சென்னி செய்யறிவுக் கருவி (Jenni AI) மூலம் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான வழிமுறைகள்
- 2025
- கட்டுரை
- By முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042
Summary
செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் பயன் இன்று ளவிட முடியாத அளவிற்குப் பெருகியுள்ளது. அதில் சாட்சிபிடி, செமினி, கிளாடு, பெர்பிளக்சிட்டி போன்ற செய்யறிவுக் கருவிகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு நிலவரப்படி பத்தாயிரத்தையும் தாண்டியுள்ளன. அதிலும் ஆக்கமுறைச் செய்யறிவுக் கருவிகள் (Gen AI Tools) மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் ஆய்வுக்கான கருவிகளாகச் சென்னி (Jenni), பேப்பர்பால் (Paperpal), எசிஇசுபேசி (Elicit), குயில்பாட் (QuillBot), லிட்மேப்சு (LitMaps), கான்சென்குசி (Consensus), சைட்.ஏஐ (Sci.ai) போன்றன உள்ளன. இவற்றுள் சென்னி செய்யறிவுக் கருவி ஒரு முன்னோடிக் கருவியாகும். இதனைப் பயன்படுத்தி, தமிழ்மொழியில் தரமான ஆய்வுக்கட்டுரைகளை எழுத முடியும். இது தமிழ்மொழி பயனாளர்களுக்கான மொழித் தடைகளைத் தாண்டி, பன்னாட்டுடன் இணைந்து செயல்பட இத்தொழில் நுட்பம் ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது. இந்தக் கட்டுரையில் சென்னி செய்யறிவுக் கருவியின் இயங்குமுறை, பயன்கள், செயல்முறைக் கட்டுப்பாடுகள், பயன்படுத்தும் வழிமுறைகள் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக, கணக்கு உருவாக்கம், தலைப்புத் தேர்வு, தரவுச் சேகரிப்பு, கட்டமைப்புத் திட்டமிடல், எழுத்து நடை, திருத்தம், விமர்சன மதிப்பீடு ஆகியவை விவரிக்கப்படுகின்றன. இக்கருவி கட்டுரையின் தரத்தை மேம்படுத்துவதையும், புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்குவதற்கான ஊக்கத்தையும் தரும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சில சவால்கள் உள்ளன. இருப்பினும் காலத்துக்கேற்ப வளர்ந்து வரும் செய்யறிவுக் கருவிகளைத் தமிழ்க் கல்வி, ஆராய்ச்சியில் புகுத்தல் வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது, சூழல் இலகுவாகும். அதனை இந்த ஆய்வு முதன்மை நோக்கமாகக் கொண்டு உணர்த்துகிறது.
The utility of Artificial Intelligence (AI) technology is particularly prominent today. As of 2024, the number of AI tools like ChatGPT, Gemini, Claude, and Perplexity has exceeded ten thousand. Notably, over two thousand of these are generative AI tools. Among them, tools for research include Jenni, Paperpal, Elicit, QuillBot, LitMaps, Consensus, and Sci.ai. The Jenni AI tool is a pioneering one among these. It can be used to write high-quality research articles in Tamil. This provides a rare opportunity for Tamil language users to overcome language barriers and collaborate internationally. This article clearly explains the working principles, benefits, operational controls, and usage methods of the Jenni AI tool. Specifically, it details topic selection, data collection, structure planning, writing style, revision, and critical evaluation. Furthermore, it is stated that Jenni AI will improve the quality of articles and encourage the creation of new discoveries. Despite some challenges, this study's primary objective is to demonstrate that Tamil education and research are quickly adopting and utilizing these evolving AI tools to foster global growth.
அறிமுகம்
செய்யறிவுக் கருவியின் பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் ஆராய்ச்சியாளர்களும் கல்வியாளர்களும் அதற்குப் பயிற்சி எடுக்கவேண்டிய தேவையும் உள்ளது. ஏனெனில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட செய்யறிவுக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன (செமினி செய்யறிவுக் குறிப்பு, 2025). இவை அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் பயன்பட்டு வருகின்றன என்பதை தமிழ் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் அறிதல் வேண்டும். இங்கு, (Bhagat, at el., 2024), (Shubham, Shubham & Dhamiwal, Anjali., 2024), (Ailyn, Diana., 2024), (Sani, Ijaz & Abbas, Nadeem., 2025), Artificial Intelligence Applications for Industry 4.0: (Javaid, Mohd at el., 2021) போன்ற ஆய்வுகளைச் சுட்டிக்காட்டலாம். இது போன்ற ஆய்வுகள் மருத்துவம், நிதித்துறை, உற்பத்தி, தொழில், போக்குவரத்து, சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளில் செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் பங்களிப்புகளை விளக்கியுள்ளன. எனவே, செய்யறிவுக் கருவியின் பயன்பாடு வரவேற்கத் தக்க ஒன்றாகும். அதற்கு ஏற்பத் தமிழ் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் தயாராகிக் கொள்வது காலத்தில் கட்டாயமாகும்.
இன்று பலதிறப்பட்ட செய்யறிவுக் கருவிகளில் ஆய்விற்கான எழுது கருவிகளின் வரவு, ஆய்வாளர்களின் எழுத்துப் பயிற்சிச் சோம்பலைத் தருவதாகப் பலர் கருத வாய்ப்புண்டு. இதன் வரவைத் தவிர்க்க முடியாததன் காரணங்களினால்தான் ஆங்கிலம் போன்ற மொழி ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. அதற்காக அவர்களின் ஆய்வு முடங்கிவிடவில்லை. இன்னும் வீரியத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்குச் சான்று யூடியூப் காணொலிகளில் இந்தக் கருவிகளைப் பற்றி அறிமுகம் செய்யும் காணொலிகள் தமிழில் உள்ளனவா எனப் பார்க்கும்பொழுது அறியலாம். முன்னணித்தர ஆய்விதழ்களும் செய்யறிவுக் கருவியைப் பயன்படுத்தி எழுதலாம் என்ற வரையறையைக் கொண்டு வந்திருப்பது உற்று நோக்கத்தக்கது. அவ்விதழ்கள் பத்து விழுக்காடு அளவிற்குப் பயன்படுத்தலாம் என்ற நெறிகளையும் வகுத்துள்ளனர். (Sathiyaraj( Thangasamy,2025), ),(WiseUp Communications.,2024,). (Venket,2023),(Valli, R.,2021)இந்தப் புரிதல்களோடு சென்னி செய்யறிவுக் கருவியின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இந்தச் செய்யறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். இந்தக் கருவியானது, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கருத்துக்களைத் துல்லியமாகவும், விரைவாகவும் வெளிப்படுத்த உதவுகிறது (Elakiya, 2022). தமிழ் மொழியில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு இக்கருவியைப் பயன்படுத்துவது, மொழித் தடைகளைத் தாண்டி, உலகளாவிய அறிவார்ந்த சமூகத்துடன் இணைந்து செயல்பட ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது எனலாம். இந்தக் கருவியின் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி, தரமான ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்குவது குறித்து இந்தக் கட்டுரை விளக்குகின்றது.
ஆய்விதழ்களில் செய்யறிவுக் (AI) கருவிகளைக் கையாளும் நெறிகள்
மனிதர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், ஒரு புதிய ஆராய்ச்சியைத் தொடங்கும் திறன் AI தொழில்நுட்பத்திற்கு இல்லை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெளியிடப்பட்ட ஒரு படைப்புக்கோ அல்லது ஆய்வு வடிவமைப்பிற்கோ செய்யறிவுக் கருவிகள் பொறுப்பேற்க முடியாது. பொதுவாக, ஆசிரியர் பொறுப்புக்கு (இந்த வழிகாட்டுதல்களில் உள்ள ஆசிரியர் பொறுப்புப் பிரிவில் விவாதிக்கப்பட்டபடி) இது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். மேலும், செய்யறிவுக் கருவிகளுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரமோ அல்லது பதிப்புரிமை வைத்திருக்கவோ அல்லது வழங்கவோ இயலாது. எனவே இவற்றை உணர்ந்து பின்வரும் குறிப்புகளை ஆய்வாளர்கள் உற்றுநோக்குதல் வேண்டும்.
சாட்சிபிடி (ChatGPT) போன்ற பெருந்தரவு மாதிரிச் (Large Language Models) செய்யறிவுக் (AI) கருவிகளின் பயன்பாடு ஆய்வு வெளியீடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் தற்பொழுது வரை COPE (Committee on Publication Ethics) எனும் அமைப்பும், WAME (World Association of Medical Editors), JAMA Network போன்ற பிற அமைப்புகளுடன் இணைந்து, செய்யறிவுக் கருவிகளை ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியராகப் பட்டியலிட முடியாது என்று வலியுறுத்தி வருவதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதன் தற்பொழுதைய வரையறையில் மாற்றம் நிகழலாம்.
1.1.1 COPE-இன் நிலைப்பாடு
செய்யறிவுக் கருவிகளால் முழுமையாக ஆய்வுகள் செய்யும்பொழுது பொறுப்பேற்றல், தேவைகளைப் பூர்த்தி செய்தல், அவை சட்டபூர்வமான நிறுவனங்களாக இல்லாதது, நல முரண்பாடுகள் (conflicts of interest) இருப்பதையோ அல்லது இல்லாமல் இருப்பதையோ அல்லது அவை உறுதிப்படுத்தவோ அல்லது பதிப்புரிமை, உரிம ஒப்பந்தங்களை நிர்வகிக்கவோ முடியாத நிலையெனப் பல சிக்கல்கள் உள்ளன. ஆகையால், கட்டுரை எழுதுவதிலோ, படங்கள் அல்லது வரைகலைக் கூறுகளை உருவாக்குவதிலோ, தரவுகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்வதிலோ செய்யறிவுக் கருவிகளைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள், கட்டுரையின் மையப்பொருள், முறைகள் (Materials and Methods), பிரிவு (அல்லது அதைப் போன்ற பிரிவில்) போன்றவற்றில் செய்யறிவுக் கருவி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, எந்தக் கருவி பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது (COPE Council., 2023).
ஆய்விதழ்களில் தரப்பட்டுள்ள செய்யறிவுப் பயன்பாட்டு நெறிகள்
எல்சிவரின், இசுபிரிங்கர் நேச்சர் (Springer Nature), வில்லே (Wiley) ஆகிய முன்னணி ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுவோர் செய்யறிவுக் கருவியைப் பயன்படுத்தும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை வரையறுத்துள்ளது. அவற்றைப் பின்வருமாறு அறிந்துகொள்ளலாம்.
எல்சிவரின் (Elsevier) செய்யறிவுப் பயன்பாட்டு நெறி
எல்சிவரின் (Elsevier) வெளியீட்டாளர், செய்யறிவுக் கருவியைய்யும் அதன் உதவி தொழில்நுட்பங்களையும் கட்டுரையின் மொழி, வாசிப்புத்திறனை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கின்றனர். இவர் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் அனுமதி அளிக்கவில்லை. இந்த வெளியீட்டாளர் அக்கருவிகளை ஆசிரியராகப் பட்டியலிடக் கூடாது என்றும், உள்ளடக்கத்திற்கு ஆசிரியரே முழுப் பொறுப்பு என்றும் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கருவியின் பயன்பாடுகுறித்த தெளிவான அறிவிப்பு கட்டுரையில் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது (Elsevier, n.d).
இசுபிரிங்கர் நேச்சரின் (Springer Nature) செய்யறிவுப் பயன்பாட்டு நெறி
இசுபிரிங்கர் நேச்சர் (Springer Nature), பெருந்தரவு மாதிரி (Large Language Models-LLMs) ஆசிரியத்துவத்திற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாது என்று கூறுகிறது. ஒரு பெருந்தரவு மாதிரி பயன்படுத்தப்பட்டால், அது அங்கீகாரப் பிரிவு (acknowledgements) அல்லது முறைகள் பிரிவில் (methods section) முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றது. அதாவது வாசிப்புத்திறன், நடை, இலக்கணம், எழுத்துப்பிழை ஆகிய திருத்தங்களுக்காக "AI உதவி நகல் திருத்தம்" (AI assisted copy editing) எனும் நிலையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அவற்றை அறிவிக்கப்பட வேண்டிய கட்டாயமும் இல்லையென நெறியினை வகுத்துள்ளது. இருப்பினும், இறுதிப் பதிப்பிற்கு மனிதரே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது (Springer Nature., n.d.).
வில்லேவின் (Wiley) செய்யறிவுப் பயன்பாட்டு நெறி
வில்லே (Wiley) செய்யறிவுக் கருவிகளை எழுதும் செயல்பாட்டில் ஒரு "துணையாக" (companion) பயன்படுத்த வரவேற்கிறது. ஆனால், அதை முழுமையாகவோ ஆசிரியரின் எழுதும் தன்மைக்கு மாற்றாகவோ பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. ஆசிரியர்கள் உள்ளடக்கத்தின் துல்லியத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், செய்யறிவுக் கருவித் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஒப்படைக்கும்போது அவற்றைக் குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது வில்லேயின் செய்யறிவுப் பயன்பாட்டு நெறிகள் (Reading & Writing., n.d.).
மதிப்பாய்வு (Peer Review)
மதிப்பாய்வு (Peer Review) தொடர்பான செய்திகளில், செய்யறிவுத் தொழில்நுட்பம் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு ஆசிரியர் அல்லது மதிப்பாய்வாளர் (Peer Reviewer), மதிப்பாய்வு அறிக்கையின் எழுதப்பட்ட கருத்துக்களின் தரத்தை மேம்படுத்த ஆக்கமுறைச் செய்யறிவுக் (Generative AI) கருவியைப் பயன்படுத்தலாம். இந்தப் பயன்பாடு, கையாளும் ஆசிரியரிடம் (Handling Editor) மதிப்பாய்வு அறிக்கையை ஒப்படைக்கும்போது வெளிப்படையாக எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட வேண்டும்.
இந்த வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு வழக்கைத் தவிர, ஆசிரியர்கள் அல்லது மதிப்பாய்வாளர்கள் கையெழுத்துப் பிரதிகளை (அல்லது புள்ளிவிவரங்களையும் அட்டவணைகள் உட்பட கையெழுத்துப் பிரதிகளின் எந்தப் பகுதிகளையும்) செய்யறிவுத் தொழில்நுட்பத்தில் பதிவேற்றக் கூடாது. இத்தொழில்நுட்பம் உள்ளீட்டுத் தரவைப் பயிற்சி அல்லது பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடும். இது மதிப்பாய்வுச் செயல்முறையின் இரகசியத்தன்மை, ஆசிரியர்கள், மதிப்பாய்வாளர்களின் தனியுரிமை, மதிப்பாய்வில் உள்ள கையெழுத்துப் பிரதியின் பதிப்புரிமை ஆகியவற்றை மீறக்கூடும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், மதிப்பாய்வு செயல்முறை என்பது ஒரு மனித முயற்சியும் பொறுப்புமாகும். ஒரு ஆய்வு இதழின் தலையங்கக் கொள்கைகள், மதிப்பாய்வு மாதிரியின்படி, ஒரு மதிப்பாய்வு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான பொறுப்பும் கடமையும், ஒரு ஆய்விதழ்களிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியை மதிப்பாய்வு செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட தனிநபர்களுக்கு மட்டுமே உரியது. இந்தச் செயல்முறையை ஒரு உருவாக்கச் செய்யறிவுக் கருவிக்கு ஒப்படைக்கக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக மேற்கண்ட ஆய்விதழ்களின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன (Springer Nature., n.d.). இந்தப் புரிதல்களோடு சென்னி செய்யறிவுக் கருவியின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இந்தச் செய்யறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். இந்தக் கருவியானது, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கருத்துக்களைத் துல்லியமாகவும், விரைவாகவும் வெளிப்படுத்த உதவுகிறது (Elakiya, 2022). தமிழ் மொழியில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு இக்கருவியைப் பயன்படுத்துவது, மொழித் தடைகளைத் தாண்டி, உலகளாவிய அறிவார்ந்த சமூகத்துடன் இணைந்து செயல்பட ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது எனலாம். இந்தக் கருவியின் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி, தரமான ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்குவது குறித்து இந்தக் கட்டுரை விளக்குகின்றது.
சென்னி செய்யறிவுக் கருவி: அறிமுகம்
சென்னி செய்யறிவுக் கருவி என்பது மேம்பட்ட பெருந்தரவு மொழி மாதிரி ஆகும். இது பெரிய அளவிலான மொழித் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மனிதனைப் போன்ற உரையை உருவாக்கக்கூடியது (Ramesh, 2022). இதன் பயன்பாட்டினைப் பின்வரும் கருத்தியல்கள் மூலம் அறியலாம்.
இது இலக்கணப் பிழைகளைச் சரிசெய்வது மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தினை மேம்படுத்தவும் உதவுகிறது.
இது, தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதில் ஏற்படும் கால தாழ்த்தத்தைக் குறைக்கின்றது. இதன் பயன்பாட்டில் மூன்று முக்கியக் காரணிகள் உள்ளன. அவற்றுள்,
முதலாவது, இது தரமான ஆய்வு உள்ளடக்கத்தை உருவாக்க உதவியாக உள்ளது (Qian et al., 2025).
இரண்டாவது, இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஏனெனில் சென்னி செய்யறிவுக் கருவி ஒரு சில நிமிடங்களில் முழுமையான கட்டுரை ஒன்றை உருவாக்க முடியும்.
மூன்றாவதாக, இது மொழித் தடைகளைத் தகர்க்கிறது. காரணம், இக்கருவியால் பல்வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தை மொழிபெயர்க்கவும், மாற்றியமைக்கவும் முடியும்.
ஆய்வுக்கட்டுரை உருவாக்கத்தில் சென்னி செய்யறிவுக் கருவி
சென்னி செய்யறிவுக் கருவி கல்வி, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு, ஆராய்ச்சியாளர்களுக்கு எழுதுவதில் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி, பல்வேறு வகையான உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடிய அதிநவீன மொழி மாதிரியைப் பயன்படுத்துவதால் ஆய்வுக் கட்டுரைகள், பிற ஆராய்ச்சி ஆவணங்களை உருவாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் (Divyaroobasharma, 2021). இக்கருவி பயனர்களின் உள்ளீடுகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. அதனுடன் இலக்கணப் பிழைகளைச் சரிசெய்து, ஆய்வு நடையை மேம்படுத்துவதை முதன்மையாகவும் கொண்டுள்ளது.
இக்கருவியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் உள்ளுணர்வு இடைமுகம் ஆகும். இது பயனர்களுக்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் ஆராய்ச்சித் தலைப்பு, முக்கிய குறிப்புகளை உள்ளிட்டால், இக்கருவி மூலம் பொருத்தமான உள்ளடக்கத்தை உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்க உதவும் பல்வேறு மாதிரியமைப்புகளையும் (டெம்ப்ளேட்களையும்) வழங்குகிறது. இதன்வழி ஒரு நல்ல கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னி செய்யறிவுக் கருவித் தளப் பயனர் கணக்கு உருவாக்கம்
கூகுளில் சென்னி ஏஐ (Jenni AI) எனத் தேடினால் சென்னி.ஏஐ (jenni.ai) என்ற தளத்தை முதல் தேடலில் காட்டும். அதனைச் சொடுக்கி உள்ளே சென்றால், பதிவுப்படிவம் (Sign Up) எனும் நீலநிறப் பொத்தான் வலதுபுற மூலையில் உள்ளதைப் பார்க்கலாம். அதனைச் சொடுக்க பின்வரும் படம்-1 தோன்றும்.
படம்-1, சென்னி செய்யறிவுக் கருவி கணக்கு உருவாக்க வழிமுறை
இந்தப் படம் - 1இல் குறிப்பிட்டதுபோல் Continue with Google எனும் வழிமுறை வழியாக நமக்கென ஒரு கணக்கினை உருவாக்கிக் கொள்ளலாம். அதன்பின்பு ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தயாராகலாம்.
சென்னி செய்யறிவுக் கருவி எவ்வாறு செயல்படுகிறது?
சென்னி செய்யறிவுக் கருவி சிக்கலான வழிமுறையைப் பயன்படுத்திச் செயல்படுகிறது. இது பயனர்களின் உள்ளீடுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. இக்கருவியானது, ஒரு பெரிய தரவுத்தொகுதியின் அடிப்படையில் பயிற்சி பெற்றுள்ளதால் பல்வேறு தலைப்புகளில் உள்ள தகவல்களை வழங்குகிறது. பயனர்கள் ஒரு தலைப்பை உள்ளிடும்போது, இக்கருவி, அது தொடர்புடைய தகவல்களைத் தேடி, ஒரு வரைவை உருவாக்குகிறது.
பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது. பயனர்கள் வெவ்வேறு எழுத்து நடைகளைத் தேர்வு செய்யலாம். மேலும் இக்கருவியானது அந்த நடையில் உள்ளடக்கத்தை உருவாக்கும். பயனர் சொற்களின் எண்ணிக்கை, சொற்றொடர்களின் அளவு, பத்திகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். இக்கருவி, இலக்கணப் பிழைகளைச் சரிசெய்து, எழுத்து நடையை மேம்படுத்துகிறது. இதனால் கட்டுரையின் ஒட்டுமொத்த தரமும் உயர்கிறது.
இப்படிச் சென்னி செய்யறிவுக் கருவியைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுவதில் சுதந்திரத்தை வழங்குவதோடு, ஆய்வு, ஆக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கிறது (Thamburaj & SIVANATHAN, 2020). இக்கருவி மூலம் உருவாக்கப்படும் ஆய்வுக்கட்டுரை எழுதுதலுக்கான வழிமுறையைப் பின்வரும் படம் - 2இல் காணலாம்.
இந்தப் படம்-2இன் அடிப்படையில் புதிய ஆய்வுகளுக்குரிய கட்டளைகளை வழங்கு ஆய்வுகளைச் செய்யலாம். அதற்குப் படம் 2இல் காட்டியுள்ளதுபோல் New பொத்தானைச் சொடுக்க, Document, AI Chat, Upload PDF ஆகியன தோன்றும். அவற்றுள் Document என்பதைத் தெரிவுசெய்ய பின்வரும் படம் 3 தோன்றும்.
இந்தப் படம்-3இல் உள்ளதுபோல் முதல் கட்டத்தில் ஆய்வுதொடர்புடைய கட்டளைகளை வழங்கி, அதன்பின்பு standard heading என்பதைத் தெரிவுசெய்து Start writing என்பதைச் சொடுக்க வேண்டும். அதுபின்பு படம்-4இல் உள்ளதுபோல் தோன்றும்.
படம்-4, சென்னி செய்யறிவுக் கருவிமூலம் கட்டுரை எழுதுதல், மேற்கோள் இடல்
இந்தப் படம் 4இல் உள்ளதுபோல் தலைப்புகளையும், உட்தலைப்புகளையும் உருவாக்கிக் கொண்டு எழுதத் தொடங்கும். அது எழுதுவது நாம் செய்யும் ஆய்வு தொடர்புடைய கருத்துக்கள் எனில் Accept எனும் பொத்தானைச் சொடுக்க அது தட்டச்சாகி விடும். அது சரியில்லை என்றால் நாம் சில சொற்களை எழுத அது புரிந்துகொண்டு எழுத ஆரம்பிக்கும். அதுதொடர்புடைய மேற்கோள்களையும் தந்து எழுத ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கோள்கள் அது தருவதையும் ஏற்கலாம் அல்லது நாம் வைத்திருக்கும் கையாவண நூலினை உள்ளீடாகத் தந்தும் மேற்கோள் இடலாம். அதனைப் பின்வரும் படம்-5,6களில் காணலாம்.
படம்-5, 6 சென்னி செய்யறிவுக் கருவி மூலம் கட்டுரை உருவாக்குதலில் இலவசப் பயன்பாட்டு எல்லை குறிப்பிடல், மேற்கோள் கோப்புப் பதிவேற்றல்
இந்த அறிமுகக் குறிப்புகளுடன் சென்னி செய்யறிவுக் கருவியின் பயன்பாட்டின் நன்மைகளை அடுத்துக் காண்போம்.
சென்னி செய்யறிவுக் கருவி பயன்பாட்டின் நன்மைகள்
சென்னி செய்யறிவுக் கருவியைப் பயன்படுத்தி ஆய்வுக்கட்டுரை எழுதுவதில் பல நன்மைகள் உள்ளன. ஒரு தலைப்புத் தரும்பொழுது அறிவியல் அடிப்படையிலான ஆய்வுக்கட்டுரை அமைப்புமுறையுடன் எழுதத் தொடங்குகின்றது. தலைப்பினைத் தந்தவுடன் அப்படியே கடகடவென எழுதிவிடாமல் ஒவ்வொரு வரியாக எழுதவா அல்லது வேண்டாமா எனும் தன்மையி்ல்களுக்கு இது மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளதெனலாம். இது மொழிபெயர்ப்பு, உள்ளடக்கத்தை உருவாக்குவதில் நேரத்தை மிச்சப்படுத்திப் பிழைகள் இல்லாத, உயர்தரமான கட்டுரைகளை உருவாக்க உதவுகிறது.
இந்தக் கருவி, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் எண்ணங்களையும், கண்டுபிடிப்புகளையும் தெளிவாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்த பேருதவி புரிகின்றது. இது ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகளை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல வழிவகுக்கின்றது. இக்கருவி, புதிய புதிய சிந்தனைகளை உருவாக்கவும், அதற்கு உருவம் கொடுக்கவும் ஆராய்ச்சி அணுகுமுறைகளை மேம்படுத்தவும் தூண்டுதலாகச் செயல்படுகிறது எனலாம்.
ஆய்வுக்கட்டுரையின் முக்கியத்துவம்
ஆய்வுக்கட்டுரைகள் புதிய அறிவை உருவாக்குவதற்கும், தற்போதுள்ள அறிவை திறனாய்வு அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கும் முக்கியமானவையாக அமைகின்றன. அவை கல்வி, ஆராய்ச்சிச் சமூகத்தில் ஒரு முக்கிய வினையைச் செய்கின்றன (Valli, 2021). இவை ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆழமான ஆய்வை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகள், புதிய முடிவுகளை முன்வைக்கின்றன (Katragadda, 2024).
சென்னி செய்யறிவுக் கருவி போன்ற ஆய்வுக்கருவிகள் ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதை எளிதாக்குவதன் மூலம், அறிவு உற்பத்தியைப் பெருக்குகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆய்வுகளைப் பொதுநிலைப்படுத்துகின்றன. அதாவது யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சிக்குப் பங்களிக்க முடியும் எனும் சூழலை உருவாக்குகின்றன (Lloyd, 2018). இவை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும், சமூக மாற்றங்களுக்கும் வழி வகுக்கின்றன.
சென்னி செய்யறிவுக் கருவிமூலம் தமிழில் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான வழிமுறைகள்
சென்னி செய்யறிவுக் கருவிமூலம் தமிழில் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குச் சில வழிமுறைகள் உள்ளன.
தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்
ஆய்வுக்கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்வது முதல் படியாகும். ஒரு ஆய்வுத்தலைப்பு, ஓர் ஆய்வின் நோக்கம், உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைதல் வேண்டும். ஆய்வுத்தலைப்பு சுருக்கமாகவும், தெளிவாகவும், குறிப்பிட்டதாகவும் விளங்குதல் வேண்டும். அதனைச் சென்னி செய்யறிவுக் கருவி உதவியுடன், பல்வேறு தலைப்புப் பற்றிய யோசனைகளைப் பெறலாம். இது உங்கள் ஆராய்ச்சிக்கு மிகவும் பொருத்தமான தலைப்பைத் தெரிவுசெய்ய உதவியாக இருக்கும்.
தரவுகளைச் சேகரித்தல்
ஆய்வுக்கட்டுரைக்குத் தேவையான தரவுகளைச் சேகரிப்பது அடுத்தக்கட்ட முக்கியமான படிநிலையாகும். ஏனெனில் அத்தரவுகள் நம்பகமான சான்றுகளில் உள்ள தரவுகளாக இருப்பது மிகமிக முக்கியம். எனவே, தரவுகளைச் சேகரிக்க நூலகங்கள், இணையதளங்கள், ஆய்விதழ்கள், பிற கல்விக் குறிப்புகளைப் பயன்படுத்தலாம். சென்னி செய்யறிவுக் கருவி தரவு சேகரிப்பினை எளிதாக்குகின்றது. ஏனெனில் இக்கருவி ஓர் ஆய்வு தொடர்புடைய தகவல்களை விரைவாகக் கண்டறிய பெரிதும் உதவுகிறது.
கட்டுரையின் கட்டமைப்பை உருவாக்குதல்
சென்னி செய்யறிவுக் கருவிமூலம் ஆய்வுக் கட்டுரையை எழுதுவதற்கு முதலில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒரு நல்ல கட்டமைப்பு, கட்டுரையை ஒழுங்கமைக்கவும், தெளிவாகவும் வைக்க உதவும். ஓர் ஆய்வுக் கட்டுரையில் அறிமுகம், ஆய்வு முறைகள், முடிவுகள், கலந்துரையாடல், முடிவுரை ஆகிய பிரிவுகள் இருக்க வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்தக் கட்டமைப்பே ஓர் ஆய்வினைச் செம்மையாக நடத்த வழிவகுக்கும்.
சென்னி செய்யறிவுக் கருவிமூலம் ஆய்வுக்கட்டுரையை மேம்படுத்துதல்
சென்னி செய்யறிவுக் கருவியைப் பயன்படுத்தி ஆய்வுக்கட்டுரையை எழுதி முடித்தபிறகு, அதை மேம்படுத்துவது அவசியம். அதிலும் குறிப்பாக அதில் தரப்பட்டுள்ள மேற்கோள்கள் சரியானவைதான என ஒப்புநோக்கிக் கொள்வது மிகத் தேவையான ஒன்றாகும்.
திருத்துதலும் சரிபார்த்தலும்
ஆய்வுக்கட்டுரையைத் திருத்துதல், சரிபார்த்தல் பிழைகளை நீக்கிச் சரியான ஆய்வினை முன்னிறுத்த வழிதரும். இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள், தொடரில் உள்ள தவறுகளைச் சரிபார்க்கவும் செய்தல் வேண்டும்.
விமர்சன மதிப்பாய்வு
சக ஆய்வாளர்கள் அல்லது நிபுணர்களிடமிருந்து விமர்சன மதிப்பீடுகளைப் பெறுவது உங்கள் கட்டுரையின் தரத்தை மேம்படுத்த இன்னும் உதவும். இந்தக் கருவியில் உருவாக்கப்படும் ஆய்வுக் கருத்து சரியானதே என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது. ஏனெனில் ஆங்கிலம் போன்ற இணைய வளங்கள் மிகுதியாக உள்ள மொழிமாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கருவி செயல்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
5.6 மேற்கோள்கள், சான்றுகள்
ஆய்வுக்கட்டுரையில் மேற்கோள்கள், சான்றுகளைச் சேர்ப்பது அடுத்த முக்கியமான படியாகும். இதனை இக்கருவி செய்தாலும் நாம் தலைப்பினைத் தந்து ஆய்வுக் கட்டுரை எழுதினாலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நம்மிடம் இருக்கும் கையாவணக் கோப்புகளைத் தந்தும் மேற்கோள் குறிப்புகளைச் சரியாகப் பதிவிடலாம். நாம் பதிவேற்றவேண்டிய கோப்பினைப் படம்-5, 6ன் மூலம் அறியலாம்.
சென்னி செய்யறிவுக் கருவி பயன்பாட்டில் உள்ள சிக்கல்கள்
சென்னி செய்யறிவுக் கருவி போன்ற கருவிகள் பல நன்மைகளை வழங்கினாலும், அவற்றைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் உள்ளன. தவறான நேர்மறை அல்லது எதிர்மறை முடிவுகளை உருவாக்கும் திறன் கொண்ட செய்யறிவுக் கருவி அடிப்படையிலான சோதனைக் கருவிகளின் துல்லியம் குறித்த கவலைகள் உள்ளன (Ricca et al., 2025). செய்யறிவுக் கருவிகள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், அவை வழங்கும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து ஐயம் உள்ளது. இவற்றுள் தரவுப் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, பாரபட்சம் குறைப்பு ஆகியவை முக்கியமானவை (Patil et al., 2024). செய்யறிவுக் கருவிகளின் செயல்திறன், பயிற்சித் தரவுகளின் தரம், வழிமுறைகள், மூல ஆவணங்களின் சிக்கலான தன்மை, கட்டளைகளின் (ப்ராம்ட்களின்) துல்லியம் போன்ற காரணிகளைப் பொறுத்தது.
ஆய்வு முடிபும் எதிர்காலப் பயன்பாட்டாய்வும்
சென்னி செய்யறிவுக் கருவிமூலம் தமிழில் ஆய்வுக்கட்டுரை எழுதுவது ஒரு பயனுள்ள, முறையாகும் (Divyaroobasharma, 2021). இது தரமான உள்ளடக்கத்தை உருவாக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், மொழி தடைகளைத் தகர்க்கவும் உதவுகிறது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் சென்னி செய்யறிவுக் கருவியைப் பயன்படுத்தி சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதலாம் (Zhao et al., 2023). இக்கருவிகள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, மனிதர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன (Davoudi et al., 2019; Rashid & Kausik, 2024). மருத்துவர்கள் நிர்வாகப் பணிகளில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிட முடியும் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது (Jotterand & Bosco, 2020). இத்தகைய கருவிகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளின் தரத்தை மேம்படுத்த முடியும் (Joshi et al., 2013). எனவே, இக்கருவி எதிர்காலத் தமிழ் ஆய்விற்கு ஒரு முக்கியமான கருவியாக இருந்தாலும், பயனருக்கு ஒரு நாளைக்கு வார்த்தைகளின் நீளம் 200 என வரையறை செய்திருப்பதும் மாதம் தொகை செலுத்திக் கட்டுரை எழுதுவதற்கான வழிமுறை தந்திருப்பதும் கவனிக்கத் தக்கது.
இந்தப் பயன்களோடு சென்னி செய்யறிவுக் கருவியைப் பயன்படுத்திப் புதிதாக ஆய்வுசெய்ய விரும்புவோர் கற்றல் நிலையில் ஆய்வுப் பார்வையை மேம்படுத்திக்கொள்ள இக்கருவி ஓர் ஆசானாகச் செயல்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் இந்தக் கருவியைப் பயன்படுத்துவதில் இன்னும் இலகுவான சூழல் வரவேண்டும் என்றால் தமிழ் ஆய்வுகளைச் செய்யும்பொழுது வருகின்ற துல்லியத்தன்மைக் குறைபாட்டைப் போக்குவதற்கான ஆய்வுகளைச் செய்யலாம்.
சென்னி செய்யறிவுக் கருவி கட்டற்ற உரிமத்தில் (jenni-ai., 2025) வெளியிடப் பெற்றுள்ளதால் தமிழுக்குத் தேவையான மேம்பாடு செய்யலாம். அவ்வாறு செய்யும்பொழுது தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் திறன் இன்னும் மேம்படும்.
துணைநின்றவை
Ateriya, N., Sonwani, N., Thakur, K. et al. (2025). Exploring the ethical landscape of AI in academic writing. Egypt J Forensic Sci, 15, 36. https://doi.org/10.1186/s41935-025-00453-1
Ailyn, Diana. (2024). AI-powered Fraud Detection and Risk Management in the Cloud.
AlAfnan, M. A. (2025). Technical Report Writing Efficiency Using AI-Powered Tools: Opportunities, Challenges, and Future Directions.
Bhagat, Miss & Wankhede, Miss & Kopawar, Mr & Sananse, Prof. (2024). Artificial Intelligence in Healthcare: A Review. International Journal of Scientific Research in Science, Engineering and Technology, 11, 133-138. 10.32628/IJSRSET24114107.
Chiu, T. K. F., Xia, Q., Zhou, X., Chai, C. S., & Cheng, M. (n.d.). Systematic literature review on opportunities, challenges, and future research recommendations of artificial intelligence in education. Computers and Education: Artificial Intelligence.
F. Ricca, B. García, M. Nass and M. Harman, "Next-Generation Software Testing: AI-Powered Test Automation," in IEEE Software, vol. 42, no. 4, pp. 25-33, July-Aug. 2025, doi: 10.1109/MS.2025.3559194.
Geng, M., Chen, C., Wu, Y., Chen, D., Wan, Y., & Zhou, P. (2024). The impact of large language models in academia: from writing to speaking. arXiv preprint arXiv:2409.13686.
Javaid, Mohd & Haleem, Abid & Singh, Ravi & Suman, Rajiv. (2021). Artificial Intelligence Applications for Industry 4.0: A Literature-Based Study. Journal of Industrial Integration and Management, 07, 1-29. 10.1142/S2424862221300040.
jenni-ai. (2025, July 22). jenni-ai. GitHub. https://github.com/jenni-ai
Jotterand, F., & Bosco, C. (2020). Keeping the “Human in the Loop” in the Age of Artificial Intelligence: Accompanying commentary for “Correcting the Brain?” by Rainey and Erden. Science and Engineering Ethics, 26(5), 2455–2460. https://doi.org/10.1007/s11948-020-00241-1
Kalyani, Aditi & Sajja, Priti. (2015). A Review of Machine Translation Systems in India and different Translation Evaluation Methodologies. International Journal of Computer Applications, 121, 16-23. 10.5120/21840-4917.
Katragadda, Vamsi. (2024). Measuring ROI of AI Implementations in Customer Support: A Data-Driven Approach. Journal of Artificial Intelligence General science (JAIGS) ISSN:3006-4023, 5, 133-140. 10.60087/jaigs.v5i1.182.
Lloyd, Kirsten. (2018). Bias Amplification in Artificial Intelligence Systems. 10.48550/arXiv.1809.07842.
Patil, A., Singh, N., Patwekar, M., Patwekar, F., Patil, A., Gupta, J. K., Elumalai, S., Priya, N. S., & sahithi, A. (2025). AI-driven insights into the microbiota: Figuring out the mysterious world of the gut. Intelligent Pharmacy, 3(1), 46-52. https://doi.org/10.1016/j.ipha.2024.08.003
Perceptions of Students and Faculty on the Use of AI in Academic Writing. (n.d.).
P, Divyaroobasharma. (2021). The Raise of Tamilisai by Thevara Moover. International Research Journal of Tamil, 3, 98-101. 10.34256/irjt21s219.
Qian, Jin & Chen, Jiaxi & Zhao, Shuming. (2025). “Remaining Vigilant” While “Enjoying Prosperity”: How Artificial Intelligence Usage Impacts Employees’ Innovative Behavior and Proactive Skill Development. Behavioral Sciences, 15, 465. 10.3390/bs15040465.
R.VALLI,. (2021). TIRUMANTIRATTIL UPATĒCAM [PREACHINGS IN THIRUMANDIRAM]. Muallim Journal of Social Science and Humanities, 143-149. 10.33306/mjssh/170.
Ramesh, A. (2022). A Meta-Grammatical View of the "Linguistic Nature" of Bharthi's Poetry. International Research Journal of Tamil, 4, 120-127. 10.34256/irjt224s1117.
Rashid, Adib & Kausik, Ashfakul. (2024). AI Revolutionizing Industries Worldwide: A Comprehensive Overview of Its Diverse Applications. Hybrid Advances, 7, 100277. 10.1016/j.hybadv.2024.100277.
Rashid, A.B. and Kausik, M.A.K. (2024) AI Revolutionizing Industries Worldwide: A Comprehensive Overview of Its Diverse Applications. Hybrid Advances, 7, Article 100277. https://doi.org/10.1016/j.hybadv.2024.100277
Sani, Ijaz & Abbas, Nadeem. (2025). The Impact of AI on Financial Risk Management: Fraud Detection and Cybersecurity in Finance. 10.13140/RG.2.2.12250.86723.
S, Elakiya. (2022). Genealogical grammar development and text formatting in Tamil society. International Research Journal of Tamil, 4, 194-199. 10.34256/irjt22s231.
Shubham, Shubham & Dhamiwal, Anjali. (2024). Artificial Intelligence in Financial Services.
Tokdemir Demirel , E. (2024). The Use and Perceptions Towards AI Tools For Academic Writing Among University Students. Innovations in Language Teaching Journal, 1(1), 1–20. https://doi.org/10.53463/innovltej.20240328
Zhao, L., Walkowiak, S., & Fernando, W. G. D. (2023). Artificial Intelligence: A Promising Tool in Exploring the Phytomicrobiome in Managing Disease and Promoting Plant Health. Plants, 12(9), 1852. https://doi.org/10.3390/plants12091852
The use of Jenni AI tool in writing Tamil research papers [Video]. YouTube. https://www.youtube.com/live/8_-0MDt8404?feature=shared
AI tool for writing research papers | PhD students software | Tamil [Video]. YouTube. https://youtu.be/r3JRPzxBcOY?feature=shared
Tirumantiratil Upatēcam [Preachings in Thirumandiram]. Muallim Journal of Social Science and Humanities, 143–149. https://doi.org/10.33306/mjssh/170
How to use AI tool Jenni for research paper writing: Step-by-step process explained [Video]. YouTube. https://www.youtube.com/watch?v=UZvoG66lsGs
Artificial Intelligence in Healthcare: A Review (Bhagat, at el., 2024),
The Role of Artificial Intelligence in financial Services: A Review (Shubham, Shubham & Dhamiwal, Anjali., 2024),
AI-powered Fraud Detection and Risk Management in the Cloud (Ailyn, Diana., 2024),
The Impact of AI on Financial Risk Management: Fraud Detection and Cybersecurity in Finance (Sani, Ijaz & Abbas, Nadeem., 2025),
Artificial Intelligence Applications for Industry 4.0: A Literature-Based Study (Javaid, Mohd at el., 2021)







