற்றலாக, மனித ஆற்றலாலே உருவாக்கப்பட்ட அறிவு பெட்டகமாகத் திகழ்கிறது. இதனால் மனிதனுக்கு உண்டாகின்ற நற்பயன்கள் குறைந்த அளவே இருப்பினும் கற்றல் கற்பித்தலில் அதன் பங்கு அலாவதியானது. தமிழ் மொழியானது கணினித்தமிழாக உருமாறி தற்போது மின்தமிழாக வலம் வருவது என்பது வரலாற்று சிறப்புடையது. அவ்வகையில் செயற்கை நுண்ணறிவு உலகோர் அறிந்து வியப்புறும் வண்ணம் தமிழ் ஆராய்ச்சியை மொழிவளத்தை மேன்மைப்படுத்தும் என்பதில் வியப்பில்லை. “செயற்கை அறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்குத் தகுந்தாற்போல் தானாகவே செயல்படுவது செயற்கை நுண்ணறிவு ஆகும்” (கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்,2021, ப–180). அதிக செயல்திறன் மற்றும் துல்லியமான தகவல்களை கொடுத்து கற்போருக்கு தனிப்பட்ட அக்கறையையும் கண்காணிப்பையும் வழங்கவல்லது செயற்கை நுண்ணறிவு. “கணினிகளுடன் இயற்கையான மொழிகளைக் கையாளும் தொழில்நுட்பம் இயற்கை மொழி செயலாக்கம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது” (கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்,2021-ப–180).தற்போது இயற்கை மொழி செயலாக்கத்திற்கான கூறுகள் வடிவமைக்கப்பட்டு வட்டாரத்தமிழ் மொழியின் சிறப்பினையும் அறிய செய்ய உத்வேகம் கொண்டுள்ளது. “கீழடியில் கிடைக்கப்பட்ட பண்டைய தமிழரின் மண்டை ஓடுகளைக் கொண்டு அவர்களது அக்கால மனித முகத்தினை தற்போது செயற்கை நுண்ணறிவு வடிவமைத்துள்ளது”
( share.google,2025) - கீழடி - பிபிசி தமிழ், சாரதா.வி. 3-7-2025) இத்தகைய அறிவியல் தொழில் நுட்பமானது தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் தரவுகளை முழுமையாக மக்களிடத்தில் எளிதில் கொண்டு சேர்க்கும் தன்மையையும் வெளிப்படுத்தி உள்ளது.
மொழிப்பாடச் சிக்கலுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வாகுமா
தமிழில் இலக்கணப் பிழையைக் களைந்து பேசுவதற்கும், எழுதுவதற்கும் உதவிப்புரிய ஏராளமான கைப்பேசி செயலிகள் (MOBILE APP) உள்ளன. அறிஞர் செயலி, பிழை திருத்தச் செயலி முதலானவை இருந்தாலும் வகுப்பறையில் மாணவர்கள் எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்வதற்கும்,அதனை செயல்பாட்டின் நிலையில் கற்றுக்கொள்வதற்கும் மென்தமிழில் வசதிகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டையோடுகளுக்கு செயற்கை நுண்ணறிவின் உதவியோடு உருவம் அமைத்தலின் வாயிலாக பண்டையத் தமிழர்களைப் பற்றி அறிய ஆர்வம் மிகுந்துள்ளது. இச்சூழல் மாதிரியாக தமிழ் இலக்கண இலக்கியங்களை எளிதில் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். மாணவர்களிடையே இந்நிலை பழமையான தமிழ் செய்யுள் மொழியாக மட்டுமல்லாமல் பழந்தமிழர் வாழ்வியல் மொழியாக தலைசிறந்து இருந்ததையும் இனி நம் வாழ்வில் பெறுமிடத்தையும் உணர வாய்ப்பாக அமைகிறது.
கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்
பாடங்களை கற்றல் கற்பித்தலுக்கும் ஆராய்ச்சி செய்வதற்கான தகவல்களை திரட்டுவதற்கும் உதவியாக Open AI, Chat GPT, Gemini முதலான செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் பயன்படுகின்றன. இக்கருவிகளை வகுப்பறையில் முழுமையாக பயன்படுத்திவிட முடியாது. ஏனெனில் இவை அனைத்தும் வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான உறவு நிலையை பாதிப்படையைச் செய்கிறது. Power point (PPT) எனப்படுகின்ற முறையில் பாடப்பகுதியை தயார் செய்து கொடுக்கவும் துணை புரிகின்றது. இருப்பினும் “Maya AI, Talk Pal AI, iVoca,Duolingo”(( kaniyantamil 20205) போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகள் வகுப்பறையில் மாணவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுத்தர உதவுகின்றன. இவைகள் தமிழ் மொழிப் பாடங்களை காட்சி வடிவில் உரையாடல் மூலமாக கற்றுத் தருகின்றன. இலக்கணங்களைக் கற்றுத் தர எண்ணற்ற உதாரணங்களை வழங்குகின்றன. குறைந்த நேரத்தில் நிறையப் பாடங்கள் குறித்து தெளிவுகளை மாணவர்கள் பெற வாய்ப்பளிக்கப்படுகின்றது. பழமை மொழி என்றும் கடுமையான இலக்கணம் மொழி தமிழ் என்ற தவறான புரிதல்கள் களையப்பெற்று தொழில்நுட்ப வளர்ச்சிக் கொண்ட தமிழ் மொழியையும் தற்கால மாணவர்கள் விரும்பிக் கற்க வழி செய்யப்படுகின்றது. தமிழ் மொழி கற்றல் மற்றும் பேசுதலை எளிமைப் படுத்த தமிழக அரசின் ivoca செயலி உதவிப் புரிகின்றது. (play.google.com வ்2025)கணினித் தமிழில் இம்மாதிரியான மாணவர்களுக்கு உகந்த வகையிலும் வகுப்பறையில் அவற்றைப் பயன் படுத்தும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களை உருவாக்கி அவற்றை செயல் படுத்த ஆசிரியர்களுக்கு தொழ்ச்சியானப் பயிற்சிகளை வழங்குவதாலும் இச்சிக்களுக்கு தீர்வுக் காண முடிகின்றது.
முடிவுரை
AI Era - என்று அழைக்கப்படுகின்ற செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் நம் வாழ்கின்றோம். எனவே கால ஓட்டத்தில் கரைந்திட செயற்கை நுண்ணறிவின் தேவை தாய்மொழியிலும் அவசியமாகின்றது. Open AI, Chat GPT, Perplexity AI போன்ற செயற்கை நுண்ணறிவுத் தேவை நடைமுறை வாழ்வியலில் அங்கமாகிவிட்டது. மொழிப்பாட வகுப்பறையில் தமிழ் மொழியை கற்பிக்க பிழைத்திருத்த பேராசிரியர்களின் உதவியோடு செயற்கை நுண்ணறிவின் பங்கு முக்கியமானது. இதன் வழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த தமிழ் மொழியின் தேவை மற்றும் பயன்பாட்டை இன்றைய தலைமுறையினரிடையே ஏற்படுத்த முடிகின்றது என்பது இக்கட்டுரையின் முடிவாகும்.
துணை நூற்பட்டியல்
தமிழ் இணையக் கல்விக்கழகம் - கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும் (தொகுதி – I) தமிழ் இணையக் கல்விக்கழகம் கோட்டூர், சென்னை – 25 -2021
https://share.google/ycINS5LzoEA4Y1yJs கீழடி: மண்டை ஓடுகளின் அடிப்படையில் முகத்தை மறு ஆக்கம் செய்தது எப்படி? ஆய்வாளர்கள் விளக்கம் - பிபிசி தமிழ் சாரதா.வி. 3-7-2025.
https://kaniyantamil.com/best-mobile-apps-tamil-learning/-கைப்பேசி செயலிகள்
https://play.google.com/store/apps/details?id=io.ivoca.conversationtamil&hl=en&pli=1- தமிழக அரசின் ivoca செயலி







