தமிழ்ப்பணியாற்றும் குறுஞ்செயலிகள்

போ.சக்தி மாரீஸ்வரி

இளங்கலை இரண்டாமாண்டு விலங்கியல்

சைவபானு சத்திரிய கல்லூரி,

அருப்புக்கோட்டை 626101.

Summary

சராசரி ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கிறார்; சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.' என்று வில்லியம் ஆலபர்ட் உன்னத ஆசிரியனுக்கு இருக்கும் திறனை எடுத்துக்காட்டியுள்ளார். அன்று தொழில்நுட்ப அறிவைப்பெற்ற ஆசிரியர் இத்தகு உயிரோட்டமிகு பாடத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர். இவ்வகையில் கற்றல் - கற்பித்தல் குறுஞ்செயலிகள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அலைபேசியில் குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டு இவ்வுலகம் முழுதையும் ஆட்டிவைக்கிறது எனலாம். தமிழில் பல குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் அவை நமக்கு இலவசமாகக் கிடைக்கும் வகையில் தொண்டாற்றி வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தம் தாய்மொழியாம் தமிழைத் தனது சந்ததியினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேரவாவில் பல தமிழ்க் குறுஞ்செயலிகளைப் பயன்படுத்தியும் உருவாக்கியும் வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாட்டு வகுப்பறைகளில் தமிழ்க் குறுஞ்செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ககூட், தமிழ் 101, மழலைத்தமிழ், பேபி ஸ்லேட் தமிழ், கிட்ஸ் மீடியா தமிழ், மூடுல்ஸ், அரேஸ்மா, ராக்மேன், பாலமுருகன், தமிழ் கொட்ஸ், தமிழ் நூலகம், தமிழ்க் காப்பியம், தேவாரம், கவிஞர்கள், சங்கம் போன்ற எண்ணற்ற குறுஞ்செயலிகள் உலக அளவில் தமிழ்மொழியை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில குறுஞ்செயலிகளின் பணிகள் மட்டும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்:

கூகுள் பிளே ஸ்டோர், குறுஞ்செயலிகள்

The average teacher teaches the subject; the best teacher teaches with practical examples. The great teacher makes it lively.' William Albert has highlighted the ability of a great teacher. At that time, the teacher who had acquired technical knowledge taught this lively subject to the students. In this way, learning-teaching appss have gained great popularity worldwide. Appss have been created on mobile phones and are ruling the entire world. Many apps have been created in Tamil and are being made available to us for free on the Google Play Store. The Tamil diaspora has been using and creating many Tamil apps in the hope that their descendants should learn their mother tongue, Tamil;. Tamil apps are widely used in classrooms in countries like Singapore and Malaysia, where a large number of Tamils ​​live. Numerous micro-enterprises like Kakut, Tamil 101, Mazhalaithamizh, Baby Slate Tamil, Kids Media Tamil, Moodles, Aresma, Rockman, Balamurugan, Tamil Quotes, Tamil Library, Tamil Kappiyam, Thevaram, Kavinnarkar, Sangam etc. have been created with the aim of promoting the Tamil language globally. The work of only a few of them is explained in this article.

Key Words : Google Play Store, Apps

முன்னுரை:
உலகத்தழிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை இணையம் மேற்கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இணையத்தின் சேவை மிகவும் தேவையாக உள்ளது. 
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
 வழுவல கால வகையினானே”
என்னும் நன்னூல் நூற்பாவிற்கேற்ப காலம் செல்லச் செல்ல புதியவற்றை ஏற்றுக்பொண்டு மாற்றத்தின் மூலம் வளர்ச்சியடைய முடியும் என்பதை இன்றைய இணைய வளர்ச்சி உறுதி செய்துள்ளது. கூகுள் இணைய தேடுதளத்தின் வழியே கூகுள் கடையின் (Play Store) மூலம் உருவாக்கப்பட்டுள்ள தழிழ்க் குறுஞ்செயலிகள் பல சிறந்தமுறையில் தமிழ்ப்பணியாற்றி வருகின்றன. மொழி கற்பித்தல், அகராதிகள், சமையல் மற்றும் மருத்துவக் குறிப்புகள், விளையாட்டுகள், சோதிடம், விஞ்ஞானம், வானியல் எனப் பலவகைகளில் இக்குறுஞ்செயலிகள் பயன்பட்டு வருகின்றன.  
 
குறுஞ்செயலி– விளக்கம்:
கையடக்கக் கணினிகளிலும் செல்பேசிகளிலும் பயன்படுத்தப்படும் மென்பொருளையே ‘குறுஞ்செயலிகள்’ என்று அழைக்கலாம். மேலும் நவீன தொலைபேசிகளில் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்து முடிக்க மனிதர்களால் பல கட்டளைகளைப் பிறப்பித்து உருவாக்கப்படும் நிரல் தொகுப்பு ‘குறுஞ்செயலி’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘Apps’ என்று அழைப்பர். கணினியில் பல செயல்களைச் செய்யும் செயலிகளை மென்பொருள் என்றும் குறுகிய நிலையில் செய்யக் கூடியதைக் குறுஞ்செயலி என்றும் கூறப்படுகின்றது. பலவிதமான விளையாட்டுகள் மற்றும் முகநூல், கட்செவி போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கும் அதிகமான மக்கள் இன்று இந்தக் குறுஞ்செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். (15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டு மலர் – 2016)

கஹூட்!  (Kahoot !) செயலி:
“கஹூட்! 2012 இல் ஜோஹன் பிராண்ட், ஜேமி ப்ரூக்கர் மற்றும் மோர்டன் வெர்ஸ்விக் ஆகியோரால் நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கூட்டுத் திட்டத்தில் நிறுவப்பட்டது. பேராசிரியர் ஆல்ஃப் இங்கே வாங் உடன் இணைந்து இதனை நிறுவினர். பின்னர் நோர்வே தொழிலதிபர் ஆஸ்மண்ட் ஃபுருசெத் அவர்களுடன் இணைந்தார். கஹூட்! மார்ச் 2013 இல் SXSWedu இல் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கான இதன் சோதனைப் பதிப்பு செப்டம்பர் 2013 இல் வெளியிடப்பட்டது. விளையாட்டின் முடிவில், மேடைப் பீடத்தில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்தவர்கள் இயங்குபடம் மூலமாக சிறப்பிக்கப்படுவார்கள். பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் கஹூட்டை மதிப்பிடலாம்.” (விக்கிபீடியா)
கஹூட்! என்பது விளையாட்டு முறையில் கற்றல் - கற்பித்தலை மேற்கொள்ளும் ஒரு செயலியாகும். வினாடி-வினா மற்றும் கலந்துரையாடலை மையப்படுத்தி இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இச்செயலியானது, கற்றல் கற்பித்தலின்போது மாணவர்கள் பெற்ற அறிவினை வினாடி-வினா மற்றும் கலந்துரையாடல் மூலம் சோதிக்கும் கருவியாக அமைந்துள்ளது. மாணவர்கள் இருந்த இடத்திலேயே தங்களின் அதிவேக கைபேசி அல்லது தட்டைக்கணினியில் கஹூட்!மூலமாக ஆசிரியர் வழங்கும் வினாக்களுக்கு விடையளித்து தங்களது மதிப்பெண்களைப் பெறலாம். இது முழுக்க முழுக்க விளையாட்டினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் அவர்களின் அகத்தூண்டலை மேம்படுத்தி அவர்களின் கற்றல் மீதான கவனத்தை மேலும் ஊக்குவிக்கிறது. மேலும் வகுப்பறையில் ஆசிரியர் மாணவரிடையே மகிழ்ச்சியான கற்றல் கற்பித்தல் சூழல் உருவாகிறது. இதன்காரணமாகவே உலகளாவிய நிலையில் பல்வேறு ஆசிரியர்களால் கஹூட்! செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஐகுறள்  (iKural)  செயலி:
இக்குறுஞ்செயலியை வடிவமைத்தவர் திரு அரவிந்த் என்பவர். இச்செயலியில் ஒவ்வொரு குறளுக்கும் மிகத் தெளிவான முறையில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. மணக்குடவர், பரிமேலழகர், மு.வரதராசனார்,கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோரின் உரைகளும் ஜி.யு.போப் அவர்களின் உரை மொழிபெயர்ப்புடன் அமைந்துள்ளது. உலகப்பொதுமறைக்குக் கிடைத்த புதிய வரவேற்பு இக்குறுஞ்செயலி எனலாம். பழைய உரையாசிரியர்களின் உரைகளோடு புதிய உரையாசிரியர்களின் உரைகளைப் பொருத்திப் பார்க்கவும்இச்செயலி பயன்படுகிறது. அமைதியின்றி அல்லல்படும் மக்களுக்கு மன அமைதியைக் கொடுத்து நல்வழிப்படுத்துவது திருக்குறள். இக்குறள் கருத்துக்களை உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் மக்கள் அனைவரும் துய்த்து இன்புறும் வகையில் இக்குறுஞ்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. (Google Pay Store)

மழலைத்தமிழ் செயலி:
மழலைத்தமிழ் செயலியானது ‘Magic Box Animation’ என்ற நிறுவனத்தின் செயலியாகும். தமிழ்மொழி உச்சரிப்போடு எழுதும் பயிற்சியை இந்தச்செயலி உள்ளடக்கியுள்ளது. மேலும் வரிசையாக வரிவடிவம் கொண்டு எழுதும் பயிற்சியும் நான்கு கோட்டில் எழுதும் பயிற்சியும் இந்தச்செயலியில் காணப்படுகிறது. குறிப்பிட்ட பயிற்சிகள் மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்குமேல் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும். (Google Pay Store)

சங்கம் செயலி:
 சங்கம் செயலி ‘Melio Systems’ நிறுவனத்தின் செயலியாகும். இந்தச்செயலி இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களை உச்சரிக்க, எழுதும்முறைகளைக் கற்றறியஒரு பகுதியும் கற்றறிந்தவற்றைச் சோதிக்க வினாவிடை, தேர்வு என மற்றொரு பகுதியும் அமைந்துள்ளது. முற்றிலும் இலவசமான இந்தச்செயலி மாணவர்களின் புரிதலுக்கும் பயிற்சிக்கும் பெரும் பயனாக அமைந்துள்ளது. (Google Pay Store)

தமிழக் காப்பியம் (Tamil Epics) செயலி:
ஒளவையாரின் ஆத்திசூடி தொடங்கி சிலப்பதிகாரம், பாரதிதாசன் படைப்புகள், கல்கியின் பொன்னியின் செல்வன், திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் போன்ற காலத்தால் அழியாத தமிழ்ப் படைப்புகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மதுரைத் திட்டத்தில் (Project Madurai) இருக்கும் ஒருசில மின்னூல்களை இதில் இணைத்துள்ளார்கள். இந்தச்செயலியில் உள்ள மின்னூல்கள் அனைத்தையும் மற்றவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பமுடியும். திரையில் படித்துக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தினால் நாம் எந்தப்பக்கத்தில் இடையில் நிறுத்தினோம் என்பதைக் குறித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. மற்ற தமிழ்க் குறுஞ்செயலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (Google Pay Store)

தமிழ் 101 செயலி:
 தமிழ் 101 என்ற இந்தச்செயலி சிவகுமார் லோகநாதன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. முற்றிலும் இலவசமான இந்தச் செயலி மாணவர்கள் எழுத்துக்களைக் கேட்டு எழுத உதவும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றுவிதமான பயிற்சிகள் உள்ளன. அவை சுலபமான பயிற்சி, இயல்பான பயிற்சி, சுதந்திரப்பயிற்சி என்பவையாகும். சுலபமான பயிற்சியில் உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களைவுயும் எழுதிப் பழகலாம். தூரிகை ஒன்று வழங்கப்படடிருக்கும். பிடித்த வண்ணத்தைத் தேர்வு செய்து கொடுக்கப்பட்ட எழுத்தைக் கைச்சுட்டியைப் பயன்படுத்தி எழுதலாம். மாணவர்களின் வேகத்தின் அடிப்படையிலும் அவர்கள் எழுதும் முறையின் அடிப்படையிலும் புள்ளிகள் வழங்கப்படும். இயல்பான பயிற்சியில் எழுதிப்பழகும் முறை சற்று துல்லிதமாக இருக்கும். மேலும் இந்தச்செயலியில் ஒவ்வொரு எழுத்தும் எழுதத் தொடங்குமுன் அந்த எழுத்து உச்சரிக்கப்புடும். இதனால் மாணவர்கள் எழுத்துக்களை அறிந்து கொள்வதோடு முறையாக வரிவடிவத்தில் எழுதும் பயிற்சியையும் பெறுகிறார்கள். சுதந்திரப் பயிற்சியில் எந்த வழிகாட்டலும் வழங்கப்பட்டிருக்காது. மாணவர்கள் சுதந்திரமாக வரைந்து பழகத் துணையாக இருக்கும். அதுமட்டுமின்றி சுலபமான பயிற்சியிலும் இயல்பான பயிற்சியிலும் பழகியதை மதிப்பிடவும் இந்த சுதந்திரப் பயிற்சி துணைபுரியும். (தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், துரைமணிகண்டன், கமலினி  பதிப்பகம்.)

Learn Tamil Writing செயலி:
Learn Tamil Writing செயலி ‘Wagmop’ நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு  மேம்படுத்தப்பட்டது. இந்தச்செயலியை இலவசமாக பயன்னடுத்தலாம். இந்தச்செயலியில் பிடித்த வண்ணத்தில் தூரிகையைத் தேர்வுசெய்து எழுதலாம். தமிழ் 101 செயலியைப்போல் துல்லிதமான முறையில வழிகாட்டி வரையவைக்கும்ஆற்றல் இச்செயலிக்கு இல்லையென்றாலும் எழுத்துக்களை எழுதும்முறை வரிசைகரமாக அமைக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களை உச்சரிக்கும் அமைப்பு இச்செயலியிலும் உள்ளது. (Google Pay Store)

தமிழ்க் கவிஞர்கள் (Tamil Poets Bio)
Tamil Poets Bio என்ற தமிழ்க் குறுஞ்செயலி அகத்தியர், நக்கீரர், ஒட்டக்கூத்தர்,கம்பர், சேக்கிழார், சிவப்பிரகாச சுவாமிகள், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், சுப்ரமணியசிவா, திரு.வி.கலியாணசுந்தரனார்,கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், புதுமைப்பித்தன், செய்குதம்பிபாவலர்,கண்ணதாசன், வாலி,வைரமுத்து ஆகியோரின் சுயவிபரக் குறிப்புகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. (Google Pay Store)

தமிழ்நூலகம் (Tamil Library):

Tamil Library என்னும் இக்குறுஞ்செயலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் நூல்கள் மின்னூல்களாக உள்ளன. இதில் இடம்பெற்றுள்ள மின்புத்தகங்கள் பல 100 முதல் 400 பக்கங்கள் வரை உள்ளன. இந்நூல்களைத் தரவிறக்கம் செய்து படிக்கும் விதத்தில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. (Google Pay Store)

இன்னும் பிற குறுஞ்செயலிகள்:
  • தமிழ் காலண்டர்: தமிழ் மாதங்களின் நாள்காட்டியாக இச்செயலி விளங்குகிறது.
  • தமிழ் எஸ்.எம்.எஸ்.: தமிழில் குறுந்தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இந்தச் செயலி வழங்குகிறது.
  • தமிழ் யோசி: இது விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள் மற்றும் பாடல்களைத் தமிழில் வழங்குகிறது.
  • டி.என்.பி.எஸ்.சி தமிழ்: தமிழ்நாடு பொதுத்துறை மற்றும்  அரசு துறைசார்ந்த தேர்வு குறித்த பல தகவல்கள் மற்றும் பாடங்களை வழங்குகிறது.
  • தமிழ் கீபோர்டு: இந்தச்செயலி ஆண்டிராய்டு கருவிகளில் தமிழில் தட்டச்சு செய்ய பயன்படுகிறது.
  • ஆல் தமிழ்: இது தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆண்டிராய்டு கருவிகளில் பார்க்க வழிவகுக்கின்றது.
  • சித்தா மெடிசின் இன் தமிழ்: இந்தச்செயலி எளிய சித்தமருத்துவ முறைகளை  ஆண்டிராய்டு கருவிகளில் வழங்குகிறது.
  • தமிழ் குறிப்புகள்: எளிய வீட்டு உபயோகம், சமையல், மருத்துவம் எனப் பல பயன்மிக்க குறிப்புகளை இச்செயலி வழங்குகிறது. இதுபோல் இன்னும் ஏராளமான தமிழ்க் குறுஞ்செயலிகள் செவ்வனே தமிழ்ப்பணியாற்றி வருகின்றன. 

முடிவுரை:
உலகம் ஊடகத்துறையில் உன்னதத்தைத் தொட்டுவிட்டது. கையடக்கக் கணினிகள் இன்றைய மாந்தரின் மாற்று உறுப்பாய் மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் பெரும்பான்மையானோர் நுண்ணறிவுத் திறன்வாய்ந்த கைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் குறுஞ்செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.  ஆங்கில வழிக் கல்வி அதிகரித்து வரும் இன்றைய சூழலில் தமிழ் மொழியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை உண்டாக்கவும் இது போன்ற குறுஞ்செயலிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. தமிழில் உள்ள அனைத்து வகையான நூல்களையும் குறுஞ்செயலிகள் வடிவில் பதிவேற்றம் செய்துவிட்டால் எதிர்காலச் சந்நதியினருக்கு தமிழில் உள்ள அரிய நூல்கள் பலவும் எளிமையாகக் கிடைக்கும்.

பார்வை நூல்கள் :
  1. 15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டு மலர் – 2016.
  2. விக்கிபீடியா (Wiki Pedia).
  3. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store).
  4. தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், துரைமணிகண்டன், கமலினி  பதிப்பகம்.  

Author
கட்டுரையாளர்

போ.சக்தி மாரீஸ்வரி

இளங்கலை இரண்டாமாண்டு விலங்கியல்

சைவபானு சத்திரிய கல்லூரி,

அருப்புக்கோட்டை 626101.