மொழி கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
- 2025
- கட்டுரை
- By முனைவர் மு. மோகனலட்சுமி
முனைவர் மு. மோகனலட்சுமி
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை
9655014163
Summary
Because of Language teaching and learning directed by technology, language education is undergoing fast a lots of changes. AI has a major share in changing the methods followed by teachers in implementing teaching-learning schemes. In the area of language education, especially in teaching–learning grammar and in error correction, the share given by AI is developing at a speed unimaginable to human brain. This article tries to find out ways to error correction and in getting feedback about the errors committed by learners.
தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மொழி கற்பித்தல் மற்றும் கற்றல் காரணமாக மொழிக்கல்வித் துறை வேகமாகப் பெரும்மாற்றமடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) கற்பித்தல் மற்றும் கற்றல் திட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடும் முறையை மாற்றுவதில் முக்கியப் பங்குவகிக்கிறது. மொழிக்கல்வித் துறையில், குறிப்பாக இலக்கணம் கற்பித்தல், கற்றல் மற்றும் பிழைதிருத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தக் கட்டுரை, இலக்கணப் பிழைகளைத் திருத்திப் பின்னூட்டம் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முயற்சிக்கிறது.
குறிச்சொற்கள்: செயற்கை நுண்ணறிவு, கற்பித்தல், கற்றல், சோதனை, பிழை திருத்தம், பின்னூட்டம், விளக்கம்.
செயற்கை நுண்ணறிவு
அண்மைக் காலமாக ஆசிரியர்களின் வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒரு கற்பித்தல் தொழில்நுட்பமாக அமைகின்றது. பெரும்பாலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ள இது கற்பித்தல்-கற்றல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறலாம். செயற்கை நுண்ணறிவின் முதன்மை நன்மை, கற்பவர்களுக்கு உடனடியாகப் பின்னூட்டத்தை (feedback) வழங்குகின்ற அதன் திறன் ஆகும். எனவே, ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ளும் மனப்பான்மை உள்ளவர்களாகவும் அதில் திறன்பெற்றவர்களாகவும் இருத்தல் நலம்பயக்கும்.
வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மிகவும் புரட்சிகரமானது; மாணவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடியது. செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களுக்கு இலக்கணம், இலக்கியம் கற்பிக்கும்போது, வரம்பற்ற பலன்களை வழங்கியுள்ளது. மரபு இலக்கணத்தின் அடிப்படையில் கற்பவர்களுக்குப் புத்தொளிதரும். செயற்கை நுண்ணறிவு வழி ஒருங்கிணைந்த இலக்கண, இலக்கியம் கற்பித்தல் மற்றும் மொழி கற்பித்தல் தொடர்பான பாடங்களைக் கற்பிப்பதில் ஓர் ‘இணை ஆசிரியராக’ உதவுகிறது. (Cristina Conati, et al, 2018)
சோதனை முயற்சி -1
இக்கூறுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு சோதனை முயற்சி செய்யப்பட்டது. எடுத்துக்காட்டாக, பால், எண், இடத்தைக் (பாலறிகிளவி) காட்டும் விகுதிகளில் பிழையுடன் ‘அவன் கல்லூரியைப் பார்த்தாள்’ என்னும் வாக்கியம் செயற்கை நுண்ணறிவுக்குக் கொடுக்கப்பட்டபோது, அது அளித்த பதில் மிகவும் ஆர்வமூட்டக் கூடியதாக இருந்தது. அது வருமாறு:
"அவன் கல்லூரியைப் பார்த்தாள்" என்ற வாக்கியத்தில் ஒரு சிறு பிழை உள்ளது.
அவன்: ஆண்பால்
பார்த்தாள்: பெண்பால்
ஒரு ஆண் செயலைக் குறிக்க, பெண்பால் வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரியான வாக்கியம் இது:
அவன் கல்லூரியைப் பார்த்தான்.
வேறு சில உதாரணங்கள்:
அவள் படித்தாள்.
நான் சாப்பிட்டேன்.
நாம் விளையாடினோம்.
இவ்வாறு வினைச்சொற்களைப் பயன்படுத்தும்போது, செய்பவரின் பால் (ஆண்/பெண்) மற்றும் எண்ணிக்கை (ஒன்று/பல) ஆகியவற்றை(க்) கவனத்தில் கொள்ள வேண்டும்.”
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டில் ‘எழுவாயின்’ என்னும் கலைச் சொல்லுக்குப் பதிலாகச் ‘செய்பவரின்’ என்றும்; ‘எண்’ என்னும் கலைச் சொல்லுக்குப் பதிலாக ‘எண்ணிக்கை’ என்னும் சொல்லும் ஒருமை/பன்மை என்னும் சொற்களுக்கு ஒன்று/பல என்றும் பயன்படுத்தப்படுவதற்குச் செயற்கை நுண்ணறிவின் தரவகத்தில் (corpus) இலக்கணக் கலைச்சொற்கள் இல்லாததே ஆகும். இதைப்போன்றே மெய் இரட்டித்தலிலும் பிழைகள் நேர்கின்றன. எனவே, தரவகம் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் ஏராளமான உள்ளீடு செய்து முனைப்பு காட்டவேண்டும்.
கற்பவர்கள் கணினி விசைப்பலகைகளைப் பயன்படுத்தி உரையை அல்லது தங்கள் விடைகளை உள்ளிடும்போது, செயற்கை நுண்ணறிவு அவர்களின் இலக்கணப் பிழைகளைச் சரிசெய்து திறன்களை மேம்படுத்துகின்ற பல நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது. இதனால் மாணவர்கள் தங்கள் மொழித் திறன்களையும் இலக்கணத் திறன்களையும் கூர்மைப்படுத்த முடியும். மேலும், செயற்கை நுண்ணறிவு மாணவர்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிவதை எளிதாக்குகிறது, இதன் மூலம் ஆசிரியர் பாடத்தையும் கற்பிக்கும் உத்திகளையும் மாற்றியமைக்க முடியும் (Diane Larsen and Meredith L. L, 2021).
சோதனை முயற்சி-2
மொழியின் ஓர் இலக்கணக்கூறை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பகுப்பாய்வு செய்து பிழைகளைச் சுட்டிக்காட்டி, பின்னூட்டம் தருகிறது எனப் பார்த்தோம். அடுத்த சோதனை முயற்சியாக இலக்கியத்தைச் சோதனை செய்த போது,
சிலப்பதிகாரத்தின் காட்சி காண் காதையின், “மாநீர் வேலிக் கடம்பெறிந்து இமயத்து / வானவர் மருள மலைவிற் பூட்டிய…’’என்னும் அடியைக் கொடுத்தபோது, செயற்கை நுண்ணறிவு கொடுத்த கற்பித்தல் செயற்பாட்டின் படிகள் கீழ்வருமாறு:
"பெரிய கடல் சூழ்ந்த எல்லையைக் கொண்டதும், பகைவர்களுக்குத் துணை நின்றதுமான கடம்ப மரத்தை (அதாவது பகைவர்களை) அழித்து, தேவர்களும் வியக்கும்படி இமயமலையையே வில்லாக வளைத்து நாணேற்றிய..." என்பது அவ்வடிகளின் பொருள்.
இங்குச் சேரன் செங்குட்டுவனின் நிகரற்ற வீரம் பேசப்படுகிறது. கடம்ப மரத்தை அழித்தது அவனது பகையழிக்கும் திறனையும், இமயத்தைப் வில்லாக வளைத்தது அவனது பெரும் வலிமையையும் குறிக்கிறது. இமயத்தை வில்லாக வளைத்த செயல் சிவபெருமானின் திரிபுர சம்ஹாரத்துடன் ஒப்பிடப்பட்டு, மன்னனின் தெய்வீகத் தன்மையைப் புலப்படுத்துகிறது.” என விளக்கத்தோடு செயற்கை நுண்ணறிவு கொடுத்தது.
ஆகவே, ஆசிரியர்கள் கற்பிப்பதற்குத் தேவையான குறிப்புகளையும் பின்னூட்டத்தையும் செயற்கை நுண்ணறிவு தருகிறது. இன்றையத் தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பக் காலத்தில் (information communication technology) கற்பித்தல்-கற்றல் செயற்பாடு எளிதாக நிறைவேறச் செயற்கை நுண்ணறிவு மிகவும் தேவையாகிறது.
கற்பித்தல்-கற்றல் செயற்பாடு
கற்பித்தல்-கற்றல் செயற்பாட்டின் கூறுகளை ஒட்டுமொத்தமாகக் கவனிக்கும்போது, ஆறு இன்றியமையாத அடிப்படைக்கூறுகள் உள்ளன. அவை பாடத்திட்டம், கற்பித்தல் பொருட்கள், ஆசிரியர், கற்பவர், அடைவு, மற்றும் மதிப்பீடு.
செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களுக்குப் பல வகைகளில் உதவுவது போல, கற்பவர்கள் கணினி விசைப்பலகைகளைப் பயன்படுத்திப் பனுவலை அல்லது தங்களின் விடைகளை உள்ளீடு செய்யும்போது, செயற்கை நுண்ணறிவு அவர்களின் இலக்கணப் பிழைகளைச் சரிசெய்து, பின்னூட்டம் கொடுத்து, பல மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது. கற்பவர்கள் தங்கள் மொழித் திறன்களையும் இலக்கணத் திறன்களையும் கூர்மைப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களுக்குக் கற்பவர்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிவதை எளிதாக்கித் தேவையான பயிற்சிகளைக் கொடுக்க உதவுகிறது. பாடத்திட்டத்தின் அடிப்படையில் இரண்டாவது கூறான கற்றல்-கற்பித்தல் பொருட்கள் அல்லது பாடநூல்கள் எழுதும் போது, தேவையான இடத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். அது மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் மூன்றவது கூறான ஆசிரியருக்கும் கற்பவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறெல்லாம் உதவமுடியும் என்பதை முன்னரே பார்த்தோம். இவ்வாறு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போது மாணவர்களின் அடைவு கூடுதலாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்த ஐந்து கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தேர்வுகள் நடத்தும் போது அவர்களின் அடைவைச் சீராக மதிப்பீடு செய்ய முடியும்.
‘இணை ஆசிரியரான’ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் கற்பவர்களின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதால் நிறைய நேரம் சேமிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் கற்பவர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களின் சிக்கல்களைச் சரிசெய்வதிலும் தீர்ப்பதிலும் அந்நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முடிவுரை
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் மொழி கற்பதில் சிக்கல்களையும் தேவைகளையும் கொண்ட மாணவர்களைக் கவனித்துக்கொள்ள ஆசிரியர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கிறது. அது ஆசிரியர்களது பணிச்சுமையைக் குறைப்பதோடு, மாணவர்களின் முன்னேற்ற வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. எதிர்காலத்தில், கற்பவர்களை மையப்படுத்திய பாடப் பொருட்களைப் பொருத்தமான வடிவமைப்புடன் உருவாக்க ஆசிரியர்கள் உழைக்க வேண்டியது வரும்.
துணைநூற்கள்
Cristina Conati and Krzysztof J. Kozlowski. (Eds.) 2018. The Handbook of Research on
Artificial Intelligence in Education. Springer.
Diane Larsen-Freeman and Meredith L. L. Connell. 2021. The Impact of Artificial
Intelligence on Language Learning. Routledge.







