தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
சு.கோபாலகிருஷ்ணன், எம்.ஏ., எம்.எட்., எம்.பில்
அரசினர் மேல்நிலைப்பள்ளி, கருவாக்குறிச்சி, மன்னார்குடி ,தாலுகா,திருவாரூர் மாவட்டம்
Summary
மனித வாழ்க்கையானது பிறந்தது முதல் கற்றலில் தொடங்கி, தொடர்ந்து பலவற்றையும் கற்று, அறிவு விரிவடைந்து கொண்டே வருகிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மனித அறிவை இயற்கை நுண்ணறிவு என்றும், மனித அறிவைப் பயன்படுத்திச் செய்யும் பணிகளைக் கணினியைச் செய்ய வைப்பது செயற்கை நுண்ணறிவு என்பதாகும். கல்வித்துறையின் பகுதிகளாகிய கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு மகத்தானதாக உள்ளது. உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாக மொழியியல் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் தமிழ்மொழி தனியிடத்தைப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் பல்வேறு இலக்கிய வகைமைகளும் மொழியின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. தமிழ் இலக்கியங்களில் இல்லாத செய்திகளே இல்லை எனலாம். செய்யுள் வடிவில் அமைந்துள்ளனவற்றை மாணவர்கள் பொருளுணர்ந்து கற்பதற்குச் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்திக் கற்பித்தலில் ஆசிரியர்கள் ஈடுபடும்போது மாணவர்களின் ஆர்வம் மிகுதியாகிறது.
முன்னுரை:
மனிதனின் படைப்பாக்கத் திறன் இயந்திரங்களின் மூலமாகச் செயல்படுத்தப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என்பதாகும். இதில் கற்றல், பகுத்தறிவு, சுயதிருத்தம் ஆகியவை அடங்கும். இதன்மூலம் மனிதர்களைப் போன்று அல்லது மனிதர்களைவிட அதிகம் சிந்திக்கும் மற்றும் செயல்படக்கூடிய அறிவுத்திறன் கொண்ட கணினிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழில்நுட்பமானது விவசாயம், மருத்துவம், கல்வி, தொழில்துறை, ரோபாட்டிக்ஸ், ஆளில்லா விமானம் ஓட்டுதல், இரானுவம் போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கல்வித்துறையில் தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி என்பதை நன்கு உணர்ந்து செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்தினால் ஆழமான கற்றல் உறுதியாகிறது. இதனைப் பயன்படுத்தி தமிழில் கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் எழுதும் பயிற்சிகள் மூலமாக மாணவர்களின் படைப்புத் திறன் அதிகமாவதுடன் சுயசிந்தனையும் வளர்கிறது. மாணவர்கள் தங்களிடமுள்ள இயல்பான இயற்கை நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள செயற்கை நுண்ணறிவைப் பக்கபலமாகப் பயன்படுத்தலாம். மாணவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை இரவு, பகல் என்றில்லாமல் எப்பொழுது வேண்டுமென்றாலும் தெளிவு பெறுவதற்குச் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் பயன்படுகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்குத் தூக்கம், இடைவேளை எடுத்தல் போன்றவை அவசியம் இல்லை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானே’ என்ற நன்னூல் பாடல் வரிகளுக்கேற்ப தமிழ்மொழியைக் கற்பிப்பதில் புதிய தொழில்நுட்பங்கள் ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு:
செயற்கை நுண்ணறிவானது கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது கற்றல் அனுபவங்களை தனிப்பயனாக்கி, ஒவ்வொரு மாணவரின் திறனுக்கேற்ப வழிகாட்டி, அவர்களின் கல்விப் பயணத்தை எளிதாக்குகிறது. மாணவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு கற்றல் முன்னேற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது. கல்வியாளர்களுக்குக் கற்பித்தல் பொருட்களை வடிவமைக்கவும், மாணவர்களைப் புதிய வழியில் ஈடுபடுத்தவும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுகின்றன. மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுத் தளங்களை எவ்வளவு பயன்படுத்தி நாம் கொடுக்கக்கூடிய செயல்திறன் நடைமுறைகளைச் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு சில செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் பயன்படுகின்றன. கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்குக் கல்வியைப் போதிக்கச் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் பேருதவியாக உள்ளது. செயற்கை நுண்ணறிவானது ஆசிரியர்கள் பிற பணிகளைச் செய்வதற்கு அதிக நேரத்தை வழங்குகிறது. கல்வி நிறுவனங்களின் நேரம், செலவை பெரிதும் குறைத்து, பணிகளின் துல்லியத்தை மேம்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ் இலக்கணம், சொற்களஞ்சியம், தொடரியல் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றின் தேர்ச்சியானது மொழியியல் புலமைக்கு அடித்தளமாக அமைகிறது.
எல்.எல்.எம்.:
எல் எல் எம் என்பது மனிதனைப் போன்ற உரையைச் செயலாக்க, புரிந்துகொள்ள மற்றும் உருவாக்க வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்பு முறைகளாகும். இணையதளங்கள், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து பில்லியன் கணக்கான சொற்களைக் கொண்டிருக்கும் அவை ஆழமான கற்றல் நுட்பங்களைக் கொண்டது. வினாக்களுக்கு விடை அளித்தல், உரை வழங்குதல், மொழிபெயர்த்தல் போன்ற பணிகளை இது செய்கிறது. எல்.எல்.எம் எவ்வளவு தரவுகளைக் கொண்டுள்ளதோ அதற்கு ஏற்பவே அதனால் துல்லியமான தகவல்களைத் தர இயலும். (பி.சிரஞ்சீவி 2025), மின்னஞ்சலில் வரக்கூடிய செய்திகளை inbox மற்றும் spam க்கு அனுப்புமாறு கணினியின் மின்னஞ்சல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதன் பணியைச் செய்கிறது. (எம்.ராஜ்குமார் B,2025)
சேட்ஜிபிடி:
சேட்ஜிபிடி என்பது தற்போது பல்வேறு துறையிலுள்ள நிபுணர்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவுத் தளமாகும். தமிழ்மொழியின் பல்வேறு பேச்சு வழக்குகளையும், சூழல்களையும் புரிந்து கொள்ளும்படியாக சேட்ஜிபிடி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் துல்லியமான மொழிபெயர்ப்புகளை வழங்குகிறது. உரைச் சுருக்கம் முதல் உரையாடல் உருவாக்கம் வரை பல்வேறு மொழிப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்கினை நரம்பியல் மொழிமாதிரிகள் நல்கியுள்ளன. மேம்படுத்தப்பட்ட மொழி மாதிரிகளின் எழுச்சியுடன் மொழித் தொழில்நுட்பக் கற்றல் என்பது வெறும் புரிதலோடு மட்டுமல்லாமல் படைப்புத் தொகுப்பாக விரிவடைந்துள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இதனைப் பயன்படுத்தி புதியதொரு உள்ளடக்கத்தை உருவாக்கவும், மொழியியல் மாறுபாடுகளை ஆராயவும் முயற்சிகள் செய்ய வழிவகை செய்கிறது. சேட்ஜிபிடியானது தொடர்ந்து புதிய தகவல்களைப் பெற்று தமிழ்மொழியின் வளர்ச்சிக்கேற்பத் தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. இதில் கேட்கப்படும் இலக்கண, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு போன்ற சந்தேகங்கள் அனைத்திற்கும் பதிலளிக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கவிதை எழுதுமாறு கூறினால் மாணவர்கள் சேட்ஜிபிடியைப் பயன்படுத்துவதைக் காண முடிகின்றது. இத் தொழில்நுட்பமானது ஒரு படத்திற்குக் கவிதை எழுத வேண்டும் எனில் எத்தனை வரிகளில் வேண்டும் என்று மாணவர்களின் விருப்பத்தைக் கேட்டு நிறைவு செய்கிறது. சேட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுத் தளமானது மிகச் சிறந்த கற்றல் கருவியாகச் செயல்படுகிறது. ஜெமினி, க்ரோக் 3 , க்ளாட், மிஸ்ட்ரல், பெர்பிளக்ஸ்டி, ரேகா போன்றவை சேட்ஜிபிடி போன்று செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் ஆகும். சில தளங்கள் தவிர பெரும்பாலும் இத்தளங்கள் அனைத்திற்கும் கட்டணம் அளிக்க வேண்டும்.
சுனோ செயற்கை நுண்ணறிவு:
சுனோ’ என்பது தமிழ்ப் பாடல்களின் வரிகளை உள்ளீடு செய்தால் வெவ்வேறு இராகங்களில் பாடல்களை உருவாக்கும் வல்லமையைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தளமாகும். மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள நீண்ட செய்யுள்களை வாசிப்பு முறையில், மனனம் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கினர். மேலும் மனனம் செய்தாலும் விரைவாக மாணவர்கள் மறந்து விடுகின்றனர். சுனோ என்னும் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் பாடலாக மாற்றப்படும்போது செய்யுளானது தெளிவான தொனியுடனும், இனிமையான இசையுடனும் மாணவர்களைக் கவர்ந்து மனனம் செய்வது மாணவர்களுக்கு எளிமையாக உள்ளது. இசை என்பது நம் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை இடம்பெறக் கூடிய கலையாகும். மாணவர்கள் திரையிசைப் பாடல்களை மனனம் செய்து பாடக்கூடிய மெட்டுக்களில் பலவித இராகங்களோடு தமிழ் செய்யுள்கள் அமையும்போது மாணவர்கள் விருப்பத்துடன் கற்பதற்குச் சுனோ செயற்கை நுண்ணறிவு துணை செய்கின்றது. ஆசிரியர்கள் செய்யுளைக் கற்பிப்பதில் இருந்த சிரமம் மிகவும் குறைந்துள்ளது.
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
நக்கீரர் இயற்றிய நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்த நெடுநல்வாடையின் இப்பாடலைச் சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மனனம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். இப் பாடல் வரிகளைச் சுமோ செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்தி சினிமாப் பாடல் மெட்டில் எனது நண்பரின் உதவியுடன் அமைத்த பின் மாணவர்கள் மிகவும் எளிமையாக மனனம் செய்தனர்.
இத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து உள்நுழைய வேண்டும். இத்தளத்தில் செய்யுள் வரிகளை உள்ளீடு செய்து எந்தப் பாடல் மெட்டில் வேண்டும் என்று கேட்டால் அமைத்துத் தருகிறது. அத்துடன் பாடலோடு video இணைத்து சின்னஞ்சிறார்களுக்கு அளிக்கும் வழிவகையும் இத்தளத்தில் உள்ளது. இத்தளத்தைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இயற்கை மொழிச் செயலாக்கம் (என்.எல்.பி):
கணினி மற்றும் மென்பொருள் அமைப்புகள் மனிதர்கள் பேசுவதையும், எழுதுவதையும் புரிந்து கொள்வதற்கும் பதிலளிப்பதற்கும் பயன்படும் செயற்கை நுண்ணறிவின் ஒரு துறையாகும். இது நாம் எழுதும்போது உள்ள எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தம் செய்கின்றது. நாம் பேசுபவனவற்றைப் புரிந்து கொண்டு எழுத்துருக்களாக மாற்றுகின்றன. ஒரு மொழியில் உள்ளீடு செய்தவற்றை மற்றொரு மொழிக்குக் கணினியின் மூலமாக மொழிபெயர்ப்பு செய்கிறது.
பேச்சு அடிப்படையிலான செயலிகள்:
இது மனிதர்களின் குரலால் உள்ளீடுகளைப் பெற்று அதனை நன்கு புரிந்து கொண்டு வேறு மொழியிலும் உரையாக மாற்றக் கூடிய செயற்கை நுண்ணறிவின் ஒரு துறையாகும். வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்பதற்கு ஆசிரியர்களைத் தேடிச் செல்லாமல் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்திக் கற்கின்றனர். காசி சங்கமம் நிகழ்வில் பாரதப் பிரதமர் ஆற்றிய உரையைச் செயற்கை நுண்ணறிவின் உதவியால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செயயப்பட்டது.
முடிவுரை:
தமிழ்மொழியின் சொல்லகராதியை இயந்திரக் கற்றல் முறையில் செயற்கை நுண்ணறிவு மாதிரிக்குப் பயிற்றுவிப்பது எளிது என்றாலும் அதன் பயன்பாடுகள், இலக்கண விதிகள் குறித்துப் பயிற்றுவிப்பது சவாலானதாகும். எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், ஒற்றுப் பிழைகள் இல்லாமல் செழுமையான தமிழ்மொழியை இணையத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் பிற்காலத் தலைமுறையினருக்குத் தமிழை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்லலாம். பழமொழிகள், சொலவடைகள், பேச்சு வழக்குகள், சூழலுக்கு ஏற்ப பொருள் தருபவை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தரவுகளை ஏற்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது குரல் உதவியாளர்கள், வரைபட வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் பரிந்துரைகள் போன்றவற்றின் மூலமாக மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டதை உணர முடிகின்றது. அலைபேசியைப் பயன்படுத்தும் ஒரு பாமர மனிதன்கூட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அறிந்துள்ளான் என்பதே உண்மையாகும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆசிரியர்களும், மாணவர்களும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் நமது தன்னேரிலாத தமிழ்மொழி மேலும் வளமடையும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கு ஆசிரியர்கள்அளிக்கக் கூடிய அறிவுசார் செயல்பாடுகள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்திச் செய்யாமல் தங்களின் மூளையைப் பயன்படுத்திச் செய்துவிட்டு மேற்கொண்டு அறிவதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது நல்லது. ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்ந்து செயற்கை நுண்ணறிவை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் போன்று புதுப்புது தொழில்நுட்பங்கள் வரும்போது அவற்றை அச்சத்துடன் அணுகாமல் பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் வாழ்க்கை வளம் பெறும். சிலவற்றைத் தவிர பெரும்பாலான செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் கட்டணம் வசூலிப்பதாக அமைந்துள்ளது. அனைத்திற்கும் அடிப்படையாக இணையம் நன்றாகச் செயல்பட்டால் மட்டுமே கணினியின் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்த இயலும்.
துணைநூல் பட்டியல்:
அறிவியல் தமிழ், 2024, ஶ்ரீகன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை - 600 001.
எம்.ராஜ்குமார் B.Tech., கணினிப் பொறியாளர், 22, 3வது தெரு, சூர்யோதயா கார்டன்ஸ், பித்ரஹல்லி, பெங்களூரு - 560 049. (அலைபேசி வழி நேர்காணல்)
பி.சிரஞ்சீவி, B.sc artificial intelligence, இரண்டாம் ஆண்டு மாணவர், 678, 2வது தெரு, திருக்குமரன் நகர், வீரப்பாண்டி, திருப்பூர் - 641 605. (அலைபேசி வழி நேர்காணல்)







