தமிழ் மொழி வளர்ச்சியில் கணிணித்தொழில் நுட்பங்கள்
நெறியாளர் முனைவர். ச. மாசிலாதேவி & ஞா.யோசுவா
ஜி.டி.என்,கலைக்கல்லூரி(தன்னாட்சி)
திண்டுக்கல்.
Summary
ஆறறிவு படைத்த மனிதர்களின் படைப்புகள் பல் துறைகளில் நாளும் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் மற்றுமொரு படைப்பாய் வீறு கொண்டு வளர்ந்து வருகிறது செயற்கை நுண்ணறிவு. உணர்ச்சியில் ஆறறிவும், செயற்கை நுண்ணறிவும் வேறுபட்டு இருந்தாலும் அவை இரண்டும் ஆற்றும் பணி ஒன்று தான். ஆனால் மனிதர்கள் ஆற்றிவரும் பணி அனைத்தையும் செயற்கை நுண்ணறிவால் செய்துவிட முடியாது. சில சமயங்களில் செயற்கை நுண்ணறிவின் பணி அறிவுசார்ந்து இருந்தாலும் அவை மனித நுண்ணறிவுக்கு இணையாக இருந்துவிட முடியாது.
குறிப்பாக கற்பித்தல் பணியில் செயற்கை நுண்ணறிவின் பணி மகத்தானதாக உள்ளது. தமிழ் கற்றல் கற்பித்தலில் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் பலவாகும். மாணவர்களிடம் கற்றலை எளிமையாக்கவும், மேம்படுத்தவும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதாகிறது. இன்றைய மாணவர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.பலர் சிறந்த தேர்ச்சிப் பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள். அதனால் அவர்களிடம் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தமிழைக் கற்பிக்கும் போது கற்றல் எளிமையாகிறது, இனிமையாகிறது.
மேலும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு பாடங்களைக் கற்க இச்சாதனங்கள் பயனளிக்கின்றன. இத்தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் மனவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உறவுப் பலமாகிறது. எனவே, தமிழ்வளர்ச்சியில் கணிணி தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.