மாற்றுத் திறனாளிகளுக்கான கற்றல், கற்பித்தல் தொழில் நுட்பங்கள்

திருமதி கு.வளர்மதி,

உதவிப்பேராசிரியர்,

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

P2339#y1, Shape தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

Summary

உலகில் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை என்று பிறவிகள் பலவாகும். பல்வேறு பிறப்புகளுள் உன்னதமானது மானிடப்பிறவி மட்டுமே ஆகும். மனிதனாகப் பிறக்கும் போது உடல் ஊனமின்றிப் பிறத்தல் என்பது ஒரு வரமாகும். ஊனமானது ஒருவருடைய பிறப்பிலேயே இருக்கலாம் அல்லது வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம். ஊனம் என்பது, மற்றவா்களுடன் ஒப்பிடும் போது இயலாத் தன்மை இருப்பதைக் குறிக்கும். இது உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடா்பான குறைபாடு ஆகியவை தொடா்புடையதாகும். தற்காலத்தில் ஊனமுற்றோரை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கின்றோம். உலகச் சுகாதார நிறுவனம் மாற்றுத் திறனாளிகளை “உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினா்” என்று குறிப்பிடுகின்றது. ஊனம் ஒரு குறையல்ல எனும் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் சாதனையாளா்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். மாற்றுத் திறனாளிகளுக்கான கற்றல், கற்பித்தல் தொழில்நுட்பங்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்கான கற்றல், கற்பித்தல் தொழில்நுட்பங்கள் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள்  குறிப்பு 

மாற்றுத் திறனாளி என்பவா் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களைச் செய்யமுடியாமல் போய்விடுகின்றது. இத்தகு காரணத்தினால் அவா்களை நாம் மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கின்றோம்.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 3-ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.  

இந்தியாவில் மட்டும் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக  உள்ளனா். வளா்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மாற்றுத் திறனாளிகள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய முதல் உலக அறிக்கை குறிப்பிடுகின்றது.  

கற்றல், கற்பித்தல் – விளக்கம் 

கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில் – சிந்தையில் ஏற்றக் கொள்ளல் ஆகும். கற்றலானது அறிவை, பழக்கங்களை, செயல்திறனைப் புதிதாகப் பெற்றுக் கொள்ளல் ஆகும். கற்பித்தல் என்பது, மாணாக்கா் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியா்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது எனலாம். “கற்பவரின் இயல்பிற்கும் பாடப்பொருளின் தன்மைக்கும் ஏற்ப கற்பித்தல் முறைகள் வடிவமைக்கப்படவும் மற்றும் தோ்ந்தெடுக்கப்படவும் வேண்டும்”1 அதாவது கற்பவா் இயல்பின் அடிப்படையிலும் கற்பிக்கப்படும் பாடப்பொருளின் அடிப்படையிலும் கற்பித்தல் அமைந்திருக்கும்.  

தேசிய நிறுவனம் 

மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் 15 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுச் சேவையாற்றி வருகின்றது. இங்கு மறுவாழ்வு மருத்துவம், மறுவாழ்வு உளவியல், ஊனமுற்றோருக்கான தொழில்பயிற்சி, பேச்சு, கேட்டல் மற்றும் தொடா்புப்பயிற்சி, சிறப்புக் கல்வி, கண்பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை, செயல்முறை மருத்துவம், 0-3 வயதில் தொடக்கக்கால பயிற்சி, செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்குச் சாதனங்கள் பொருத்துதல், உணா்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி, சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.2 இதுபோன்ற பணிகள் போற்றுதற்குரியனவாகும். 

ஆவாஸ் ரீடா் 

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு வழிகாட்டும் “ஆவாஸ் ரீடா்” எனும் சிறப்புச் செயலியைப் பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவா்களின் தனித்திறனை அடையாளம் காண்பதுடன், கற்றல் குறைபாட்டை நீக்கும் வகையில் மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் உதவியுடன் “எம்.டி.ஏ. ஆவாஸ் ரீ்டா்” என்ற சிறப்புச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியா்கள், ஆவாஸ் ரீடா் செயலியைத் தங்களுடைய ஆண்ட்ராய்டு ஃபோனில் பதிவிறக்கம் செய்து கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இச்செயலியில் வாசிப்பு, கற்றல் எழுத்துக்களை அடையாளம் காணுதல், கணக்குகளுக்கு விடை கண்டறிதல், மாற்றுத் திறனாளிகளின் கற்றல் திறனை அளவிடுதல் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நிறை, குறைகளைத்  தெரிவிக்கவும் சிறப்பு ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைச் செயல்பாடு, மாணவரின் வாசிப்புத்திறன் செயலி மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்குக் கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  

டிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு 

டிஸ்லெக்சியா (dyslexia) எனப்படும் வாசிப்புக் குறைபாட்டை முதன்முதலாக விவரித்தவர் பிரிங்கல் மோர்கன் (Pringle Morgan) என்ற ஒரு பொது நல மருத்துவர். பெர்சி என்ற ஒரு 14 வயது பையனைப் பற்றி 1896-ல் பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் (British Medical Journal) பதிவு செய்தார். "இவன் புத்திசாலியான ஒரு பையன், அறிவைப் பொருத்தவரையில் யாருக்கும் குறைந்தவன் அல்ல. நன்றாகப் பேசுவான். ஆனால் அவனுக்கு வாசிக்க இயலாமல் இருக்கிறது. அவன் எழுத்தில் மிகையான எழுத்துப் பிழைகள் உள்ளன. உதாரணமாக, Percy என்ற தன் பெயரை Precy என்றும் carefully, peg என்ற சொற்களை முறையே carfuly, pag என்றும் எழுதுகிறான். அவனால் 7 என்ற எண்னை வாசிக்க முடியும், அனால் அதையே ஏழு என்று சொல் வடிவில் எழுதினால் வாசிக்க முடியவில்லை. அவனுக்கு கண் பார்வையில் கோளாறு எதுவுமில்லை."3 இது வாசிப்புக் குறைபாடு (reading disability), கற்றல் குறைபாடு (learning disability), தனிப்பட்ட கற்றல் குறைபாடு (specific learning disability) என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் டிஸ்லெக்சியா என்ற பெயராலேயே இந்தியாவில் பெரும்பாலும் அறியப்படுகின்றது. தமிழில் இதை வாசிப்புக் குறைபாடு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் (இது படிப்புக் குறைபாடு அல்ல என்பதைக் கவனிக்கவும்). இவர்கள் வாசிப்பில் பல வகையான பிழைகள் இருக்கும். ஓர் எழுத்தை விட்டுவிட்டு வாசிப்பது (தகவல் → தகல்), ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஓர் எழுத்தைப் புகுத்துவது (பகுப்பு → பருப்பு), ஒரு சொல்லுக்குப் பதிலாக வேறு ஒரு சொல்லைப் பாவிப்பது (தவறு → தப்பு) போன்ற பல வாசிப்புப் பிழைகள் இருக்கும். புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள், ஒரு முறை கற்ற சொற்களை விரைவில் மறந்துவிடுவார்கள். 

டிஸ்லெக்சியா – கற்பித்தல் முறைகள் 

டிஸ்லெக்சியா என்ற ஒரு வளர்ச்சிக் குறைபாடு உண்டு என்பதை அறியாதவர்கள் பலர் (ஆசிரியர் உட்பட) உள்ளார்கள். 'தாரே ஜமீன் பர்' (2007) என்ற இந்திப் படம் டிஸ்லெக்சியா உள்ள ஓர் எட்டு வயதுப் பையனின் நிறை, குறைகளை அழகாகக் காட்சிப்படுத்தி இருந்தது.  

டிஸ்லெக்சியாவில் காணப்படும் மொழிசார் குறைபாடுகளை முழுமையாகத் தீர்க்க இயலாவிட்டாலும், கணிசமான அளவு நிவர்த்தி செய்ய முடியும்.  சராசரி மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே கற்பித்தல் முறையை இக்குறையுடைய மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கற்பிப்பதால் பயன் இல்லை. அதாவது, கடும் வாசிப்புப் பயிற்சி அளிப்பது மட்டும் போதாது. டிஸ்லெக்சியாவில் உள்ள அடிப்படைக் குறைபாடு ஒரு சொல்லில் உள்ள ஒலியன்களை அல்லது அதில் உள்ள அசைகளைப் பிரித்துப் பார்க்க இயலாமையே. எனவே, இதை முறைப்படியாக, நுணுக்கமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.4  இது சிறப்புக் கல்வி (special education) என்றும், குறைதீர் கல்வி (remedial education) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இம்மாதியான பயிற்சி சாதாரண பள்ளிக்கூடங்களிலேயே வழங்கப்படுகின்றது. 

சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளியிலும் டிஸ்லெக்சியா உள்ள மாணவர்களுக்குத் தேவையான விசேட கல்வி வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி அளிக்க சிறப்பு வளம்மிகு வகுப்புகள் (resource rooms) தேவை. இதில், ஒவ்வொரு நாளும் ஒரு கால அட்டவணையின் படி 3 அல்லது 4 மாணவர்கள் கொண்ட சிறு குழுக்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் முறைப்படியாக 45 நிமிடங்கள் வாசிப்பு முறைப்படியாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. 

பிரைலி எழுத்து முறை 

பிரைலி என்ற கண்பார்வை அற்றோருக்கான கற்றல் முறையை அறிமுகப்படுத்தியவா் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “லூயிஸ் பிரைலி” ஆவார்.  இவரும் கண்பார்வையற்றவா். ஒவ்வொரு பிரைலி எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். பார்வையற்றோரின் வாழ்வில் பிரைலியின் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாவும் பிரைலியின் கற்றல் முறையைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவா் பிறந்த தினமான ஜனவரி 4-ஆம் தேதி “உலக பிரைலி தினமாகக்” கொண்டாடப்படுகின்றது.  

அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய டி.வி 

உலகில் கண்பார்வை அற்றோரை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கண்பார்வையற்றோர் அல்லது காதுகேளாதோருக்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய டி.வியினை ஸ்பெயின் ஆராய்ச்சியாளா்கள்  உருவாக்கியுள்ளனா். இதன்படி, டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் வரிவடிவங்கள் பிரைலி முறைக்கு மாற்றப்பட்டு ஸ்மாட்ஃபோன் அல்லது லேப்டாப்-க்கு அனுப்பப்படும். இத்தொகுப்பு பிரத்யேக செயலியின் மூலம் விரல்களால் தொட்டுப் படித்துக் கொண்டே அவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும்.  

மாற்றுத்திறன் மாணவருக்குக்  கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் 

மாற்றுத்திறன் மாணவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கும் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாடம் கற்பிக்கலாம் என சக ஆசிரியர்களுடன் சிறப்பு ஆசிரியர்கள் ஆலோசனை பெற வேண்டும். அதுபோல் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு என்ன கல்வி, பயிற்சி அளிக்கப்பட்டது என்று கலந்தாலோசிக்க வேண்டும். 

மாற்றுத்திறன் மாணவருக்கு அரசு  நல்கும் சிறப்புக் கல்வி  

மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்ட பிறகு அவர்களுக்கு மருத்துவம், கல்வி, பொருளாதாரம், தொழில் என நான்கு வகைகளில் அரசு பல்வேறு உதவிகளை வழங்குகின்றது. பார்வையற்றவர், பேச்சுத் திறன் குறைந்தவர்கள், செவித்திறன் இழந்தவர், மனவளர்ச்சி குன்றியவர், கடும் உடல் ஊனமுற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கல்வி அளிக்கப்படுகின்றது. அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற தொழில் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாற்று மென்பொருளுடன் (editing software) கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகின்றது. மேலும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் ஆதார மென்பொருளுடன் (support access software) கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகின்றது. 

தொகுப்புரை  

மாற்றுத் திறனாளிகளாக இருத்தல் என்பது அவர்களுடைய குற்றம் இல்லை. சமுதாயத்தில் உள்ள சகமனிதர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும் பார்வை மாற வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பலரும் தங்களுடைய உடல் குறைபாடுகளைப் பெரிதாக எண்ணுவதில்லை. மாறாக, சவாலாக ஏற்றுத் துணிந்து செயலாற்றி வாழ்வில் சாதிக்கின்றனர். சாதனையாளர்களாக உருவாகப் பல்வேறு கற்றல் செயலிகள், சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு நல்கும் உதவிகள் போன்றனவும் காரணங்களாகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான கற்றல், கற்பித்தல் தொழில் நுட்பங்களால் அவர்களுடைய முன்னேற்றப் பாதையைக் கண்டு சமுதாயத்தில் உள்ள பிற மனிதர்களின் மனதிலும் உத்வேகம் பிறக்கின்றது. மாற்றுத் திறனாளிகளை வாழ்வின் முன்னோடியாக எண்ணும் அளவிற்கு ஹெலன் ஹெல்லர் போன்ற எண்ணற்றோரின் வாழ்க்கைப்பாதை நமக்கு வழிகாட்டுகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான கற்றல், கற்பித்தல் முறைகளை நாமும் பயின்று இயன்றவரை அவர்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழ்தல் வேண்டும். இன்றைய தொழில்நுட்பங்களால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையும் எளிதாகி உள்ளது. 

அடிக்குறிப்புகள் 

Westwood, P., (2008), What teachers need to Know about Teaching methods. Camberwell, Vic, ACER Prress. 
கல்யாண சுந்தரம், எஸ்., (4 திசம்பா், 2013), “மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் மத்திய அரசு நிறுவனம்”.  
Morgan, W. P., (1896), A case of congenital word blindness. British Medical Journal, 2 (1871) : 1378.  
Rose. J. (2013), Identifying and teaching children and young people with dyslexia and literacy difficulties. London, UK: Department of Children, Schools and Families. 

துணைநூல் பட்டியல் 

  • Albrecht, Gary LEncyclopedia of disability,      
  • CA: SAGE Publications,2005. 
  • Charlton, James I. Nothing about us without us : disability oppression and    
  • Empowerment,Berkeley, Calif. [u.a.]: Univ. of California Press,2004. 
  • Masala, Carmelo; Petretto,  Psicologia dell'Handicap e della Riabilitazione [TheDonatella RitaPsychology of Handicap and Rehabilitation],2008. 
Author
கட்டுரையாளர்

திருமதி கு.வளர்மதி,

உதவிப்பேராசிரியர்,

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

P2339#y1, Shape தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.