தமிழில் இணைய இலக்கியங்கள்

சு.ராஜா

முனைவர் பட்ட ஆய்வாளர்.,

தமிழ் உயராய்வு மையம்

அமெரிக்கன் கல்லூரி மதுரை.

Summary

மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவி தான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் நூல் இலக்கண நூல் ஆகும். நன்னூல் தனது பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருட்காரணத்தை விளக்கிக் காட்டுகின்றது.

அறிமுகம்:
மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவி தான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் நூல் இலக்கண நூல் ஆகும். நன்னூல் தனது பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருட்காரணத்தை விளக்கிக் காட்டுகின்றது.

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
 மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு                  (நன்னூல் 25)

தமிழ் இலக்கியம்:
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

தமிழும் இணையமும்:
“பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே“ என்ற தாயுமானவரின் அடிகளுக்கு ஏற்ப இன்று பார்க்கும் இடமெங்கும் அனைவரது கைகளிலும் தவழ்கின்ற ஒன்றாய் இணையம் திகழ்கின்றது. கலியுகமானது கணினியுகமாகி விட்டது . கணினியின் பயன்பாடு இல்லாத துறையே இல்லை என்று குறிப்பிடலாம் .  தமிழ் மொழியும் கணினி வளர்ச்சியில் தன்னை வளர்த்துக் கொண்டது. தமிழ்மொழி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை ஒவ்வொரு வகையில் மெருகேற்றிக் கொண்டு வளர்ந்து வருகின்றது . கணினி உலகிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்துக் கொண்டுள்ளது. கணினிப் பயன்பாட்டில் ஒன்றான இணைய இதழ்களிலும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது . தற்போது தமிழ் இணையதளங்கள் எழுபதாயிரத்திற்கும் மேல் உள்ளன . ஏன் இலட்சத்தைத் தாண்டியிருந்தால் கூட வியப்பதற்கில்லை என்கின்றனர் இணைய ஆய்வாளர்கள் .

கணினியிலும் இணையத்திலும் தமிழ்:
இணையத்தின் பயன்பாடு தொடங்கியபின், இணையத்திற்குத் தமிழைக் கொண்டு செல்லவும் பகிர்ந்துகொள்ளவும், தமிழ் எழுத்துருக்கள் பல வல்லுநர்களால் உருவாக்கப்பட்டன. ஒருவர் எழுதிய பந்தியை, அவர் அதை எழுதுவதற்கு பயன்படுத்திய அதே எழுத்துருவை மற்றவர் தன்னுடைய கணினியில் பதித்தால்தான் அந்த பத்தியைத் திறந்து வாசிக்க முடியும் என்ற நிலை மாறி, இன்று ஒருங்குறியீட்டில் எழுதியவற்றை எந்தக் கணினியிலும் மற்றவர்கள் வாசிக்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. தமிழில் எழுதுவதற்கென்று சொற்செயலிகள் (Word processors), பிழை திருத்திகள் என்று பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதவும், மறு ஆய்வு செய்து அவற்றை திருத்துதலும், மாற்றி அமைத்தலும் எளிய செயல்களாக ஆகிவிட்டன.

மின்-நூல்கள் (e-book)
மின்-நூல் என்பது அச்சிடப்பட்ட/அச்சுக்கேற்ற நூலின் மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பாகும். கணினி, பலகைக் கணினி (tablet), திறன்பேசி (smartphone) முதலான கருவிகளின் வாசிக்கத்தக்கதாய் எண்ணிம (Digital) முறையில் உருவாக்கப் பட்டிருக்கும். இவ்வகை மின்-நூல்கள், பொதுவாக மின்-நூல் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை பல்வேறு அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. கோப்பு வடிவம் மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றும் வெவ்வேறு (file format) பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
  • PDF Book – மின்-நூல்                                 
  • Mobi      - கிண்டில் நூல்
  • HTML Book – மீயுரை நூல்                    
  • Epub – மென்னூல்
  • Flip Book – புரட்டும் நூல்  

இணைய நூல்கள்:
பொதுவாக நாம் இணையத்தில் காணும் நூல்கள் PDF (Portable Document Format) வடிவத்தில் இருக்கும். பழைய அச்சு நூல்களை அப்படியே ஸ்கேன் செய்து கணினி, பலகைக் கணினி, மற்றும் திறன்பேசிகளில் பயன்படுத்தும்போது அவை PDF வடிவத்தில் இருக்கும். இவ்வகை மின்-நூல்களை உருவாக்குவது எளிது. நாம் அச்சில் உருவாக்கும் நூல்களில் எழுத்து மற்றும் படங்களை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் சிலவகை மின்-நூல்களில் (epub, mobi) அசையும் படங்கள் மற்றும் ஒளி-ஒலிக் கோப்புகளையும் இணைக்க முடியும். மீயுரை நூல்களில் ஒருபக்கத்திலிருந்து வேறு ஒரு பக்கத்திற்கு அதன் மீயுரைகளைச் சுட்டியால் தட்டுவதன் மூலம் செல்ல முடியும். புரட்டும் நூல்களில் அச்சு நூல்களைப் புரட்டுவது போன்ற அனுபவத்தைப் பெறமுடியும். மென்னூல்கள் கணினி வாசிப்புக்கென்றே உருவாக்கப்பட்டவை, இவ்வகை நூல்களில் எழுத்து மற்றும் படங்களைப் பெரிதாக்கவோ சிறியதாக்கவோ முடிவதோடு நூலின் அமைப்பையும் நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளமுடியும். கிண்டில் நூல்கள் அமேசான் கிண்டில் சாதனங்களில் பயன்படுத்து வதற்காக என்றே உருவாக்கப்படுபவை. இவ்வாறு மின்-நூல்களின் ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியான சிறப்பம்சங்கள் உண்டு.

இணைய இலக்கியம்:
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைவர் கு. கல்யாண சுந்தரம் என்பவரும் துணைத் தலைவராக அமெரிக்காவில் உள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். இந்நூலகத்தில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள், படைப்புகள், உரைநூல்கள் சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பு கூறாகக் குறிப்பிடத்தக்கது யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அட்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருச் சிக்கல் இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது இம் மின்-நூலகம் தமிழ்.நெட் இணைய தளத்துடன் இணைந்து செயல்படுகிறது. மின்-நூல்களை PDF கோப்புகளாகவும், Unicode, TSCII எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் இத்தளத்தில் கிடைக்கின்றது.

மதுரைத் திட்டம்:
மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. https://www.projectmadurai.org/index.utf8.html  என்ற இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான்.  இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

சென்னை லைப்ரரி:
அடுத்து சென்னை லைப்ரரி என்ற தளம் குறிக்கத்தக்கது ஆகும். சிறுகதைகள், நாவல்கள் முதலியனவற்றைப் படிப்பதற்கு இந்தத்தளம் உதவுகின்றது. குறிப்பாக சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியங்கள் போன்றனவும் இத்தளத்தில் கிடைக்கின்றன. கம்பராமாயணம் முழுவதும் இதனுள் கிடைக்கின்றது. பெரும்பாலும் இணையத்தில் தற்போது மூல நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. உரை நூல்கள் கிடைப்பதில்லை. கல்கியின் நாவல்கள், புதுமைப்பித்தன் கதைகள், ஜெயகாந்தன் படைப்புகள் போன்றவற்றை இதனுள் பெற இயலும்.

தமிழ் இலக்கியப் பாடல்கள்:
தமிழ் இலக்கியப் பாடல்களைத் தக்க இசையோடு பல இணையதளங்கள் தருகின்றன. இசைத்தமிழை வளர்க்கும் இனிய பணி இதுவாகும். முருகன் குறித்த தமிழ் இலக்கியப் பாடல்களைக் கேட்க வேண்டுமானால் கௌமாரம்.காம் செல்ல வேண்டும். தமிழ் மரபு இசை மாறாமல் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இதில் கேட்டு ரசிக்கலாம். பன்னிரு திருமுறைகளையும் மரபு இசையுடன் தேவாரம்.காம் என்பதில் கேட்டு ரசிக்க முடியும். ஓதுவார்.காம் என்பது தமிழக இசைவாணர்களான புகழ்பெற்ற ஓதுவார்களின் இசைவடிவங்களை இணைத்துத் தரும் தளமாகும். இதுபோன்று ஆழ்வார் பாசுரங்கள் https://www.raaga.com/tamil-ta/album/aazhwargal- pasuram-songs-TD00671 என்ற தளத்தின் வாயிலாகக் கேட்க முடியும்.

முடிவுரை:
மொத்தத்தில் உலக அளவில் தமிழின் தரத்தை உயர்த்த இணையத்தமிழ் உதவி வருகின்றது. இதனைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை அனைத்து தமிழ் இணையப் பக்கங்களுக்கும் உண்டு.

சான்றாண்மை:
  • https://www.chennailibrary.com/ebooks/ebooks.html
  • https://www.projectmadurai.org/index.utf8.html
  • https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141

Author
கட்டுரையாளர்

சு.ராஜா

முனைவர் பட்ட ஆய்வாளர்.,

தமிழ் உயராய்வு மையம்

அமெரிக்கன் கல்லூரி மதுரை.