தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழ் மென்பொருள்களின் பங்கு

முனைவர் த.சங்கரன்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

சத்ய சாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,

பாசார், வேப்பூர், கடலூர் மாவட்டம்.

Summary

While the Tamil language was a classical language with a rich variety of art, music and drama, Now a days fourth Tamil has emerged and is growing and developing the Tamil language. Today Kaninthamil is emerging and growing as the fourth Tamil. It is no exaggeration to say that today scientific discovery is developing not only human life but also language. Tamil has reached various stages of development like Tamil application software, Tamil Mobile Application in computer since the introduction of Tamil font in the computer. This article explains the development achieved through Tamil software in Tamil language.

Keywords: Software, Application Software, Tamil Font, Tamil Software, Tamil Keyboard, Mobile Application)

ஆய்வுச்சுருக்கம்:

தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வகைமையைக் கொண்ட செவ்வியல் மொழியாக விளங்கிவந்த நிலையில் இன்று நான்காவதாக ஒரு தமிழ் உருபெற்று வளர்ந்து தமிழ் மொழியை வளர்த்து வருகின்றது. இன்று கணினித்தமிழ் நான்காம் தமிழாக உருபெற்று வளர்ந்து வருகின்றது. இன்று அறிவியல் கண்டுபிடிப்பு மனிதவாழ்வினை மட்டும் அல்லாமல் மொழியையும் வளர்த்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. கணினியில் தமிழ் எழுத்துரு உள்ளீடு செய்யப்பட்ட முதல் இன்று கணினியில் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள், தமிழ் இலக்கண இலக்கிய மென்பொருள்கள், இணையப்பயன்பாடுகள், தமிழ் குறுஞ்செயலிகள் என தமிழ்மொழி பல்வேறு வளர்ச்சிநிலைகளை அடைந்துள்ளது. தமிழ்மொழி தமிழ் மென்பொருள்கள் மூலம் அடைந்துள்ள வளர்ச்சியை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

குறிச்சொற்கள்: மென்பொருள், பயன்பாட்டு மென்பொருள், தமிழ் எழுத்துருக்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் விசைப்பலகை, குறுஞ்செயலிகள்)

முன்னுரை:
 இன்றைய  காலகட்டத்தில் கணினி, இணையம், அலைபேசி ஆகியவை தகவல் தொழில்நுட்ப உலகில் பல்வேறுபட்ட மென்பொருள்களைத் தமிழ்மொழிக்கென உருவாக்கியுள்ளன.  கணினித்தமிழின் வளர்நிலைக்கு அடித்தளமாக விளங்குகின்ற மென்பொருள்கள் தமிழைக் கணினியில் உள்ளீடு செய்தல், தமிழ் இயக்க முறைமைகள், அதற்கான தட்டச்சு இயக்க முறைகள், விசைப்பலகைகள், எழுதிகள், எழுத்துரு மாற்றிகள் போன்ற பல்வேறு நிலைகளில் கணினியில் தமிழ்ப்பயன்பாட்டை வலுப்படுத்துவதாக அமைகின்றன.  கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை வலுப்படுத்தும் பயன்பாட்டு மென்பெருள்கள், தமிழ் இலக்கியங்களை கணினியில் பயன்படுத்தும் இலக்கண இலக்கிய மென்பொருள்கள், மேலும் இன்று அலைபேசியில் பயன்படுத்ப்படும் தமிழ் குறுஞ்செயலிகள் போன்ற மென்பொருள்கள் மூலம் தமிழ்மொழி அடையும் வளர்ச்சியைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

தமிழ் மென்பொருள்கள்
கணினித்தமிழ் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்து வந்தது.  ஆனால் இணையத்தில் பயன்பாடு வந்த பின்புதான் மென்பொருள்களின் தேவையும் அதிகரித்தது,  தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்தது.

 “தமிழின் எதிர்கால வளர்ச்சிக்குக் கணினித்தமிழ் மென்பொருள்கள் எப்படியெல்லலாம் சாத்தியமாகக் கூடும் என்று சிந்தித்துப் பார்த்தால் தளம் விரிந்து கொண்டே செல்கிறது.  இன்றைக்கு இணையத்தில் இருக்கக்கூடிய வலைதளங்களும், வலைப்பூக்களும், குழுமங்களும் தனிப்பக்கங்களுமே இதற்கு சாட்சியாக நிற்கின்றன.  இணையக் குழுக்கள் ஆரோக்கியமான விவாதங்களைத் தமிழிலேயே மேற்கொள்வதற்கு இத்தமிழ் மென்பொருள்கள் பேருதவியாகச் செயல்படுகின்றன. காலத்தைத் தாண்டியிருப்பதே ஒருவகையில் தமிழ் வளர்ச்சி மென்பொருளின் பயன் என்று தான் சொல்ல வேண்டும்.”1 இங்கு தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் மென்பொருள்களை மூன்று வகையாக பிரித்துக்கூறலாம்.
  • தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள்
  • தமிழ் இலக்கண மற்றும் இலக்கிய மென்பொருள்கள்
  • தமிழ் குறுஞ்செயலிகள்
  • தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள்
தமிழ்மொழி பயன்பாட்டிற்கு உதவும் மென்பொருள்கள் கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில் மென்பொருள்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.  அத்தகைய தமிழ் மென்பொருள்களை ஏழு வகையாகக் வகைப்படுத்தலாம்.  அவை
  • தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்
  • எழுத்துரு குறியீட்டு மென்பொருள்கள்
  • பிழை திருத்தி மென்பொருள்கள்
  • சந்திப்பிழை திருத்தி மென்பொருள்கள்
  • ஒளியுறு எழுத்துக்குறி – உணர்வு மென்பொருள்கள்
  • உரையிலிருந்து பேச்சு – மாற்றி மென்பொருள்கள்
  • இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள்

தொடக்கத்தில் கணினியில் தமிழைப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட எழுத்துருவில் தொடங்கி பின்னர் கணினியில் தமிழ் பயன்பாடு உருவான பிறகு மேற்கண்ட ஏழுவகையான தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இவை தமிழ் மொழியை பல்வேறு முறைகளில் கணினியில் பயன்படுத்த உருவாக்கப்பட்டவையாகும்.  தமிழ் அறிந்தவர்கள் மட்டும் அல்லாது புதியதாக தமிழ் கற்பவர்களும் இதன் மூலம் எளிமையாக கணினியில் தமிழைப்பயன்படுத்த முடிகின்றது. இதன்மூலம் தமிழ்மொழி கணினியின் மூலம் பல்வேறு நாட்டினரும் தம்கருத்தினை படைப்பினைப் கணினியின் மூலம் பலரும் அறிந்து கொள்ளச்செய்ய முடிகின்றது.

தமிழில் வெளிவந்துள்ள சில பயன்பாட்டு மென்பொருள்கள்
  • சென்னையில் உள்ள வள்ளி மென்பொருள் நிறுவனத்தினர் 2000ஆம் ஆண்டு ‘கதம்பம்’ என்னும் தமிழ் பயன்பாட்டு மென்பொருளை வெளியிட்டனர்.
  • சென்னையில் உள்ள பனேசியா என்ற மென்பொருள் நிறுவனம் இதுவரை பதினொன்று இலவச தமிழ் மென்பொருள்களை ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழுடன் வெளியிட்டது.  
  • பெங்களூரைச் சேர்ந்த ‘சாஃப்ட்வேர் ரிசர்ச் குரூப்’ என்ற நிறுவனம் ‘டாஸ்’ இயங்குதளத்தில் இயங்கக் கூடிய ‘பாரதி தமிழ் சொற்செயலி’யை வெளியிட்டது.  தமிழில் வெளிவந்த முதல் தமிழ் சொற்செயலி இதுவாகும்.
  • சென்னையிலுள்ள ‘சாஃப்ட்வீயூ’ நிறுவனம் ‘அமுதம்’ என்ற மென்பொருளை தயாரித்து வெளியிட்டது.  தமிழ்நாடு அரசால் தரப்பட்டுள்ள தமிழ் 99 விசைப்பலகை அச்சுமுறையை இம்மென்பொருள் கொண்டுள்ளது.
  • இயக்க முறைமையின் ஆணைகள், பட்டியல்கள் ஆகியன தமிழில் தெரியும் பொருட்டு உருவாக்கப்பட்ட மென்பொருள் ‘இதம் 2000’ என்பதாகும்.
  • 2005ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் மொழி வளர்ச்சித்துறையும், தமிழ்நாடு அரசும் இணைந்து ‘தமிழ் மென்பொருள் கருவிகள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டனர். இதில் தமிழில் கணினியைப் பயன்படுத்தும் மென்பொருள்களும், 250 தமிழ் எழுத்துருக்களும், விசைப்பலகை இயக்கிகளும் அடங்கியுள்ளன.
  • மும்பை சி.கே. டேக்னாலஜி நிறுவனத்தால் நவம்பர் 2010ஆம் ஆண்டு ‘சக்தி ஆபீஸ்’ என்னும் மென்பொருள் வெளியிடப்பட்டது. மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் உள்ளதைப்போன்று அனைத்தும் ஆனால் தமிழில் வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும்.
  • இவற்றைப்போன்று  ‘எழுத்தாணி’, ‘தமிழ் தட்டச்சுத் துணைவன்’ போன்ற மென்பொருள்களும் வெளிவந்து இன்றளவும் தமிழர்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

தமிழ் இலக்கண, இலக்கிய மென்பொருள்கள்:
கணினியில் தமிழ்ப்பயன்பாடு உருவான பிறகு அதிக அளவில் படைப்புகள் கணினியின் மூலம் உருவாக்கப்பட்டன.  ஏட்டளவில் இருந்த தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கணினியின் உதவியால் இலக்கியங்கள் மின் நூல்களாக உருவாக்கப்ட்டன. மிகத்தொன்மையான சங்க இலக்கியங்கள் முதல் இன்றையவைர பல்வேறு இலக்கியங்கள் மென்பொருள்களாக உருவாக்கப்பட்டுள்ளன. 
இலக்கிய மென்பொருள்கள் மூலம் உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் கற்கும் ஆர்வலர்களுக்கும் கிடைக்காத தொன்மையான இலக்கண மற்றும் இலக்கியங்களை எளிமையாக கற்கவும் கிடைக்கவும் வகை செய்துள்ளது. மேலும், மின் வடிவில் நூல்கள் கிடைப்பதால் எளிமையாக கற்கவும் தேவையான தகவல்களை தேடிப் படிக்கவும், பல்வேறு கோணங்களில் நூல்களின் பயன்பாடினைப் பெறவு இந்த இலக்கண இலக்கிய மென்பொருள்கள் பயன்படுகின்றன.
தமிழில் வெளிவந்துள்ள சில இலக்கண, இலக்கிய மென்பொருள்களின் பட்டியல்
  • குறளமுதம்
  • இலக்கணம் கற்போம்
  • திருக்குறள்
  • ஆத்திசூடி
  • புதிய ஆத்திசூடி
  • தமிழ் இலக்கணம்
  • அவலோகிதம்(யாப்பு மென்பொருள்)
  • தமிழ் கற்போம் (மொழி பயிற்சி)
  • திருக்குறள் உரைகள்

தமிழ் குறுஞ்செயலிகள்:
“கையடக்கக் கணினிகளிலும் செல்பேசிகளிலும் பயன்படுத்தப்படும் சிறிய மென்பொருளையே குறுஞ்செயலிகள் என்று அழைக்கலாம். மேலும் நவீனத் தொலைபேசிகளில் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்துமுடிக்க மனிதர்களால் பல கட்டளைகளைப் பிறப்பித்து உருவாக்கப்படும் நிரல் தொகுப்பை குறுஞ்செயலி என்று அழைக்கப்படுகிறது. கணினியில் பல செயல்களைச் செய்யும் செயலிகளை, மென்பொருள் என்றும், குறுகிய நிலையில் செய்யக்கூடியதை குறுஞ்செயலி என்றும் வழங்கப்படுகிறது.

அலைபேசியில் குறுஞ்செயலிகளை அதிகமாக மக்கள் பயன்படுத்தியதால் அதிகமான மென்பொருள் நிறுவனங்கள் குறுஞ்செயலிகளை உருவாக்கி தம் நிறுவனத்தின் இணையதளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் வழங்கியுள்ளன.  இந்த வரிசையில் அலைபேசியில் எல்லா மொழிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகமாக தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழைத் தட்டச்சு செய்யும் வகையில் தவறில்லால்  தமிழ் தட்டச்சு செய்யும் வகையிலும், தட்டச்சு செய்யும் போது  சொற்களைப் பரிந்துறைக்கும் வகையிலும், தட்டச்சு செய்யாமல் கையால் எழுதுவதை எழுத்துக்களாக மாற்றித் தரும் வகையிலும் முதலில் குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டன.  தமிழைத் தட்டச்சு செய்ய எழுத்தாணி, எளிமைத்தமிழ் தட்டச்சு, தமிழ் தட்டச்சு போன்ற பல்வேறு குறுஞ்செயலிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன, எனினும் செல்லினம், பொன்மொழி போன்றவை அதிகமகா பயன்படுத்தப்படுகின்றன.  இதுவரை தமிழில் வெளியான  குறுஞ்செயலிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
  • தமிழ் தட்டச்சு குறுஞ்செயலிகள்
  • தமிழ் கற்றல் கற்பித்தல் குறுஞ்செயலிகள்
  • தமிழ் இலக்கண குறுஞ்செயலிகள்
  • தமிழ் இலக்கிய குறுஞ்செயலிகள்

தமிழ் குறுஞ்செயலிகளின் சிறப்புகள்:
  • தற்காலத்தில் கையடக்கக் கணினி, அலைபேசி ஆகியவை உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடத்தில் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.
  • உலகில் பல்வேறு இடங்களில் உள்ள வேறு மொழி பேசும் மக்களும் தமிழ் மொழியைக் கற்க ‘தமிழ் கற்றல் கற்பித்தல்’ குறுஞ்செயலிகள் பயன்படுகின்றன.
  • அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க இவ்வகை தமிழ் கற்பித்தல்  மென்பொருள்கள் உதவுகின்றன.
  • ஏட்டளவில் இருந்த இலக்கியங்களை எளிமையாக்கியது கணினித்தமிழ் ஆகும்.
  • கணினி அனைவரின் கையிலும் இருப்பதில்லை ஆனால் அலைபேசி இன்று அனைவரின் கையிலும் உள்ளதால் இலக்கியங்கள் மென்பொருள் வடிவில் இருப்பதைவிட குறுஞ்செயலி வடிவில் உருவாகி அனைவரின் கையிலும் பயன்பட உதவியுள்ளது.
  • தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்து சிறப்புற்று விளங்க இத்தகைய மென்பொருள்களும் குறுஞ்செயலிகளும் சிறப்பாக பங்காற்றுகின்றன.
  • தமிழ் இலக்கியங்களை கைக்குள் அடக்கி வைத்துக்கொள்ளும் அளவிற்கு அறிவியல் தொழில் நுட்பம் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்துள்ளது.
  • அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் முத்தமிழைத் தொடர்ந்து நான்காம் தமிழான கணினித்தமிழ் வளர்ச்சியடைந்து தமிழ்மொழியையும் வளர்ச்சியடையச் செய்துள்ளது.

முடிவுரை:
கணினித்தமிழ் என்பது முதலில் கணினியில் தமிழ் எழுத்துக்களை கணினியின் திரையில் காண்பிப்பதுடன் துவங்கியது.  பிறகு தமிழ் மென்பொருளாக வளர்ந்து இன்று குறுஞ்செயலியாக வளர்ச்சியடைந்துள்ளது. கணினித்தமிழின் வளர்நிலைக்கு அடித்தளமாக அமைகின்ற மென்பொருள்கள் கணினியில் தமிழ் உள்ளீடு, இயக்க முறைகளில் தமிழ் இடம், தமிழ்த் தட்டச்சுமுறைகள், குறியீட்டுமுறைகள், எழுதிகள் மற்றும் எழுத்துருமாற்றிகளின் பயன்பாடு, மொழிபெயர்ப்பு ஆகிய கணினிசார் பயன்பாட்டிற்கு துணைசெய்வதாக அமைந்துள்ளன. கணினியில் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள் ஏழு நிலைகளில் அமைந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றது.  அதேபோன்று தமிழ் இலக்கண மற்றும் இலக்கிய மென்பொருள்கள் ஏட்டளவில் இருந்த இலக்கியங்களை மின் இலக்கியங்களாக மாற்றி பல்வேறு நாட்டினரும் பயன்படுத்த வழிவகை செய்துள்ளது. கற்றல் கற்பித்தல், தமிழ் இலக்கணம் இலக்கியம் என தமிழ் குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டு தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்துள்ளன. இன்றைய நிலையில் தமிழ் மென்பொருள்கள் மற்றும் தமிழ் குறுஞ்செயலிகள் தமிழ்மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

துணைநூற்பட்டியல்:
  1. இரா.பன்னிருகை வடிவேலன், தமிழ் மென்பொருள்கள், நோக்கு வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு 2014, ப.78
  2. https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1659:2013-08-16-03-33-06&catid=42:2011-03-23-18-25-24.
Author
கட்டுரையாளர்

முனைவர் த.சங்கரன்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

சத்ய சாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,

பாசார், வேப்பூர், கடலூர் மாவட்டம்.