தமிழ்மொழியில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளின் பயன்பாடுகளும் சவால்களும்
- 2025
- கட்டுரை
- By முனைவர் த.சங்கரன்
முனைவர் த.சங்கரன்
சத்ய சாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, பாசார், வேப்பூர்-606304, கடலூர் மாவட்டம்.
Summary
தமிழ்மொழி உலகெங்கும் எழுபத்தைந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் ஒரு வளமான இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ள மொழியாக இன்று வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவினால் (AI) தமிழ்மொழி இயற்கைமொழிச் செயலாக்கம் (NPL), இயந்திர மொழிபெயர்ப்பு (MLT), பேச்சு அறிதல், உரையிலிருந்து பேச்சு மாற்றுதல் (Text to Speech) போன்ற பல்வேறு செயலிகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இத்தகைய செயலிகள் பயன்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் நுண்ணறிவு செயலிகள் தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்டது போன்று அல்லாமல் இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கான செயலியாக இருப்பதால் இதனை வெறும் மொழிபெயர்ப்புக்காகவும், தரவுகளைப் தேடிப் பெறுவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றதே தவிர, தமிழ்மொழிப் பயன்பாடிற்காவும், ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. இன்றைய செயற்கை நுண்ணறிவுச் செயலிகளின் பயன்பாடுகளையும் எதிர்கொள்ளும் சவால்களையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
Tamil has evolved today into a language with a rich literary heritage, spoken by over seventy-five million people worldwide. In today's scientific and technological advancements, various Artificial Intelligence (AI) applications are in use for the Tamil language, including Natural Language Processing (NLP), Machine Translation (MLT), Speech Recognition, and Text-to-Speech conversion. However, there are some practical challenges in using these applications. Unlike being developed specifically for Tamil, current Tamil AI applications are often designed for Indo-European languages. Consequently, they are primarily used only for translation and data retrieval, rather than for broader Tamil language usage and research. This article aims to explain the current applications of AI and the challenges they face in the context of the Tamil language.
முன்னுரை:
செயற்கை நுண்ணறிவு தமிழ்மொழி வளர்ச்சியில் இன்று ஒரு மைல் கல்லாக அமைகிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் தமிழ்மொழியை டிஜிட்டல் உலகிற்கு இட்டுச்செல்ல உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவின் முக்கிய பங்களிப்பு இயற்கைமொழிச் செயலாக்கம் (Natural Language Processing) ஆகும். இவை கணினிகள் மனித மொழியைப் புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்யவும், தமிழ்மொழியின் மூலம் உலகளவில் கருத்துப்பரிமாற்றம் செய்யவும் உதவுகிறது. தமிழில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அதில் பல்வேறு சிக்கல்களும் சவால்களும் காணப்படுகின்றன. எனவே செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளையும் அதன்மூலம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.
தமிழ்மொழியில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள்:
இன்றைய செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி உலகின் அனைத்துத் துறையிலும் பல்வேறு வளர்ச்சியை அடையச் செய்துள்ளது. கணினித்தமிழ் வழி இன்று தமிழ்மொழியில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தமிழ்மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. இன்று தமிழில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை அலைபேசியில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று தமிழில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை மூன்று வகைப்படுத்தலாம்.
மொழி கற்றல் செயலிகள்
பேச்சிலிருந்து உரை மற்றும் உரையிலிருந்து பேச்சு மாற்றுச் செயலிகள்
மொழிபெயர்ப்புச் செயலிகள்
மொழி கற்றல் செயலிகள் (Tamil Learning Apps)
லிஸ்-தமிழ் மொழி கற்றுக்கொள்ளுங்கள்
(Jun 10, 2025 ஆம் ஆண்டு Simya Solutions நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
டால்கியோ (Talkio AI)
(Jan 1, 2025ஆம் ஆண்டு Talkiko நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
3. டால்க்பால் (Talkepal Ai)
(Nov 17, 2023 ஆம் ஆண்டு Talkpal, Inc நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
டூயோலிங்கோ (Duolingo)
(May 29, 2013 ஆம் ஆண்டு Duolingo நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
ஐவாகா (iVaca-Learn Tamil Speak & Listen)
(Feb 27, 2025 ஆம் ஆண்டு ivoca.io நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
தமிழ் AI (Tamil AI)
(Apr 18, 2022 ஆம் ஆண்டு Honey Sha நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படும் மொழிக்கற்றல் செயலிகள் புதியதாகத் தமிழ்மொழி கற்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலிகள் ஆகும். பிறமொழி பேசுபவர்கள் தமிழ்மொழியைக் கற்க இது ஏதுவாக அமைகின்றன. இந்தச் செயலிகள் துல்லியமான உச்சரிப்புப் பயிற்சி, தொழில்நுட்பத்துடன் உரையாடல் பயிற்சி, உரையைப் படித்தல் பயிற்சி, உடனடியான பிழைத்திருத்தல் வசதி, அகராதிப் பயன்பாட்டுப் பயிற்சி, இலக்கணப் பயிற்சி, விளையாட்டுகள் மூலம் மொழி கற்றல் மற்றும் தமிழ் கற்றலில் 3D பயன்பாடு போன்ற மொழிக்கற்றல் செயல்பாடுகளை வழங்குகிறது.
பேச்சிலிருந்து உரை / உரையிலிருந்த பேச்சு மாற்றுச் செயலிகள் (TTS/STT)
எலெவன் லேப்ஸ் (Eleven Labs)
(Jun 24, 2025 ஆம் ஆண்டு Eleven Labs Inc நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
மர்ப் AI (Murf AI)
(Feb 1, 2024 ஆம் ஆண்டு Voiser Teknoloji Limited நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
நோட்டா (Notta)
(Feb 14, 2020 ஆம் ஆண்டு Notta Pte. Ltd. நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
வீட் ஐஓ (Veed.IO)
(May 30, 2024 ஆம் ஆண்டு Starii Tech Pty Ltd நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
மாஸ்ட்ரா (Meastra)
(Apr 24, 2023 ஆம் ஆண்டு Innosquares limited நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
தமிழ்மொழியில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உரையிலிருந்து பேச்சாகவும், பேச்சிலிருந்து உரையாகவும் மாற்றும் பயன்பாடு இன்று அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய மொழிமாற்றுச் செயலிகள் பேச்சிலிருந்து உரையாக மாற்றும் குரல் உள்ளீட்டு வசதிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் தொழில்நுட்ப மென்கருவிகள், மாற்றப்படும் உரை மற்றும் பேச்சினை பல்வேறு வகைகளில் பதிவேற்றம் செய்யவும் பதிவிறக்கம் செய்யவும் கூடிய வசதிகள், தமிழ் ஆடியோக்களை உரையாக மாற்றும் வசதிகள், பேச்சினை பிறமொழிகளில் ஆடியோவாக மாற்றும் மென்கருவிகள் மேலும் உரையாடல்களை வசன உரையாக தானாக துல்லியாமாக மாற்றும் வசதிகள் போன்ற பயன்பாடுகளை வழங்குகிறது.
மொழிபெயர்ப்புச் செயலிகள் ( Translation Apps)
1. குயில்பாட் AI (Quill Bot AI)
(Oct 20, 2023 ஆம் ஆண்டு Quill Bot நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
2. அனுவதினி (Anuvadini)
(Jun 16, 2024 ஆம் ஆண்டு BG.Studio நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
3. சூப்பர்நோவா AI (Supernova AI)
(Dec 19, 2024 ஆம் ஆண்டு Supernova நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
4. ஓபன்எல் டிரான்லேட் (Open L Translate)
(Aug 26, 2019 ஆம் ஆண்டு Imagination AI நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் தமிழிலிருந்து உலகில் உள்ள பல்வேறு மொழிகளுக்கும், பிறமொழிகலிலிருந்து தமிழ்மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்ய தேவையான பல்வேறு கருவிகளை உருவாக்கியுள்ளது.
சூழலுக்கேற்ப தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், தமிழ்மொழியின் தொடரமைப்பின் அடிப்படையில் துல்லியமாக மொழிபெயர்த்தல், இந்தியாவிலுள்ள 22 மொழிகள் மற்றும் 51 அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்தல், உரை மற்றும் ஆவணங்களை மொழிபெயர்த்தல், மற்றும் படங்கள் மற்றும் பேச்சினை மொழிபெயர்த்தல் போன்ற மொழிபெயர்ப்பு பயன்பாடுகளை வழங்குகின்றது.
தமிழ் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பயன்பாட்டில் உள்ள சவால்கள்
தமிழ் மொழிக்கு செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் செயலிகள் குறிப்பிடத்தக்க நன்மைகளை அளித்தாலும் அவற்றில் பல குறைபாடுகளும் சவால்களும் உள்ளன. ஆங்கிலம் போன்ற உலகளாவிய மொழிகளுடன் ஒப்பிடுகையில் தொன்மையும் வளமையும் உடைய தமிழ்மொழியில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
தரவுப்பற்றாக்குறை
தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியம் போன்ற நுணுக்கங்களைக் கற்க தமிழ்மொழி சார்ந்த தரவுகள் குறைவாக உள்ளன. பொதுவாக மொழிகற்க தேவையான தரவுகள் மட்டுமே உள்ளன.
தொழில்நுட்ப குறைபாடு
இயற்கை மொழிச்செயலாக்கம் தொடர்பான மொழி ஆராய்ச்சி, அகராதி, பிழைத்திருத்திகள் மற்றும் தமிழ்மொழியின் டிஜிட்டல் உள்ளடக்கம் குறைவாக உள்ளது. இதனால் சிக்கலான மொழிச் செயலாக்கங்கள் செய்யமுடிவதில்லை.
பேச்சுவழக்கு வேறுபாடுகள்:
இலக்கிய வழக்கு, போச்சுவழக்கு, வட்டார வழக்கு போன்ற பேச்சு முறைகள் தமிழில் உள்ளதால் இவற்றைச் செயல்படுத்துவதிலும் கற்பதிலும் பல்வேறு குறைபாடுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
இருபொருள் நிலை:
சொற்களைத் தனியாக பயன்படுத்தும் போதும் ஒரு பொருளும், இலக்கியங்களில் பயன்படுத்தும் போதும் வேறுபொருளும் உடையச்சொற்கள், ஒருசொல் பலபொருளும், பலபொருள் உடைய ஒரு சொற்கள் போன்றவற்றைச் செயல்படுத்துவிதிலும் குழப்பங்கள் உள்ளன.
தொடரமைப்பு மாற்றம்
தமிழ் இலக்கணம், இலக்கியம், உரைநடை போன்றவற்றின் தொடரமைப்பிற்கும், தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள தொடரமைப்பிற்கும் வேறுபாடுகள் காணப்படுவதால் இலக்கண இலக்கியங்களை செயற்கை நுண்ணறிவு செயல்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
உருவவியல் செழுமை
தமிழில் முன்னொட்டுகள், பின்னொட்டுகள், உருமாற்றச் சொற்கள், வேற்றுமையை ஏற்கும் சொற்கள், எண் மற்றும் உறவுச் சொற்கள் போன்றவற்றை மொழிச்செயலாக்கம் செய்யும் போது குறைபாடுகள் காணப்படுகின்றன.
பழமொழிகள் மற்றும் உவமைகள்
தமிழில் உள்ள பழமொழிகள், உவமைகள், உருவகங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் சரியான பொருளை வெளிப்படுத்துவதில்லை. இதனால் தமிழ்மொழியின் அழகியல் கோட்பாடுகளை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை.
உணர்ச்சி மற்றும் தொனி
தமிழில் உணர்ச்சி, தொனி, முரண்பாடு, கிண்டல் ஆகியவற்றை செயற்கை தொழில்நுட்பம் வெளிப்படுத்துவதில் பெரிய தடையாக உள்ளது.
சூழல் உணர்திறன்
தமிழில் பொருளை உணர்த்த சூழல்கள் அவசியமாக அமைகின்றது. செயற்கை நுண்ணறிவு மொழிச் சூழல்களைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுத்தும் போது தவறான மொழிபெயர்ப்பையும் பதில்களையும் வெளிப்படுத்துகின்றன.
நம்பகத்தன்மையின்மை
பல செயற்கை நுண்ணறிவு அமைவுகள் மறைமுகத்தன்மை கொண்டதாக இருப்பதால் அது அளிக்கும் தகவல்களும் தரவுகளும் எந்த அளவிற்கு சரியானதாக இருக்கும் என்பது நம்பகத்தன்மையற்றதாக இருக்கின்றது.
முடிவுரை:
இன்று தமிழில் செயற்கை நுண்ணறிவுச்செயலிகள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மொழியைக் கற்பதற்கும், பேச்சிலிருந்து உரை/உரையிலிருந்து பேச்சு மற்றும் மொழிபெயர்ப்பிற்காக மட்டுமே இந்தச் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். அதிலும் பொதுவான தரவுகளையும் தகவல்களை மட்டுமே பெற முடிகின்றது. தமிழ்மொழி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு இவ்வகைச்செயலிகள் ஏதுவானதாக இல்லை. தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களின் நுட்பமான தரவுகள் குறைவாகவே உள்ளன. இதனால் இச்செயலிகளைப் பயன்படுத்துவதில் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இச்செயலிகள் மொழியைக் கற்க தேவையான அடிப்படைத் தரவுகள் மட்டுமே கொண்டுள்ளன. தமிழ்மொழியின் நுட்பமான மொழிச்செயலாக்கங்களைச் செய்ய முடிவதில்லை. பொதுவாக இச்செயலிகள் அனைத்தும் இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கான செயலிகளாக மட்டுமே உள்ளன. தமிழுக்கான முழுத்தரவுகளையும் கொண்ட செயலிகளாக உருவாக்கப்படும் போதுதான் அது முழுமையான பயனை அடையமுடியும் என்பதில் ஐயமில்லை.
இணைய ஆதாரங்கள்:
(இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட 14 தமிழ் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் அனைத்தும் இலவசமாக அலைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய செயலிகளாகும். அவற்றை கீழ்கண்ட வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.)
https://play.google.com/store/apps/details?id=com.simyasolutions.ling.ta,
https://play.google.com/store/apps/details?id=com.talkiko.app
https://play.google.com/store/apps/details?id=io.ivoca.conversationtamil
https://play.google.com/store/apps/details?id=com.VoiceTypingInTamil.SpeechToTextTamil
https://play.google.com/store/apps/details?id=io.elevenlabs.coreapp
https://play.google.com/store/apps/details?id=com.voiser.texttospeech
https://play.google.com/store/apps/details?id=com.langogo.transcribe
https://play.google.com/store/apps/details?id=com.starii.kapkap
https://play.google.com/store/apps/details?id=com.quillbot.mobile
https://play.google.com/store/apps/details?id=com.asianmobile.languagetranslator
https://play.google.com/store/apps/details?id=in.supernovaai.ask
https://play.google.com/store/apps/details?id=translate.speech.text.translation.voicetranslator







