தமிழ்மொழி வளர்ச்சியில் கணினித் தொழில்நுட்பங்கள்

முனைவர் இரா.பி ரியதர்ஷினி

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

ஜி.டி.என். கலைக்கல்லூரி(தன்னாட்சி)

திண்டுக்கல்

Summary

உலக மொழிகள் பல. அவற்றுள் தனக்கென தனித்த தன்மையும் சிறப்பும் கொண்ட மொழி தமிழ்மொழி. காலத்தால் அழிக்க முடியாதது. காலந்தோறும் வளர்ச்சி கண்டு வருவது. ஒரு மொழி வளர்ச்சி அடையும் போது சமுதாயமும் வளர்ச்சி அடைகின்றது. ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலகட்டத்தில் சமுதாயத்தில் நிகழும் மாற்றங்களை ஏற்று வாழும் ஒரு கருவியாகத் திகழ்கின்றான். அவ்வகையில் தமிழ்மொழி வளர்ச்சியில் நிகழும் மாற்றங்களுக்கு உறுதுணை நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

திறவுச்சொல் : கணினித் தொழில்நுட்பங்கள் தமிழ் மென்பொருள்கள், எழுத்துருக்கள், கூகுள் சேவைகள், பிழைதிருத்திகள், தமிழ் இணையக் கல்விக்கழகம்

முன்னுரை
இயந்திர வாழ்க்கை  வாழும் மனிதன் இயந்திரத்தை நம்பி வாழத் தொடங்கி பல ஆண்டுகள் ஆயிற்று. மனிதனின்    அன்றாட  வாழ்க்கையில்  பிரிக்க  முடியாத  அங்கமாக கணினி மாறியுள்ளது.  தற்காலத்தில் தமிழ்மொழியை உலகமக்கள் அனைவரும் போற்றி, புகழ்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கணினித் தொழில்நுட்பங்களாகும். கணினியில் தமிழை நிலைநிறுத்துவதற்கு உறுதுணையாகத் திகழும் கணினித் தொழில்நுட்பங்களை அடையாளப்படுத்துவதாக  இக்கட்டுரை  அமைந்துள்ளது.

கணினியில் தமிழ்
ஆரம்பகாலத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (Operation Commands) கொண்டிருந்தன. 1980 ஆம் காலப்பகுதியில் கணினியில்  தமிழ்  தோன்றியது.   எனினும்  கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்குரிய வசதிகள் இல்லை. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை.  இந்நிலையில்   முதலில்   தமிழ்   உரையை  ரோமன்  எழுத்துகளில்  உள்ளீடு   செய்து, அதைத் தமிழ்  எழுத்துருக்களில்  மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ் மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்கு வல்லுநர்கள் பல மென்பொருள்களைக் கண்டுபிடித்தனர்.தமிழ் எழுத்துகளுக்கான எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ் மென்பொருள்கள்
 கணினியை இயக்குவதற்காக உருவாக்கப்படும் ஆணைகளின் தொகுதியை நிரல் (Program) என்கிறோம். ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்வதற்கு கணினிக்கு வழங்கப்படும் வழிமுறைகள் அல்லது  நிரல்களின்  தொகுப்பே  மென்பொருள்   (Software)  எனப்படும்.
ஆங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் ஆனால் தமிழுக்கு Typewriter, Phonetic, Translation போன்ற பல்வேறு உள்ளீட்டு முறைகள் உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு செய்ய முடியாது. ஆகவே கணினியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ்சார்ந்த கணினி வேலைகளுக்கென உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும்

தமிழ் எழுத்துருக்கள்
கணினியில் அச்சிடுவதற்கென மென்பொருள் வழி உருவாக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் எழுத்துரு எனப்படும்
தமிழில் “முதலில் தோன்றிய மென்பொருட்களில் ஓர் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும். இது 1984 இல் கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய IBM DOS 2.x இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் MS Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாக பின்னாளில் உருவாக்கம் பெற்றது.”

தமிழ் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டன. இதன் பயனாக, நேரடியாகவே தமிழைக் கணினியில் உள்ளீடு செய்யும் வசதி ஏற்பட்டது. வோர்ட், வோர்டுபெர்ஃபெக்ட், பேஜ்மேக்கர், போன்ற மென்பொருட்களில் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழில் இணையதளங்கள், வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன. அச்சில் இருந்த அனைத்தும் கணினியிலும் இடம்பெற்றன. தமிழுக்கென்று தனியே ஒருங்குறிக் குறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன. இதனால் மின்னணுச் சாதனங்களில் தமிழை உள்ளீடு செய்வதற்கான தடைகள் நீங்கின. கணிப்பொறி அன்றி கைபேசியில் கூட தமிழை உள்ளீடு செய்வதற்கான வாய்ப்பு  உருவாயிற்று.

தமிழ் இணையதளத்தில் பின்வரும் பல  எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இ.கலப்பை ஆங்கில ஒலியியல் முறை,பாமினி, தமிழ் 99, தட்டச்சு முறை, இன்ஸ்கிரிப்ட்  என்ற  ஐந்து  விதமான  எழுத்துருக்கள்  காணப்படுகின்றன.
  • மென்தமிழ் தமிழ் ஆவணங்களை உருவாக்கி, அவற்றின் மொழி அமைப்பைச் சீரமைத்துப் பதிப்பிக்கும் அனைத்துக் கருவிகளையும் கொண்ட எழுத்துரு.
  • NHM எழுதி - கூகுள் குரோம், நெருப்புநரி(Firefox), ஒபேரா போன்ற இயங்குதளத்திலும்  இவ்வமைப்பு  பயன்படுகின்றது. சாதாரண விசைப்பலகை, தமிழ் 99, தமிழ் ஒலியியல் முறை, பழைய  தட்டச்சு  எழுத்துரு,பாமினி,தமிழ்  இன்ஸ்கிரிப்ட் முறை எழுத்துரு வசதி இதில் உள்ளது. இதனை இணையத்திலிருந்து இலவச மென்பொருளாகப் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • செல்லினம்  -   தமிழ் ஒருங்குறி, தமிழ் 99, சுயதிருத்த வசதி, ஆண்ட்ராய்டு போன்ற வசதிகளைக் கொண்டது.
  • பொன்மடல்    -    ஒருங்குறி, டேம், டேப், பாமினி, ஒலிமாற்றம், தமிழ் 99, சுயதிருத்த வசதி, ஆண்ட்ராய்டு போன்ற வசதிகளைக் கொண்டது.
  • அழகி –     ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் எழுத்துருவை காணலாம்.
  • ஸ்ரீலிபி –   தமிழ் ஒருங்கறி, தமிழ் 99, தட்டச்சு முறை போன்ற எழுத்துருக்களில் பயன்படுத்தலாம்.
  • கம்பன் - விசைப்பலகையுடன் கூடிய ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை டேம், டேப் போன்றவற்றிற்கு உரு மாற்றி போன்ற எழுத்துருக்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • குறள் தமிழ்ச் செயலி - வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. ஒருங்குறி, டேம், டேப், போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம்.

மைக்ரோசாப்ட் மொழிபெயர்ப்பாளர் (MICROSOFT TRANSLATOR)
மைக்ரோசாப்ட் நிறுவனம் இயந்திரத்தின் வழி உலக மொழிகளை அவரவர் சொந்த மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் சிறந்த சேவையாகும். 60திற்கும் மேற்பட்ட உலக மொழிகளை இந்த  சேவை மொழிபெயர்ப்பு செய்கின்றது. உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு பேசப்படும் மொழியை நாம் அறிந்திருக்கும் மொழி மூலம் இதனால் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். 

சான்றாக நாம் எகிப்து நாட்டிற்குச் செல்லும் போது அங்குள்ள மக்களால் பேசப்படும் அரபிக் மொழி அறிந்திருந்தால் மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யமுடியும். அரபிக் மொழி தெரியவில்லை என்றால் நாம் கூற விரும்பும் கருத்துக்களைப் பிறருக்கு எடுத்துக்கூறுவது சவாலானச் செயலாக மாறும். இந்த இடர்பாட்டை மைக்ரோசாப்ட் மொழிபெயர்ப்பாளர் சேவை சரிசெய்கின்றது. இந்த சேவை மூலம் நாம் அறிந்த தமிழ்மொழியை உள்ளீடு செய்கையில் அது அரபிக் மொழியாக மொழிபெயர்க்கப்படும். அதேபோல் அரபிக் மொழியை உள்ளீடு செய்தால் அதைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். கணினி அன்றி கைபேசி மூலமாகவும் எளிதாக இந்த சேவையை அனைவரும் பயன்படுத்தலாம்.

ஒரு மொழியை நன்றாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் தெரியாத மாணவர்கள், காது கேளாத மாணவர்கள், பிற மொழி பேசும் மாணவர்கள் போன்றவர்கள் எளிதாக கல்வி கற்கும் நோக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சேவை மைக்ரோசாப்ட் கல்விக்கான மொழிபெயர்ப்பாளராகும் (Microsoft Translator for Education). இதேபோல் வணிக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சேவை மைக்ரோசாப்ட் வணிகத்திற்கான மொழிபெயர்ப்பாளர் சேவை (Microsoft Translator for Business) எனலாம்.
கல்வி, வணிகம், நிறுவனங்கள் என அனைத்து தர மக்களும் வேறுபாடின்றி இலகுவாக கணினிப் பயன்பாட்டை பெற தன் சேவைகளின் வழி இந்நிறுவனம் துணைநிற்கின்றது.

தமிழ் பிழைதிருத்திகள்
கணினியில் ஆங்கில மொழிக்கென பிழைதிருத்தி, சொல் திருத்தி இருப்பதைப் போல் தமிழில் ஏற்படும் பிழைகளைத் திருத்தும் வகையில்  பல மென்பொருள்கள்  உருவாக்கப்பட்டன.

நாவி
தமிழில் ஏற்படும் சந்திப்பிழைகளைத் திருத்துவதற்காக நீச்சல்காரன் என்பவரால் 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மென்பொருள் நாவி என்னும் பிழை திருத்தியாகும். ஒருங்குறியில் அமைந்த நம் கருத்துக்களை உள்ளீடு செய்து பின் “ஆய்வு செய்” என்பதை அழுத்தியதும் நாம் இட்ட உள்ளீட்டில் காணப்படும் சந்திப்பிழைகள், மரபுப்பிழைகளை வேறு வேறு வண்ணங்களில்  நமக்கு அடையாளப்படுத்துகின்றது.
 
வாணி
தமிழில் ஒற்றுப்பிழைகளோடு எழுத்துப்பிழைகளைச் சரிசெய்வதற்காக நீச்சல்காரன் என்பவரால் 2015ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மென்பொருள் வாணி என்னும் பிழைதிருத்தி ஆகும். 

அம்மா மென்பொருள்
தெய்வசுந்தரம் என்பவர் வடிவமைத்துள்ள அம்மா மென்பொருள் (மென்தமிழ் சொல்லாளர்) சிறந்த சொற்செயலியாகச் செயல்படுகின்றது. தமிழ் தட்டச்சு விசைப்பலகை, ஒருங்குறி எழுத்துக்கள், சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி எனப் பல்வெறு அம்சங்களைக் கொண்டது. 2017ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இம்மென்பொருள் வழங்கப்பட உள்ளது என்று கூறி  தமிழக முதல்வர்  மென்பொருளுக்கான  குறுந்தகட்டை வெளியிட்டார்.

பேச்சி
மலையாளக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து கொடுப்பது பேச்சி என்னும் மொழிபெயர்ப்புக்கருவி. இது தமிழ், மலையாள மொழி இலக்கண அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். “எதிர்காலத்தில் பேச்சியை எல்லா இந்திய மொழிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு நுட்பத்தை பன்னாட்டு நிறுவனங்களைச் சாராமல் நாமே உருவாக்க முடியும் என்பதற்கு பேச்சி ஒரு சாட்சி.” என்று நீச்சல்காரன் தன் கண்டுபிடிப்பு பற்றி  பெருமிதத்துடன்  கூறியுள்ளார்.

பொன்மொழி
விண்டோஸ் தளங்களில் பயன்படுத்தக்கூடியது. தவறாக எழுதினால் ல, ர, ன ஒலிமாற்றச் சொற்களையும் சந்திப்பிழை திருத்தப்பட்ட சொற்களையும் இரு சொல் இணைந்ததையும் உடனுக்குடன் காண்பித்தல். சொற்பிழைகளை உடனுக்குடன் திருத்துவதுடன் திருத்துவதற்கு பல நிறங்களைக் காட்டுதல். புதிய பெயர்ச்சொற்களை அகராதியில் சேர்த்தல் போன்ற காலத்திற்கேற்ப பல புதிய வசதிகள் இதில் காணப்படுகின்றன. பொன்மொழி பிழை திருத்தியாக மட்டுமின்றி எழுத்துருவாகவும் செயல்படுகின்றது.

சுளகு, ஓவன்
 சுளகு என்னும் எழுத்தாய்வுக்கருவி, ஓவன் என்னும் ஒருங்குறி மாற்றி கருவியாகும். தமிழ்மொழியை எளிதாகப் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருள் அனைத்தும் சிறந்த களமாக அமைந்திருக்கின்றன.

கூகுள் சேவைகள்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம். தகவல்கள் சேகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. உலகின் பல்வேறு பகுதியில் உள்ள எண்ணிலடங்கா மக்களால் அவரவர் மொழிகளில் பயன்படுத்தும் தன்மை கொண்டது..
  இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் செயல்படும் நிறுவனங்களில் கூகுள் முதன்மையானது. கூகுளின்  தேடுபொறி  சேவை   உலகத்தையே  நம்  விரல்  நுணியில்   கொண்டு   வந்து    சேர்ப்பது. பல கண்டிப்பிடிப்புகளைக்    கணினி   மற்றும்  இணைய    உலகிற்குக்   கொடுத்தச் சிறப்பிற்குரியது. 
கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் செய்திகள், பிளாக்கர், யூட்யூப், கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு  போன்ற பல்வேறு கூகுள் சேவைகள் தாம் இன்று நம்மை இயக்கும் இயக்கிகளாகத் திகழ்கின்றன.
  பல்வேறு மக்களால் பேசப்படும் மொழிகளை எழுத்தறிவு இல்லாத பாமர மக்களுக்கு எளிதில் பயன்படுத்தும் வகையில்  வடிவமைக்கப்பட்டது  கூகுள் குரல் சேவைகள் ஆகும். கூகுள் குரல் தட்டச்சு, கூகுள் குரல் மொழிபெயர்ப்பு, கூகுள் குரல் உதவியாளர், கூகுள் குரல் தேடல் போன்றவை இதில் குறிப்பிடத்தவையாகும். 
தமிழ்மொழியைத் தெளிவான உச்சரிப்புடன் உள்ளீடு செய்தால் நம் தேடல்களை கூகுள் குரல் சேவைகள் பூர்த்தி செய்யும். இச்சேவையைத் தற்போது குழந்தைகளும் எளிதாக பயன்படுத்துகின்றனர். நாம் தேர்வுசெய்யும் மொழியை எளிதாகத்  தட்டச்சு  செய்யப் பயன்படுவது கூகுள் உள்ளீட்டு கருவியாகும்.
இவ்வகையில் தமிழ்மொழிப் பயன்பட்டை கணினியில் கூகுளின் பல்வேறு சேவைகள் எளிதாக்கியுள்ளன.

தமிழ்மொழியும் விக்கிப்பீடியாவும்:
விக்கிப்பீடியா என்பது வாசகர்களால் ஒருமித்து எழுதப்படும் ஒரு இலவச கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். அனைவருக்கும் பொதுவானது. வெளிப்படை தன்மை கொண்டது. இதில் ஒவ்வொருவரும் புதிக பக்கங்களை உருவாக்க, பக்கங்களைத் தொகுக்க, திருத்தமிட, மேம்படுத்த முடியும். 
கணினியில் அனைவரும் தற்போது சரளமாகத் தமிழ்மொழியைக் கையாள்வதற்கு அடிப்படையாக அமைந்தது தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia) ஆகும். இது செப்டம்பர் 2003இல் தொடங்கப்பட்டது. இதனைச் சுருக்கமாக தமிழ் விக்கி என்பர். தரம், கருத்துச்செறிவு எனப் பல்வேறு அளவுகோல்களுடன் செயல்படுவது.
ஆரம்பகாலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், இடைமுகத்தை உருவாக்குவதற்கும் முயன்றவர்களில் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்.  
இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களின் முயற்சியாலும் முன்னெடுப்பாலும் தமிழ் விக்கிப்பீடியா தொடர்ந்து முன்னோக்கிச் செல்கின்றது. ‘தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்கள் 5,67,502, கட்டுரைகள் 1,66,677, கோப்புகள் 8,410, தொகுப்புகள் 40,42,581, பயனர்கள் 2,34,811’ என்ற கணக்கெடுப்பு இதற்குச் சான்றாகும். 

மேலும் “இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில் முதல் இடத்திலும், தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.”2 என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிப்பீடியா மொழி வளர்ச்சிக்குத் துணையாக நிற்பதுடன் அனைவரும் ஒருங்கிணைந்த செயற்படும் மனப்பான்மையை மக்களிடையே உருவாக்குகின்றது. அறிவுசார் செயல்பாடுகளைத் தமிழில் கொடுத்தல், கல்விசார் உள்ளடக்கங்கள், கட்டற்ற மூல ஆவணச் சேகரிப்பு, பிற மொழி உள்ளடக்கங்களை மொழிபெயர்த்தல் போன்ற சமுதாய வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்குகின்றது. 

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பங்கு
கணினியின் வழி உலகங்கெங்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் தமிழக அரசால் நிறுவப்பட்டது தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆகும். இது தமிழ் இலக்கணம், இலக்கியம் மட்டுமின்றி தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றை  உலக  மக்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது. மேலும் அனைத்து துறைகளிலும் கணினியின்  தேவைகளைக் கண்டறிந்து  அதன் பயன்பாட்டை இணையத்தின் வழி மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றது.   இதன் சேவைகளுள்  பின்வருவன  குறிப்பிடத்தக்கவை  ஆகும்.

கணித்தமிழ்
இணையப் பரப்பில் தமிழை நிலைப்படுத்துதல் வேண்டும்.  இணையவழி தமிழ்க்கல்வி, தமிழ் மற்றும்  கணித்தமிழ்  ஆராய்ச்சிகளை உருவாக்குவதோடு  ஊக்குவித்தல் வேண்டும். அனைத்து மின்னணுக் கருவிகள் மற்றும் அனைத்து மென்பொருள்களிலும் தமிழ்ப் பயன்பாட்டை முன்னிறுத்தல் வேண்டும். எளிய மக்களும் கணித்தமிழ் பெற வேண்டும் போன்றவை  இதன்  நோக்கங்களாகும்.


கணித்தமிழ் பேரவை – 
கணினித் தமிழ் ஆய்வினைப் பரப்புதல், தமிழ் மென்பொருட்களையும் உருவாக்குதல்,  தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகத்தை அனைத்து மின்னனு சாதனங்களிலும் இயங்கும்படிச் செய்தல் போன்ற கணினி சாரந்த  பணிகளை இவ் அமைப்பு  மேற்கொள்கின்றது.

கான் கல்விக்கழகம் – 
கணிதம், அறிவியல், பொருளாதாரம் போன்ற பாடங்களுக்கு ஆரம்ப பாடம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை காணொலிகளை ஆங்கிலத்தில் உருவாக்கி உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்காணொலிகளைக் கண்டு பயன்பெறும் வகையில் தமிழில் ஒலி வடிவம் அளித்து பின்னர் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்வது இதன் சிறப்பம்சமாகும்.

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம்
அனைத்துத் துறைகளிலும் தமிழ் உள்ளடக்கங்களை கலைக்களஞ்சிய வடிவில் உருவாக்கி, செயல்படுத்தும் திட்டமே தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் ஆகும். 

மென்பொருள் பதிவிறக்கங்கள் – 
விண்டோஸ் (Windows), லினக்ஸ் (Linux) மற்றும் மேக்கின்தோஸ் (Macintosh) இயக்குதளங்களில் பயன்படுத்துவதற்கான தமிழ் எழுத்துருக்களும் (Tamil Fonts), தமிழ் விசைப்பலகை இடைமுக இயக்கிகளும் (Tamil Keyboard Interfaces) உருவாக்கி இணையதளத்தில் வெளியிட்டு  அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு சேர்ப்பது இதன் பணியாகும். பாரதி, கபிலர், கம்பர், வானவில் போன்ற அனைத்து ஒருங்குறி எழுத்துருக்களை  –எளிதாக   இதில்  பதிவிறக்கம்  செய்து அனைவரும்  பயன்படுத்தலாம்.

ஆய்வு  மற்றும்  உருவாக்கம் 
இயற்கை மொழியாய்வுக் கருவிகள், தமிழ்க் கணினிக் கருவிகள், தமிழ் எழுத்துருக்கள் போன்றவற்றை வழங்குகின்றது.



  • இலக்கணக்குறிப்பு விரிதரவு:
    • தமிழ் இணையக்கல்விக் கழகம் மின்நூலகத்திலுள்ளஅனைத்து நூல்களின் சொற்களுக்கும் மொழியியல் அடிப்படையிலான இலக்கணக்குறிப்பை மாணவர்கள்,  ஆராய்ச்சியாளர்கள், தமிழுக்கான மென்பொருள் உருவாக்குவோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.        1. தமிழ் இலக்கியங்களுக்கான இலக்கணக்குறிப்பு 2. தொடரியல் மற்றும் பொருண்மையியல் விளக்கத்துடன் கூடிய விரிதரவு 3. உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி 4.  வாய்மொழித்தரவு என்னும் நான்கு வகையாக தரவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. 
  • இலக்கண மொழியாய்வுக் கருவிகள்:
    • தமிழ்ச் சமுதாயம் பயன்படுவதற்காக உருவாக்க்பபட்ட தமிழ் எழுத்துருக்கள், சொல் பேசி, தமிழ்ப் பயிற்றுவி, பிழைதிருத்தி, விளையாட்டுச் செயலி, தமிழ் உரையாடி போன்ற தமிழ் மென்பொருள்களை மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்;து  வகையில் அமைந்த தமிழ்க் கணினிக் கருவிகள், ஒரு சொல்லுக்கு எத்தனைப் பொருள்கள் உள்ளன என்பதைக் கண்டறியும்  தமிழ் மின் நிகண்டு.  உச்சரிப்புடன்  கூடிய  ஒரு மின் அகராதி ஆகியவை இதன் முக்கிய கூறுகளாகும்.
  • தமிழ் மென்பொருள்  மேம்பாட்டு நிதி:
    • தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்க விளைவோரை ஊக்குவிக்க நிதியுதவி அளிப்பது, ஏற்கனவே உருவாக்கியுள்ள தமிழ் மென்பொருளை மேம்படுத்த அது தனிநபராக இருந்தாலோ அல்லது நிறுவனமாக இருந்தாலோ  ஊக்கத்தொகை அளிப்பது இதன் நோக்கமாகும்.

தகவலாற்றுப்படை 
பண்டைத் தமிழரின் வரலாறு சார்ந்த அகழாய்வுகள், கல்வெட்டுகள், சிற்பங்கள் போன்றவற்றை விளக்கமாக காண்பிக்கின்றது.



தமிழகத் தகவல் தளம் –
 தமிழிலக்கியங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள், பண்டையப் பெயர்கள், தமிழ்நாட்டுக் கலைகள், கோயில்கள், விழாக்கள், ஓலைச்சுவடிகள், தமிழ்நாட்டு நிலவியல், கோட்டைகள்   போன்றவற்றை  மக்களுக்கு இது எடுத்துக்காட்டுகின்றது.  
விளக்க விரிவுரைகள் 
தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு தொடர்பான செய்திகளைச் சொற்பொழிவுகளின் வழி அனைவரும் அறிந்து கொள்ள உதவுகின்றது.
தகவலாற்றுப்படை – 
தமிழரின் பழங்காலம், அகழாய்வுகள், கல்வெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்கள், ஓவியங்கள் போன்றவற்றை மக்களுக்கு இது எடுத்துக்காட்டுகின்றது.  

தொகுப்புரை
இன்றைய சூழலில் விரைவாக, எளிதாக ஒரு மொழியை, ஒரு கருத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்ல சிறந்த வழி கணினி ஆகும். அவ்வகையில் தமிழ்மொழியைப் பலருக்கும் கொண்டு சேர்க்கும் மென்பொருள்கள், எழுத்துருக்கள், சேவைகள் என கணினி தொழில்நுட்பங்கள்  பல  உள்ளன. அவற்றுள் சில தொழில்நுட்பங்கள் மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.   பல பரிமாணங்களில் கணினியில் தமிழ்மொழி வளர்ச்சி காண்பதற்கு முதன்மை காரணமாக இக்கணினி  தொழிலநுட்பங்கள் கருவியாகத் திகழ்கின்றன. கால மாற்றத்திற்கேற்ப  புதுப்புது தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் அவற்றை எளிமையாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.

துணை நின்றவை
  • https://ta.wikipedia.org/wiki/கணினியில்_தமிழ் 
  • https://ta.wikipedia.org/wiki 
  • https://yourstory.com/tamil/neechalkaran-develops-new-software-tools-in-tamil-wikipedia-spell-checker 
  • https://www.hindutamil.in/news/opinion/columns/189649-.html
  • https://minnambalam.com/public 
  •  சந்திரசேகரன்,இரா.  கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
  • https://www.tamilvu.org/ 

Author
கட்டுரையாளர்

முனைவர் இரா.பி ரியதர்ஷினி

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

ஜி.டி.என். கலைக்கல்லூரி(தன்னாட்சி)

திண்டுக்கல்