தமிழ் மொழிகற்றல் கற்பித்தலில் இணையத்தின் பங்கு

முனைவர் க.சித்ரா

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் மானுவியல் புலம்,

ராமாபுரம்,

சென்னை

Summary

அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்பாடு அதிகரித்து வரும் தற்காலத்தில் கணினியில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகம் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. கணித்தமிழ் வளர்ச்சியை இரண்டு நிலைகளில் மேற்கொள்ளலாம். ஒன்று கணினியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது; மற்றொன்று கணினித் தொழில்நுட்பம் வாயிலாக மொழியை உலக அளவில் கொண்டு செல்வது. பன்னெடுங்காலமாக வழக்கில் நிலைத்துள்ள ஒரு மொழியைப் பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளையும் பதிவு செய்யவும் அனைவருக்கும் கொண்டு செல்லவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்தரங்குகள், பயிலரங்குகள், மொழி மாநாடுகள், நூல் பதிவுகள் எனப் பல வழிகளில் மொழிப்பணிகள் நடைபெற்றாலும் கணினி வழியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெருவீச்சில் பயனளிக்கின்றன. ஒலி-ஒளிக் காட்சிகளாக புகைப்படங்களாக என கற்பித்தல் முறை நவீன செயல்பாடுகளுக்கு மாறி வருகின்றது. இந்நிலையில் தமிழ் மொழி கற்றலில் இணையம் எவ்வகையில் பயன்தருகின்றது என்பதை மூன்று நிலைகளில் பகுத்தறிய முடிகிறது.தமிழ் இணையக்கல்விக் கழகம்,Centre of Lannguage and Culture learming,அவ்வை தமிழ் மையம் இணையம் வாயிலாகத் தமிழ்மொழியை உலகத் தமிழர்களுக்குக் கொண்டு செல்லும் தளங்களாகச் செயலாற்றுகின்றன. தமிழம்.நெட் தமிழ்க்களம்.இன், பள்ளிக்கல்வி.இன், தமிழமுதம்.காம், தமிழ் ட்யூட்டர்.காம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ilearn Tamil – அடிப்படைத் தமிழ் மொழி கற்க இத்தளம் மிகச்சிறந்த தளமாக அமைகின்றது. Multibhashi – தமிழ் உட்பட பன்மொழிகளைக் கற்க இத்தளம் உதவுகின்றது. நேரடியாகத் தமிழ் மொழிப்பணியில் இயங்கும் தளங்கள் மட்டுமின்றி மொழிபெயர்ப்பு (Translator), எழுத்து மாற்றி(converter) உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் தளங்களும் குறிப்பிடத்தக்கவை. தமிழ் மொழி வளர்ச்சியில் இணைய நூலகங்களின் பங்கு இன்றியமையாதது. தமிழ்மொழியின் இலக்கிய வளம், தமிழ்மக்களின் அறிவார்ந்த சிந்தனைகள், பண்பாட்டுப்பதிவுகள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அறிய நூல்கள் வழிவகுக்கின்றன. மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்,தமிழிணையக்கல்விக் கழகத்தின் தமிழிணையம் (மின்னூலகம்), மதுரை மின்னூலகம் (திறந்த வாசிப்பகம்) உள்ளிட்டவை தமிழ் நூல் பணியில் பங்காற்றும் தளங்களாக அமைகின்றன. மொழியிலேயே இயங்கும் தளங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. தமிழ் விசைப்பலகைகள் மிகக் குறைவாகவே செயல்படுகின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் ‘கீழடி’ என்ற விசைப்பலகை தற்போது அறிமுகமாகியுள்ளது. இது போன்ற முயற்சியில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாகும்.

முன்னுரை :

தமிழ் மொழி தொன்மை என்ற  சிறப்பை மட்டுமின்றி நவீன வளர்ச்சிக்கு ஏற்ப கணித்தமிழ் என்ற சிறப்பும் கொண்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்பாடு அதிகரித்து வரும் தற்காலத்தில் கணினியில் தமிழ் மொழிப் பயன்பாட்டை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. கணித்தமிழ் வளர்ச்சியை இரண்டு நிலைகளில் மேற்கொள்ளலாம். ஒன்று கணினியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது; மற்றொன்று   கணினித் தொழில்நுட்பம்  வாயிலாக மொழியை உலக அளவில் கொண்டு செல்வது. “எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே” என்ற தொடருக்கேற்ப உலக அளவில் தமிழைப் பரப்பும்  முயற்சி தற்காலத்தின் மொழித்தேவையாக அமைகின்றது. தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமின்றி பிற மொழி பேசும் உலக மக்களிடமும் தமிழ் மொழியைக் கொண்டு சேர்க்க கணினித் தொழில்நுட்பம் உதவுகின்றது. இந்நிலையில் தமிழ் மொழியை எங்கெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முனைப்பு செலுத்தி வரும் தளங்களை இக்கட்டுரை விவரிக்கிறது.

மொழி கற்றலில் இணையம் :

காலந்தோறும் கல்வி முறை பல மாற்றங்களைச் சந்திக்கிறது. தமிழ் மொழிக்கல்வியைப் பொறுத்த வரை சங்ககாலக் கல்வி முறை தொடங்கி இணையக்கல்வி வரை கற்றல் முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. கொரோனா போன்ற பேரிடர்க் காலங்களில் இணைய வழிக்கல்வி முறை மிக இன்றியமையாத தேவையாக இருந்ததை அனைவரும் அறிவர். இன்று நேரடி வகுப்புகளிலும் இணையத்தின் பயன்பாடு புதிய கற்பித்தல் முயற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒலி-ஒளிக் காட்சிகளாக புகைப்படங்களாக என  கற்பித்தல் முறை நவீன செயல்பாடுகளுக்கு மாறி வருகின்றது. இந்நிலையில் தமிழ் மொழி கற்றலில் இணையம் எவ்வகையில் பயன்தருகின்றது என்பதை  மூன்று நிலைகளில் பகுத்தறிய முடிகிறது.

  • தமிழ் மொழி கற்பிக்கும் தளங்கள்
  • மொழியைப் பயன்படுத்தும் தளங்கள்
  • மொழி சார்ந்த தரவுகளை அளிக்கும் தளங்கள்

தமிழ் மொழி கற்பித்தல் தளங்கள் :

            தமிழ் மொழி செவ்வியல் மொழி. தொன்மையான, தனித்துவமான மொழி. அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர் மட்டுமல்லாது வேற்று மொழியாளர்களும் கற்க விரும்புகின்றனர். தமிழை நிர்வாக மொழியாகக் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக உள்ளது. பன்னெடுங்காலமாக வழக்கில் நிலைத்துள்ள ஒரு மொழியைப் பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளையும் பதிவு செய்யவும் அனைவருக்கும் கொண்டு செல்லவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கருத்தரங்குகள், பயிலரங்குகள், மொழி மாநாடுகள், நூல் பதிவுகள் எனப் பல வழிகளில் மொழிப்பணிகள் நடைபெற்றாலும் கணினி வழியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெருவீச்சில் பயனளிக்கின்றன. கணினி உலகமயமான தொழில்நுட்பம் என்பதால் உலக அளவில் ஒரு முயற்சியை வெற்றி பெறச்செய்ய அதனைச் சிறந்த கருவியாகப் பயன்படுத்த இயலும். அவ்வகையில் தமிழ் மொழி சார்ந்து இயங்கும் ஒரு சில தளங்களையும் அவற்றின் செயல்பாட்டையும் பற்றிக் காணலாம். 

Centre of Lannguage and Culture learming:

தமிழ் மொழியைக் கலாச்சாரத்துடன் இணைத்து பயிற்றுவிக்கும் தளமாக இத்தளம் விளங்குகிறது. அடிப்படைத் தமிழ் எழுத்துகள், இலக்கணம் ஆகியவை இத்தளத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அடிப்படைத் தமிழ் புத்தக வடிவில் ஒவ்வொரு நிலையாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. எழுத்து வடிவத்தை விட பேச்சுமொழிக்கு இத்தளம் முக்கியத்துவம் அளிக்கிறது. முன்னிலை நபருடன் பேசும் அறிமுக வார்த்தைகள்(Oral Talk) உறவுமுறைச்சொறகள் , பழமொழி சார்ந்த சொல்லாடல்கள், ஒருவரை விளிக்கும் சொற்கள் (Addressing Terms) பேச்சு வழக்குகள் அடுக்குத்தொடர்கள்(Extended words) வழிபாட்டுச்சொற்கள், தயங்கிப் பேசும் வழக்குகள் (வந்து, இல்ல, உம்ம்) உடல் சார்ந்த வழக்காடல்கள்(புரையேறுதல், விக்கல், தும்மல், வயிற்றுவலி) அதன் பின் உள்ள நம்பிக்கைகள் ஆகியவை இத்தளத்தில் விளக்கப்பட்டுள்ளன.தமிழ்மொழி வழக்கில் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழியின் தாக்கம் இத்தளத்தில் விளக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியை முதன்முதலாகக் கற்கும் ஒருவர் அனைத்து வகையான தமிழர் வாழ்வியல் தொடர்பான சொல்லாடல் முறைகளை எதிர்கொள்ள இத்தளம் பயிற்றுவிக்கிறது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத அனைவருக்கும் இத்தளம் மிகவும் பயனுள்ள தளமாகும்.

அவ்வை தமிழ் மையம் :

தமிழ்ப்புத்தகங்கள் (தமிழ்நாட்டுப் பாடத்தி;ட்டம், சிங்கப்பூர், அமெரிக்க நாட்டுப்பாடத்திட்டங்கள் தொடர்பான அனைத்து நூல்களும் இத்தளத்தில் உள்ளன. கதைநூல்கள் , இலக்கிய நூல்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. தமிழ்ப்பாடங்களும் இணைய வழியில் கற்றுத்தரப்படுகின்றது.  சிறப்பம்சமாக தமிழ் மொழி தொடர்பான அனைத்து மொழிக்கருவிகளும் இத்தளத்தில் உள்ளன.

  • வாணி – பிழை திருத்தி
  • நாவி – சந்திப்பிழை திருத்தி
  • ஓவன் – ஒருங்குறி மாற்றி
  • சுளகு – எழுத்தாய்வுக்கருவி
  • வாணி – தொகுப்பகராதி (தமிழ் எழுத்துருக்களின் தொகுப்பு)

இக்கருவிகள் யாவும் தமிழ் மொழியை இணையத்தில் பிழையின்றிக் கையாள உதவுகின்றது.

தமிழ் இணையக்கல்விக் கழகம்

எண்ணற்ற தமிழ்ச்சேவைகளைத் தரும் மிகச்சிறந்த வலைதளம் தமிழ் இணையக்கல்விகழகம். கல்வித்திட்டங்கள், நூலகம், கணித்தமிழ், ஆய்வு மற்றும் உருவாக்கம், தகவலாற்றுப்படை ஆகிய பிரிவுகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது இத்தளம். கணித்தமிழ் என்ற பிரிவில் வலைப்பூக்கள், கட்டற்ற மென்பொருள் அகராதி, தமிழ் மென்பொருள் உருவாக்கம், உள்ளிட்ட பல கணினித்தமிழ் சேவைகளை வழங்குகிறது. கீழடி என்ற பெயரில் தமிழ் விசைப்பலகை, தமிழ் ஒருங்குறி (Unicode) எழுத்துருக்கள், மருதம், எழில், கம்பர், காவேரி உள்ளிட்ட தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் இத்தளத்தில் பயன்படுத்தக் கிடைக்கின்றன.  செம்மொழித்தமிழ் மத்திய நிறுவனத்தில் இணையவழிச் செம்மொழித் தமிழ் என்ற தளம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் தமிழ் தொடபான ஐந்து பட்டய வகுப்புகள் இணைய வழியில் நடத்தப்படுகின்றன. கல்வெட்டியல், சுவடியியல், தொல்லியல், கட்டடக்கலை,சிற்பக்கலை,ஓவியக்கலை,நாணவியல் ஆகிய வகுப்புகள் ஆண்டு முழுவதும் ஒளிப்படக்காட்சிகளாகக் கற்றுத்தரப்படுகின்றன.

மேலும் இத்தளத்தில் மொழி கற்பித்தல் முயற்சியாக மழலைக்கல்வி என்ற பிரிவில் அடிப்படைத் தமிழ் மொழி இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. கதை, உரையாடல்கள் ஒலி, ஒளி மற்றும் படக்காட்சிகள் மூலம் எளிமையாக தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழ் மொழி கற்றல் தளங்கள் :

இணையம் வாயிலாகத் தமிழ்மொழியை உலகத் தமிழர்களுக்குக் கொண்டு செல்லும் தளங்களாகச் சில முக்கிய தளங்கள் செயலாற்றுகின்றன. அத்தகைய ஒரு சில தளங்களாக தமிழம்.நெட் தமிழ்க்களம்.இன், பள்ளிக்கல்வி.இன், தமிழமுதம்.காம், தமிழ் ட்யூட்டர்.காம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

ilearn Tamil – இணையம் வாயிலாக தமிழ் பயிற்றுவிக்கும் தளம். அடிப்படைத் தமிழ் மொழி கற்க இத்தளம் மிகச்சிறந்த தளமாக அமைகின்றது.

Multibhashi – தமிழ் உட்பட பன்மொழிகளைக் கற்க இத்தளம் உதவுகின்றது.     

ilanguages.org (தமிழ் மொழியின் சொற்கள், தொடர்கள், இலக்கணம், வினாடிவினா, ஃபிளாஷ் கார்ட்ஸ் )

wikiPedia – wki How – அடிப்படைத் தமிழ்  மொழியைக் கற்பிக்கும் தளம்.  எழுத்துகள் முதல் சொல், தொடரமைப்புகள், பேச்சு வழக்குகளைக் கற்க இத்தளம் உதவுகின்றது.

உலக மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்புக்கான செயலிகள் :

தமிழ் மொழியை Duolingo (40 மொழிகள் ) Babbel- Drops   (50 மொழிகள்)  Mondly ( 41 மொழிகள் ) – Memrise (23 மொழிகள்) Busuu (16 மொழிகள்) Lirica( Linguitics Based Learning), Primsleur (பேச்சு மொழிக்கான செயலி) Rosetta stone (25 மொழிகள்) Ling, Cudoo, Tandem , Brain scape ஆகிய செயலிகள் இணைய வழியில் உலக மொழிகளைக் கற்க உதவுகின்றன.

            நேரடியாகத் தமிழ் மொழிப்பணியில் இயங்கும் தளங்கள் மட்டுமின்றி மொழிபெயர்ப்பு (Translator), எழுத்து மாற்றி(converter) உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் தளங்களும் குறிப்பிடத்தக்கவை. அவ்வகையில் கணினியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆங்கிலமொழியிலிருந்து தமிழ்மொழிக்குத் தரவுகளை  மாற்றிக்கொள்ள உதவும் சில தளங்கள் மற்றும் செயலிகள் உள்ளன. இணையவழியில் ஆங்கில மொழியிலிருந்து தமிழ்மொழிக்கு மாற்ற உதவும் தளமாக Google converter தளம் இயங்குகிறது. Lingvanex என்ற தளம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய உதவுகின்றது. தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறி எழுத்துருக்களாக மாற்றப் பல மொழிக் கருவிகள் பயன்படுகின்றன. அழகி, ஓவன்(Oovan) ஆகிய ஒருங்குறி மாற்றிகள் மிகச் சிறப்பாகப் பயன்தருகின்றன.

பென்சில்வேனியா – பல்கலை – இணையத்தமிழ்:

தமிழ் மொழியைக்கற்பிக்கும் மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஒன்று . அடிப்படைத் தமிழ், இடைநிலைத்தமிழ், மேல்நிலைத்தமிழ் என மூன்று நிலைகளில் தமிழ் மொழி கற்றுத்தரப்படுகின்றது. தமிழ் மொழியைப்பற்றியும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் தெளிவாக இத்தளம் விளக்குகிறது. ஒலி ஒளிக்காட்சிகளாக இத்தளத்தில் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. ஆங்கில மொழி வாயிலாகத் தமிழ்மொழியைப் பயிற்றுவிக்கும் தளமாகும்.

இணைய நூலகங்கள் :

            தமிழ்  மொழி வளர்ச்சியில் இணைய நூலகங்களின்  பங்கு இன்றியமையாதது. தமிழ்மொழியின் இலக்கிய வளம், தமிழ்மக்களின் அறிவார்ந்த சிந்தனைகள், பண்பாட்டுப்பதிவுகள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அறிய நூல்கள் வழிவகுக்கின்றன. நூல்களுக்காக எங்கெங்கோ பயணம் செய்ய வேண்டிய தேவை  தற்போது குறைந்து வருகின்றது. சங்க நூல்கள் முதல் பல அரிய ஓலைச்சுவடிகள் வரை தற்போது இணையத்திலேயே கிடைக்கின்றன. தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளும் சிந்தனைகளும் வளர இவ்விணைய நூலகங்கள் பேருதவியாக உள்ளன. அவ்வகையில் தமிழ் நூல்களை மென்பதிவுகளாகத் தரும் சில முக்கிய இணைய தளங்கள் பற்றி இப்பகுதியில் காணலாம். 

1.தமிழிணையக்கல்விக் கழகத்தின் தமிழிணையம் (மின்னூலகம்)

அரிய தமிழ் நூல்கள் (20291),நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் (3230),  தமிழ் நாட்டுப் பாடநூல்(1174) , ஆய்விதழ்கள் (456), இதழ்கள்(13959), ஓலைச்சுவடிகள்(3739), ஆவணங்கள்  ஆகிய நூல்கள் இத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பெருமளவில் பயன்படும் சிறந்த தளமாக இயங்குகின்றது.

2.மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்:

            சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், பக்தி நூலகள், காப்பியங்கள், திறனாய்வு நூல்கள் புதினங்கள், தற்காலப் படைப்புகள் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்நூல்கள் இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல்களை ஆங்கிலத்திலும் தமிழ் மொழியிலும் படிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் இத்தளம் பயன்படுகின்றது. தொடர்ந்து இயங்கி வரும் தளமாக இத்தளம் விளங்குகின்றது.           

3.மதுரை மின்னூலகம் (திறந்த வாசிப்பகம்) :

            தற்கால இலக்கியப்;படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் நூலகம். தற்கால எழுத்தாளர்களின் படைப்புகள், திறனாய்வுகள் உள்ளிட்ட சமகாலப் படைப்புகள் இத்தளத்தில் கிடைக்கின்றன.

4.தமிழ்நாடு மின்னூலகம் :

      தமிழ் மற்றும் பிற துறை சார்ந்த மின் நூல்கள், மின் இதழ்கள்,  ஒலி- ஒளிக் காட்சிகள், பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்ட ஆய்வேடுகள் உள்ளிட்டவை இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

5.பாவேந்தர் நூலகம் :

            செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அங்கமாகச் செயல்படும் இந்நூலகத்தில்

நாற்பத்தொரு செவ்வியல் நூல்கள் மின்னூலாகக் கிடைக்கின்றன.

இணைய தமிழ் நூலகம் – சென்னை நூலகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எண்ணிம நூலகம் (மின் நூல்கள், மின் இதழ்கள் நாளிதழ்கள், ஆய்வு நூல்கள், மொழியியல் தொடர்பான நூல்கள் உள்ளிட்டவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.) ஆகியவை தமிழ் நூல் பணியில் ஈடுபடும் தளங்களாக உள்ளன. மேலும் விக்கிபீடியாவின் நூலகம் (Wiki- Noolaham) தமிழ் எலெக்டரானிக் நூலகம், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundaion)- இங்கிலாந்தில் உள்ள தமிழ் மரபு தொடர்பான நூல்கள் மின்னூலாக்கம் செய்யப்பட்டு பொதுமக்களுக்காக இத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. ) தமிழ் மில்லர் நினைவு நூலகம்  கல்வி எக்ஸ்பிரஸ் (8600 –அரிய தமிழ் மின்னூல்கள்) உள்ளிட்டவை தமிழ் நூல் பணியில் பங்காற்றும் தளங்களாக அமைகின்றன.

            இணையத்தில் தமிழ் நூல் வெளியிட தற்போது பல செயலிகள் இயங்கி வருகின்றன. அமேசான் கிண்டில், ஆப்ஸ் பிரெயின், நாவல்ஸ் தமிழ், அலமாரி உள்ளிட்ட பல செயலிகள் தமிழ் நூல்களை வாசிக்கத் துணை செய் தளங்களாக விளங்குகின்றன.          

            கணினித்தமிழ் வளர்ச்சிக்கும்  தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும்  தமிழ்ப்பாடத்தை எங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சி மிக அடிப்படையான ஒன்று. அவ்வகையில் தமிழ் மொழிப் பணியில்  இத்தளங்கள்,செயலிகள் பங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்மொழி வழி இயங்கும் தளங்கள் :                                                        

அறிவியல் , மருத்துவம், வானியல், பொருளியல், தொழில்நுட்பம்  உள்ளிட்ட எத்துறை சார்ந்த அறிவாயினும் மொழி வாயிலாகவே பகிரப்படுகிறது. ஆகையால் கல்வியில் மொழி மிக இன்றியமையா இடம் வகுக்கிறது.  எத்துறைசார் அறிவாயினும் கல்வியில் தாய்மொழியின் பங்கு மிக மிக இன்றியமையாதது. தாய் மொழியில் கற்கும் போது புரிதலும் சிந்தனையும் மேம்படுகிறது. ஆகையால் தாய்மொழி வழிக் கல்வியை அனைவரும் வரவேற்கின்றனர். இந்நிலையில் உலக அளவில் பரவியுள்ள தமிழர்கள் தாய்மொழி வழியான தகவல் தொடர்புக்கு முன்னுரிமை தர வேண்டியதும் அவசியம்.  அறிவார்ந்த சிந்தனைகளையும் தமிழில் கொண்டு வந்து சேர்க்க கணினித் தொழில்நுட்பம் களம் அமைத்துக் கொடுக்கிறது. கணினியில் தமிழும் தமிழ் வழியில் கணினியும் என இருநிலைகளில் கணித்தமிழ் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழ் மொழி கற்றல், கற்பித்தல் தளங்கள் ஆங்கிலத்தையே மொழி ஊடகமாகக் கொண்டுள்ளன. தமிழ் மொழியிலேயே இயங்கும் தளங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. தமிழ் விசைப்பலகைகள் மிகக் குறைவாகவே செயல்படுகின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் ‘கீழடி’ என்ற விசைப்பலகை தற்போது அறிமுகமாகியுள்ளது. இது போன்ற முயற்சியில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாகும்.     

முடிவுரை :

            கணித்தமிழ் வளர்ச்சியில் மொழிப்பணி ஆற்றும் தளங்கள் குறித்தும் அவற்றிடையே உள்ள செயல்பாட்டுத்தன்மைகள் குறித்தும் ஆராய்கையில் அவற்றின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இத்தளங்களின் செயல்பாட்டில் அடிப்படைத் தமிழ் கற்றல், கற்பித்தல் நிலை உள்ளது. ஆராய்ச்சிகள், இலக்கியப் பணிகள், தொழில் நுட்ப முன்னெடுப்புகள்; இவற்றிலும் தமிழ் மொழியைக் கொண்டு வருவது மிக அவசியம். எத்தகைய உலக மாற்றங்களிலும் தாய்மொழியை முன்னிறுத்தித் தாய்மொழி வழி இயங்கும் சீனா போன்ற நாடுகள் போல தமிழகமும் கணினியில் தமிழ் வழி இயங்க வேண்டும். 

பார்வை நூல்கள்- தளங்கள் :

  1. இணையமும் தமிழும் – முனைவர் துரை மணிகண்டன்- கௌதம் பதிப்பகம்- 2009
  2. Tamil Virtual Academy – https://www.tamivu.org

தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்- முனைவர் துரை மணிகண்டன்-கமலினி பதிப்பகம் -2012

Author
கட்டுரையாளர்

முனைவர் க.சித்ரா

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் மானுவியல் புலம்,

ராமாபுரம்,

சென்னை