செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியும் சாட் ஜிபிடியும்

முனைவர் வி.காயத்ரி பிரியதர்ஷினி

உதவிப்பேராசிரியர்

ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல்.

Summary

உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வந்த பெருமை இன்றைய தகவல் தொழில்நுட்பத்தினையே சாரும். மின்னணு ஊடகங்கள் என்ற வரிசையில் கணினியும் கணினி சார்ந்த தொழில்நுட்பங்களும் மனித வாழ்வில் தவிர்க்க இயலாத அம்சமங்களாக மாறியுள்ளன. 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றை யாரேனும் எழுதப்புகுவாராயின் அதில் கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு அக்காலத்தின் வளர்ச்சியின் மைல்கல் என்றே கூறுவர். ,மனித வாழ்க்கை கணினியைச் சார்ந்திருக்கின்றது. கணினிகள் அற்ற வாழ்க்கை சாத்தியமற்றது என்று எண்ணுமளவிற்குக் கணினியின் வளர்ச்சி உள்ளது. “இயற்கை அல்லன செயற்கை தோன்றினும்” என்பதற்கிணங்க மனித இயற்கை அறிவு வளர்ச்சியின் அடுத்த நிலை எனப் போற்றப்பட்டது செயற்கை நுண்ணறிவு. சாத்தியமற்றது என எண்ணப்பட்டவற்றை நிகழ்த்திக் காட்டும் அறிவியல் படிநிலை வளர்ச்சியின் ஒரு நிலை தான் இவ்வறிவுசார் தொழில்நுட்பம். அச்செயற்கை நுண்ணறிவினைக் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.

முன்னுரை:
 உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வந்த பெருமை இன்றைய தகவல் தொழில்நுட்பத்தினையே சாரும். மின்னணு ஊடகங்கள் என்ற வரிசையில் கணினியும் கணினி சார்ந்த தொழில்நுட்பங்களும் மனித வாழ்வில் தவிர்க்க இயலாத அம்சமங்களாக மாறியுள்ளன. 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றை யாரேனும் எழுதப்புகுவாராயின் அதில் கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு அக்காலத்தின் வளர்ச்சியின் மைல்கல் என்றே கூறுவர். ,மனித வாழ்க்கை கணினியைச் சார்ந்திருக்கின்றது. கணினிகள் அற்ற வாழ்க்கை சாத்தியமற்றது என்று எண்ணுமளவிற்குக் கணினியின் வளர்ச்சி உள்ளது. “இயற்கை அல்லன செயற்கை தோன்றினும்” என்பதற்கிணங்க மனித இயற்கை அறிவு வளர்ச்சியின் அடுத்த நிலை எனப் போற்றப்பட்டது செயற்கை நுண்ணறிவு. சாத்தியமற்றது என எண்ணப்பட்டவற்றை நிகழ்த்திக் காட்டும் அறிவியல் படிநிலை வளர்ச்சியின் ஒரு நிலை தான் இவ்வறிவுசார் தொழில்நுட்பம்.  அச்செயற்கை நுண்ணறிவினைக் குறித்து  இக்கட்டுரை ஆராய்கின்றது.

செயற்கை நுண்ணறிவு:
 செயற்கை நுண்ணறிவு ஒரு புதிய தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது, ஆனால் உண்மையில் இது புதியது அல்ல என்று அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.  நுண்ணறிவுத் திறன் கொண்ட இயந்திரங்கள் பற்றிய கற்பனை கிரேக்க புராணங்களில் காணப்பட்டன. புனைகதைகளில்  அன்று புனைவானதாகக் கருதப்பட்டது இன்று எதார்த்தமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். “அறிவியல் சிறுகதைகள் நடைமுறை உலகில் நிலவும் விதிகளை மாற்றியமைக்கும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன.  ஆனால் நடைமுறை விதிகளை மாற்றி அமைத்துப் படைக்கப்படும் உலகில் இன்றைய உலகத்தின் அடையாளங்களை முழுவதுமாக மாற்றக் கூடியது”1 மேலைநாட்டு புனைகதைகளில் செயற்கை நுண்ணறிவினை மையமாகக் கொண்டு பல கதைகள் புனையப்பட்டுள்ளன.

 நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புனைகதை என பிரான்கைன்ஸ் டீனைக் கூறுவர். ஓர் இயந்திர மனிதனை உருவாக்கி அவனுக்கு உயிரளிக்க முடியும் எனும் சாத்தியத்தின் துவக்க விதைதான் இப்புனைவு. மேலைநாட்டு அறிவியல் புனைகதைகளில் செயற்கை நுண்ணறிவுத்திறனை மையமாகக் கொண்டு பல புனைகதைகள் புனையப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழில்  இவ்வகை நுண்ணறிவு தொடர்பான புனைகதைகளை எழுதி அவை இன்று நடைமுறை சாத்தியம் என்று எடுத்துக்காட்டிய பெருமை எழுத்தாளர் சுஜாதாவைச் சாரும். கணினித் தொழில்நுட்பம் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் அதைப் பற்றி எளிய தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சுஜாதாவின் மிகச்சிறந்த சமூகப்பணிகளில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. ஆகாயம், பிரதி மகன், என் இனிய இயந்திரா, நான் ஜினோ போன்ற புனைகதைகள் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைக் கணித்தவை. 

“அறிவியல் புனைகதைகள் கனவுகளோ, கற்பனைகளோ மட்டுமில்லை.  கூர்ந்து கவனித்தால் எதிர்காலத்தில் இப்படியும் நடக்கக் கூடும் என்ற தீர்க்க தரிசனம் இருக்கும்”2(சுஜாதா, விஞ்ஞானச் சிறுகதைகள்,ப.11) இவ்வாறு புனைகதைகளில் கற்பனை என்று புறந்தள்ளப்பட்டவை, நிராகரிக்கப்பட்வை, ரசிக்கப்பட்டடவை இன்று சாத்தியமாகி மனிதர்களின் நுண்ணறிவு ஆற்றலை வெளிப்படுத்தின. விடை காணமுடியாத புதிர் என இவ்வுலகில் ஏதுமில்லை எனும் அளவிற்கு அறிவியல் உச்சத்தை எட்டியுள்ளது. 

செயற்கை நுண்ணறிவின் வரலாறு:

1943ஆம் ஆண்டில், வாரன் மெக்கல்லோக் மற்றும் வால்டர் பிட்ஸ் செயற்கை நியூரான்களின் மாதிரியை முன்மொழிந்தனர்.

1950ஆம் ஆண்டில், ஆலன் டூரிங் ஒரு "கணினி இயந்திரம் மற்றும் நுண்ணறிவு" என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார், அதில் அவர் ஒரு சோதனையை அறிமுகப்படுத்தினார், இது டூரிங் டெஸ்ட் என்று அழைக்கப்பட்டது. இயந்திரம் சிந்திக்கும் திறன் கொண்டதா இல்லையா என்பதைச் சரிபார்த்து, இயந்திரங்களில் உள்ள நுண்ணறிவைத் தீர்மானிக்க இந்த சோதனை பயன்படுத்தப்படுகிறது.

1956ஆம் ஆண்டில், முதல் முறையாக, அமெரிக்க கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி டார்ட்மவுத் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையை உருவாக்கினார். ஜான் மெக்கார்த்தி AI இன் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார் .

1972ஆம் ஆண்டில், முதல் முழு அளவிலான அறிவார்ந்த மனித உருவ ரோபோ , WABOT1, ஜப்பானில் உருவாக்கப்பட்டது.

1980ஆம் ஆண்டில், நிபுணர் அமைப்புகளின் பரிணாம வளர்ச்சியுடன் AI வந்தது. இந்த அமைப்புகள் கணினி நிரல்களாகும், அவை சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க வடிவமைக்கப்பட்டன.

1997ஆம் ஆண்டில், ஐபிஎம் டீப் ப்ளூ உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவை தோற்கடித்து, உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த முதல் செயற்கை நுண்ணறிவுக் கணினி  எனப் போற்றப்பட்டது.

2006ஆம் ஆண்டில் , AI வணிக உலகில் வந்தது. உலகின் முன்னணி நிறுவனங்களான Facebook, Twitter மற்றும் Netflix ஆகியவையும் தங்கள் பயன்பாடுகளில் AI ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. 

செயற்கை நுண்ணறிவு வாயிலாக சூட்டிகைப் பேசிகளின் செயலிகளில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. Cortana, Hound, ELSA (English Language Speech Assistant), Siftr Magic Cleaner, Robin, Adobe firefly, Duolingo, Bingo, Slidesgo, Pixelcut, Invideo AI, Beatoven. AI,Wepik, Slidesgo, picsart போன்ற செயலிகள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. அவ்வகைச் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியின்  ஒரு கூறாக இன்று வளர்ந்து வரும் துறை சாட் ஜிபிடி (chat gpt) (ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்ன்டு டிரான்ஸ்ஃபார்மர்) என்பது ஆன்லைன் (Online Chatbot) செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும். செயற்கை நுண்ணறிவில் கூறுகாளாகக் கருதப்பட்ட  சாட் பாட் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் அனைத்தும் நம்மோடு உரையாடும் தொழில் நுட்பத்தின் முகங்கள் என்றால்  ஜி பி டி அதன் உயிர் நாடி அல்லது அதன் மையத் தொழில்நுட்பம் என்றே கூறவேண்டும். அமெரிக்காவில் 2015இல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மஸ்க்  ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஏஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இது உருவான ஐந்து நாட்களிலேயே 10 லட்சம் பயனாளர்களைச் சென்றடைந்தது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாட்ஜிபிடி ஒரு மைல்கல்:
சாட் ஜிபிடியின் சிறப்பம்சம் நாம் கொடுக்கும் உள்ளீட்டைப புரிந்து கொண்டு இயற்கையான மொழியில் சொற்களைக் கோர்த்து விடை தரும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் இந்த சாட் ஜிபிடி. இதற்கு நிறைய தரவுகள் குறிப்பாக வரி வடிவ மற்றும் சொல் வடிவத் தரவுகள் கொடுக்கப்படும். அதன் பிறகு ஜிபிடி டிரான்ஸ்பார்மர் என்ற அல்காரிதத்தை பயன்படுத்தி ஒரு மனிதன் விடையளிப்பது போல தன்னிடம் இருக்கும் தரவுகளைப் பயன்படுத்தி பதில் சொல்லக் கற்றுக் கொள்ளும். பிப்ரவரி 2023 தொடங்கி பலகட்ட வளர்ச்சிகளை இன்று எட்டியுள்ளது. மெய்நிகர் ரோபோவாகக் கருதப்படும் சாட் ஜிபிடி தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் தகவல்களில் நாம் உள்ளீடும் சரியான கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தனியே எடுத்துத் தரும் மிகச்சிறந்த பணியினைச் செய்கின்றது. கூகுள் போன்ற பல்லாயிரக்கணக்கான தேடுபொறிகள் இன்றி தேர்ந்தெடுக்கபட்டவை மட்டும் அளிப்பது இதன் சிறப்பம்சம். உரையாடல்கள், ஆலோசனைகள் வழங்குதல், மொழிபெயர்ப்பு ChatGPT பல்துறை திறன் கொண்டது. இது கணினி நிரல்களை எழுத மற்றும் பிழைத்திருத்த முடியும். இசை, தொலைகாட்சிகள், விசித்திரக் கதைகள், கட்டுரைகளை உருவாக்குதல், சோதனைக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் வணிக யோசனைகளை உருவாக்குதல், கவிதை மற்றும் பாடல் வரிகளை எழுதுதல், உரையை மொழிபெயர்த்துச் சுருக்குதல்  எனப் பல பணிகளைச் செய்கின்றது.  இந்தியாவிலும் இத்தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.தற்பொழுது  தமிழ் உட்பட பதின்மூன்று இந்திய மொழிகளில் நமக்கான தகவல்களை இதில் பெறமுடியும். மனிதர்களுடன் பேராசிரியர், வல்லுநர் போல உரையாடி, உரையாடல் மூலம் தகவல்களை வழங்குதல், கேள்விகளுக்குப் பதில் வழங்குதல், தவறுகளை ஒப்புக்கொள்ளுதல், தவறான அனுமானங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பவும் பொருத்தமற்ற கோரிக்கைகளை நிராகரிக்கவும் ChatGPTக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

 “நவீன வரலாற்றில் இது மிகப்பெரிய மனநிலை மாற்றமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மனிதனின் தொழில்நுட்ப, கலாச்சாரக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், நரம்பியல் ரீதியாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, மனித மூளை அளவு மெதுவாக சுருங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது”. என்று கூறும் ‘செயற்கை நுண்ணறிவு: பூஜ்ஜியத்திலிருந்து மெட்டாவெர்ஸ் வரை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரும், ரியோ கிராண்டே டோ சுல்-ன் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழக பேராசிரியருமான மார்த்தா கேப்ரியல், நவீன காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.3 (மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்,2001) கல்வி, தொழில்நுட்பம், விவசாயம்,ஆய்வு நிலைய்கள் எனப் பல துறைகளில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.

கல்வித்துறையில் சாட் ஜிபிடி
மனிதனைப் போன்று அல்லது மனிதர்களை விட  அதிகமாக சிந்திக்கும் மற்றும் செயல்படக் கூடிய அறிவுத் திறன் கொண்ட கணினிப் பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கமாகும். இத்துறை, மனிதனின் பகுத்தறியும் திறனடிப்படையில், கற்றல், பகுத்தாய்தல், திட்டமிடல், உணர்தல், உள்ளுணர்தல், பார்த்தல், கேட்டல் ஆகிய பண்புகளைக் கொண்டு சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் மேற்கொண்டு செயல்படுத்தக் கூடிய ஒரு பணியினைக் கணினியினைக் கொண்டு செய்து முடிக்க இயந்திரங்களை உ௫வாக்குவதாகும். OPEN  AI CHAT GPT EDU என்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட் ஜிபிடியை பீட்டா வெளியிட்டுள்ளது. இது பகுத்தறிவு கொண்டது என்று போற்றப்படுகிறது. கல்வி வளாகத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.ஆக்ஸ்போர்ட், அரிசோனா பல்கலைக்கழகங்கள் இது வெற்றிகரமாக செயல்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கற்றல் அனுபத்தினை மேலும் இது வளர்ப்பதாகக் கூறுகின்றனர்.

  1. சரியான தகவல்களைச் சுருக்கி பகுப்பாய்வு செய்யப்பெற்று எளிமையாகப் பெற இயலும்.
  2. நாம் உள்ளீடும் தகவல்களுக்கு மட்டும் பொருத்தமான தரவுகளை மட்டும் சரியாகத்     தருதல்.
  3. மொழிபெயர்ப்பில் மற்ற மொழிபெயர்ப்பு  செயலிகளை விட சிறப்பாகவும் சரியான மொழிபெயர்ப்பையும் தருதல்
  4. உரையாடலில் மொழியைக் கையாளும் திறனைப்பெறமுடியும்.
  5. இயந்திரக் கற்றல் மற்றும் ஆழ்ந்த கற்றல் மாதிரியாகச் செயல்படும்.
  6. கதைகள், கட்டுரைகள் போன்ற இலக்கிய வகைமைகளை எழுதித் தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  7. பல்வேறு துறை கற்றலுக்கான வாய்ப்புகள்,ஆலோசனைகள் வழங்குதல்.
  8. நேரமும் முயற்சியும் சேமிக்கப்படுகிறது, கற்றல் திறன் மேம்படுகிறது.
  9. உரையாடல் முறையால் மொழிப்புலமை, புதிய மொழிகளைப் கற்றலுக்கான       வாய்ப்பை  நல்குகின்றது.
  10. ஆசிரியர்கள், மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை எளிமையாகக் கற்றுக்    கொள்ளமுடியும்.
  11. மொழிப்புலமை பெற வாய்ப்பளிக்கும்.
  12. ஒவ்வொரு மாணவருக்குமான தனிப்பட்டத் தேவையறிந்து செயல்படுதல்.
  13. ஆசிரியர்களும் பாடத்திட்டங்களைத் தயாரித்தல், பயிற்சிகள், வினாடி        வினாக்களை,பின்னூட்டப்படிவங்களை, வினா நிரல்கள், தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள்  போன்றவற்றைத் தயார் செய்யமுடியும் என்பதால் இதை ஆசிரியப்பணியின்  உதவியாளராக செயல்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  14. மாணவர்களின் கல்வி  எதிர்காலத்தில்  சாட் ஜிபிடி  முக்கியப் பங்கு வகிக்கும் என்பது ஐயமில்லை.

சாட் ஜிபிடி முன்வைக்கும் சவால்கள்
தொழில்நுட்பங்களும் அதன் புதிய கண்டுபிடிப்புகளும் சாதகங்கள் எனினும் பல பாதகங்களும் உண்டு. புதிய ஒன்றின் வரவினால் சாதக பாதகங்கள் சமஅளவில் உண்டு என்பது வரலாறு கண்ட உண்மை. தொழிற்புரட்சியினால் கிராமப்புற கைத்தொழில் நசிந்தது. இயந்திரங்களின் வருகையால் மனித உழைப்பு என்பத இரண்டாமிடத்திற்குச் சென்றது. இவ்வாறே சாட் ஜிபிடி தொழில்நுட்பம் பல நன்மைகள் கொண்டிருந்தாலும் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. கல்வியினைப் பொறுத்தமட்டில் மாணவர்களின் சிந்தனையையும், தேடும் திறன், கற்கும் திறன், படைப்பாற்றல் திறன் பாதிக்கவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கருத்துத் திருட்டுகள் அதிகம் நிகழும்.ஆழ்ந்து கற்றல் என்ற திறன் குன்றும். அமெரிக்காவில் சாட் ஜிபிடியின் துணை கொண்டு மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் அல்லது பயிற்சிக் கட்டுரைகள் தயார் செய்வதைத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுப்புரை:
சாத்தியமற்றது என எண்ணப்பட்டவற்றை நிகழ்த்திக் காட்டும் அறிவியல் படிநிலை வளர்ச்சியின் ஒரு நிலை தான் இவ்வறிவுசார் தொழில்நுட்பம்.  
நுண்ணறிவுத் திறன் கொண்ட இயந்திரங்கள் பற்றிய கற்பனை கிரேக்க புராணங்களில் காணப்பட்டன. புனைகதைகளில்  அன்று புனைவானதாகக் கருதப்பட்டது இன்று எதார்த்தமாகியுள்ளது.தமிழில் செயற்கை நுண்ணறிவுத்திறனை மையமாகக் கொண்டு புனைகதைகள் பலவற்றை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா.செயற்கை நுண்ணறிவுத்திறன் பல படிநிலை வளர்ச்சிகளைக் கடந்து பல துறைகளிலும் தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது.செயற்கை நுண்ணறிவின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுவது சாட் ஜிபிடி செயலி.சாட் ஜிபிடி செயலி பல்வேறு துறைகளில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் உள்ளது.

கல்வித்துறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டில் இதன் பங்கு மற்றும் பயன் குறிப்பிடத்தக்கது.சாட்ஜிபிடி மிகச்சிறந்த செயலியாகக் கல்வி நிறுவனங்கள் பல வலியுறுத்தியிருப்பினும் இது சில பாதகங்களையும் கொண்டுள்ளது. இதை எல்லாவற்றையும் நீக்கிக் காணின் சாட்ஜிபிடி 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைக்குரிய ஒரு கண்டுபிடிப்பாகப் போற்றப்படும்.

துணைநின்ற நூல்கள்:
  1. சுஜாதா, (2007)விஞ்ஞானச் சிறுகதைகள், சென்னை: உயிர்மைப் பதிப்பகம்.
  2. முஸ்தபா, மணவை, (2001) தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், சென்னை: மணவை பதிப்பகம்.
  3. https://www.bbc.com/tamil/articles/ckdewj49y9ro
  4. https://www.hindutamil.in/news
  5. https://www.padasalai.net
  6. https://www.tamilwisdom.com
  7. https://towardsdatascience.com
  8. https://ta.vikaspedia.in/education
  9. https://crossplag.com/

Author
கட்டுரையாளர்

முனைவர் வி.காயத்ரி பிரியதர்ஷினி

உதவிப்பேராசிரியர்

ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல்.