வகுப்பறையில் எண்ணியல் வழி கதை கூறல்

முனைவர் கோ. சுகன்யா

உதவிப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர் - 641 004

Summary

Digital storytelling in the classroom combines the traditional art of storytelling with modern technology to make the teaching and learning process more engaging and impactful. By integrating multimedia elements such as audio, images, video, text, and animation, digital stories capture students’ attention while enhancing their creativity, critical thinking, and communication skills. This approach helps present subject content in a more emotional, contextual, and relatable manner. Furthermore, digital storytelling transforms students into active learners, fostering collaboration, media literacy, and problem-solving abilities. In education, it proves to be an effective tool across various disciplines such as language learning, history, social sciences, and science. Thus, digital storytelling is regarded as a creative and effective pedagogy in the 21st-century learning environment.

எண்ணியல்   வழியாகக்  கதைசொல்லல்  

கதைசொல்லல்  இன்று நேற்று வந்தது அல்ல.  பல ஆயிரம் வருடங்களாக இது நடைமுறையில் இருந்திருக்கிறது. வீட்டில் இருந்த பெரியவர்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கதைசொன்னார்கள். திருவிழாக்களில் தடிகளில் பொம்மைகளைக் கட்டிக் கதைகள் கூறினார்கள். “கதைசொல்லல் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒருபகுதியாக இருந்துவந்துள்ளது” (Ohler, 2013).  ஆனால் இன்று தொழில்நுட்பம்,  தகவல்பரிமாற்ற வளர்ச்சி கதைகூறுவதில் கலந்து, கதைசொல்லுதல் இன்று மேம்பட்டு கணினிவழியாக உருவாகி  உள்ளது.  இதனையே  எண்ணியல்   வழி  கதைசொல்லுதல்  என்கின்றோம்.

இது ஒரு தொழில்நுட்பமாற்றம் மட்டுமன்றி, கதைசொல்லுதல்  புதிய தொழில்நுட்பவசதியில் உள்ள மேம்பட்ட தன்மைகளை உள்வாங்கி முன்னேற்றம் அடைந்துள்ளது. 

எதற்காக எண்ணியல்  வழியாகக் கதைசொல்லல் முக்கியமாகக் கருதப்படுகிறது.?

முன்னோர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், மதிப்புகளைப் பரிமாறவும், சமூக நினைவுகளைப் பாதுகாக்கவும் கதைசொல்லல் முக்கியப் பங்கு வகித்தது. இன்றைய கல்விச்சூழலில், எண்ணியல்  கதைசொல்லல் இந்த பாரம்பரியத்தைக் காப்பாற்றி, அதில் நவீனதொழில்நுட்பத்தின் சக்தியைச் சேர்க்கிறது (Robin, 2008).

மாணவர்கள் எல்லோரும் ஒரேவகையான கற்கும் ஆற்றல் உள்ளவர்கள் இல்லை என்பது தற்போதைய மாணவர்களின் தேர்ச்சி பற்றிய தரவுகள் வெளிப்படுத்துகின்றன. மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் கற்பதில்லை. எனவே கல்வித்துறை சார்ந்தவர்கள் பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, கணினி வழி கற்பித்தல் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளார்கள். சாதாரண நிலையில் உள்ள மாணவனும் ஆர்வத்துடன் கற்பதை எண்ணியல்  வழிகதை சொல்லுதல் ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாகக் கதைகள் கேட்கும் குழந்தைகளின் கற்பனைத்திறன் என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் முடிந்தவரை ஒன்றாக்கப்பட்டுள்ளது.

எண்ணியல்  கதைசொல்லலின் வரையறை :

எண்ணியல்  கதைசொல்லல் என்பது உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், பின்னணிஇசை, மற்றும் ஒலிவிளைவுகள் போன்ற பல்மாதிரி கூறுகளைப் பயன்படுத்தி கதைகளை உருவாக்கும் ஒரு செயல்முறையாகும் (Sadik, 2008). இது மாணவர்களுக்கு கதையை கேட்பவர்களாக மட்டுமல்ல, அதைப் படைப்பவர்களாகவும் மாற்றுகிறது.

எண்ணியல்  கதைகள் என்பதில் அடிக்கடி ஒருகதைகுரல், புகைப்படங்கள், திரைப்படங்கள், வீடியோ, அனிமேஷன் (அசைவு). ஒலி, இசை, என்பது போன்ற உரைகள் உள்ளன. 

பாடத்திட்டத்தை முழுவதும் உள்ளடக்கி நடைமுறை அறிவுமற்றும்திறன்களைக் கொண்டு கருப்பொருள் வகுப்பறையில் ஒரு உணர்ச்சியுடன் கற்பித்தல் இடம்பெறுகின்றது. மேலும் கணினியின் பயன்பாடு சாதாரண மனிதநடவடிக்கையில் ஏற்படுகின்ற பல அசௌகரியங்களை இல்லாது செய்துவிடுகின்றது.

வகுப்பறையில் பயன்பாடு 

 கதை சொல்லுதல் என்னும் பாரம்பரியத்தை என்ணியல் வழி தமிழ் வகுப்பறையில் எண்ணியல்  கதைசொல்லப் பயன்படுத்துவதன் மூலம், செம்மொழியின் பல கூறுகளை கல்லூரி மாணவர்களிடம் எளிமையாக் கொண்டு செல்ல முடிகிறது. மொழிக்கற்றலை பிற பாடங்கள் மூலமாகவும், பிற பாடங்களை  தமிழ் மொழி வாயிலாகவும் கற்பிக்க இந்த நவீன கற்பித்தல் முறை வழி செய்கிறது.

மொழிக்கற்றல் :  சொற்கள், வாக்கியஅமைப்பு, மற்றும் மொழிவெளிப்பாட்டை மேம்படுத்துகிறது.

வரலாறு மற்றும் சமூகஅறிவியல் :  நிகழ்வுகளை உயிர்ப்புடன் விளக்குகிறது.

அறிவியல் : கருத்துக்களை காண்பித்தல் மற்றும் பரிசோதனைகளின் விளக்கங்களை வழங்குகிறது.

ஏன் அனைத்து நேரத்திலும் எண்ணியல்  கதைகள் தயார்செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது.? 

கற்கைநெறிகளிகளில் எண்ணியல்  கதைகூறுவது மிகவும் பலமுள்ளதாக மாணவர்களிடையே காணப்படுகிறது. பலவகைப்பட்ட கற்றல்கற்பித்தல் வழிமுறைகளைக் காண்பிப்பதற்கு எண்ணியல்  கதைசொல்லல் முக்கியமானதாகிறது. ஆக்கத்திறனை மேம்படுத்தும் வழியில் இது செயல்படுகிறது. அத்தோடு அவர்கள் தொடர்பாடல் நோக்கத்தை அடையச்செய்கிறது. அதுமட்டும் அல்லாது கூட்டாகச்செயல்படும் ஏனையவர்களுடைய அடைவையும் இத்தொழில்நுட்பம் அடையவழி செய்கிறது. கூட்டுமுயற்சியாக செயல்படுவதற்கு மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுகிறது. வாழ்நாள்பூராவும் கற்பதற்கும் இது வழிவகுக்கிறது.

கணினி இன்று எல்லோராலும் கையாளப்படும் ஒன்று. மேசையில் இருந்த கணினியின் ஆற்றலுக்கு பலமடங்கு மேலாகக் கையடக்க, மடிக்கணினிகள் செயல்படுகிறது.  எண்ணியல்  கதைகூறுவது என்பது ஒரு சிறிய குறுஞ்செய்தி குறும்திரைப்படமாகப் பரிணமிக்கிறது. பலராலும் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்கள், வன்பொருள்கள் சுலபமாகக் கணினிசந்தையில் கிடைக்கப்பெறுகிறது. இந்த மென்பொருள்கள் வழியாக படங்களை, ஓசைகளை, அசைவுகளை, சத்தத்தை, இணைத்த ஒரு குறும்திரைப்படத்தை இன்றைய மாணவர்கள் சுலபமாகச் செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதில் மிக ஆர்வம் உள்ளவர்களாகவும் உள்ளனர்.

எண்ணியல்   கதைசொல்லல் வகுப்பறையில் ஏன் ?

நன்மைகள் :

  1. படைப்பாற்றல் வளர்ச்சி – மாணவர்கள் தங்கள்சிந்தனைகளைபுதுமையாகவெளிப்படுத்துகிறார்கள்.

  2.  தொடர்புதிறன் மேம்பாடு – வாய்மொழி மற்றும் எழுத்துத் திறன்களை வளர்க்கிறது.

  3. . கூட்டுக்கற்றல் – குழுவாகச் செயல்பட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

  4.  ஈடுபாடு அதிகரிப்பு – பல்மாதிரிகூறுகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.

  5. எண்ணியல்  அறிவு –  நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.

ஒருகாலகட்டத்தில் ஒரு பெரியகணினிமூலம் வளர்ந்த தொழில்நுட்பம் இன்று ஸ்மார்ட்போன்கள். மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப் கணினிகள், கையடக்க கணினிவரை வளர்ந்துள்ளது. இவற்றைப் பரந்த அளவிலான பயன்படுத்தப்படும் அறிவு, திறமை ,மற்றும் செயல்பாடுகள் இன்றைய மாணவர்களிடையே வளர்ந்து உள்ளது. மேலும் கணினி வலைப்பின்னலில் இவ்வகையான கணினிகள் பின்னப்பட்டுள்ளன. 

டிஜிட்டில் கதைகளைத் தயார்செய்யும்போது பலமென்பொருள்களைக் கையாளும் வழிவகைகளைக்கற்று அறியவேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். தேடல் செயல்பாடும் அதிகரிக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். மாதா, பிதா, குரு வழியாகக் கற்ற மாணவர்கள் இன்று மாதா, பிதா, கூகுளைப் பயன்படுத்தித் தேடல் மூலம் தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்கிறார்கள். டிஜிட்டில் கதைகளை உருவாக்கும்போது மாணவர்களின் தராதரத்தை இது மேம்படுத்துகிறது. தொடர்பாடல் எண்ணங்களையும் அதிகமாக்குகிறது. 

ஏனையவரின் கலாச்சார விழுமியங்களை அறிந்துகொள்வதற்கும், தமது கலாச்சார விழுமியங்களை ஏனையவர் அறியச்செய்வதற்கும் எண்ணியல்  கதைசொல்லல் பெரிதும் பயன்படுகிறது. இத்தோடு மாணவர்களின் கேட்டல் ஆற்றலையும் கூர்ந்து கவனிக்கும் தன்மையையும், ஊக்கத்தையும் மகிழ்ச்சி ஊட்டும் செயல்பாடுகளையும், சொல்வளத்தையும் இது மேம்படுத்துகிறது. 

சமூக வலைப்பின்னல் வழியாகச் சிறுவர்கள் இன்று கருத்தைப் பரிமாறிக்கொண்டு இருக்கிறார்கள்.  தமது சிந்தனைகளை, விமர்சனங்களை முகநூல் வழி பதிவுசெய்கின்றனர். 

எண்ணியல்  தகவல், தரவு, கல்வியறிவு ஆகியனவற்றில் மாணவர்கள் மேம்பட சுயமாகச் சிந்திக்க, சுயஆற்றல் ஆக்கத்திறன் உள்ளவர்களா எண்ணியல்  கதைசொல்லல் செயல்பாடு வழிவகுக்கிறது. 

புதிய கற்றல் கற்பித்தலில் படங்களும் அதைப்பற்றி எழுதும் ஆற்றலும் ஓசையுடன் கேட்டலும் உள்ளடங்கி உள்ளன.  இவ்வகையான ஆற்றலை எண்ணியல்  கதைசொல்லல் உருவாக்கிறது.  

முடிவுரை :

21 ஆம்நூற்றாண்டின் கல்விச்  சூழலில், எண்ணியல்  கதைசொல்லல் ஒரு சக்திவாய்ந்த கற்பித்தல் கருவியாகும். இது கற்றலை மேலும் அர்த்தமுள்ளதாக, ஈடுபாட்டுடன், மற்றும் பல்துறைத் திறன்களை வளர்க்கும் விதமாக மாற்றுகிறது. மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் மற்றும் கற்பனைகளைப் பயன்படுத்தி கதை உருவாக்கும்போது,  அவர்கள் அறிவியல், சமூக மற்றும் மொழித் திறன்களை ஒருங்கிணைத்துக் கற்றுக்கொள்கிறார்கள் (Lambert, 2010). ஆசிரியர்கள், இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி, மாணவர்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் அதிகரிக்கமுடியும். மேலும் அவர்களை எண்ணியல்  உலகில் திறமையாக வழி நடத்தவும் முடியும்.

References :

  1. Ohler, J. (2013). Digital storytelling in the classroom: New media pathways to literacy, learning, and creativity (2nd ed.). Corwin Press.

  2. Robin, B. R. (2008). Digital storytelling: A powerful technology tool for the 21st century classroom. Theory Into Practice, 47(3), 220–228. https://doi.org/10.1080/00405840802153916

  3. 3.Sadik, A. (2008). Digital storytelling: A meaningful technology-integrated approach for engaged student learning. Educational Technology Research and Development, 56(4), 487–506. https://doi.org/10.1007/s11423-008-9091-8

  4. Lambert, J. (2010). Digital storytelling: Capturing lives, creating community (3rd ed.). Digital Diner Press.

Author
கட்டுரையாளர்

முனைவர் கோ. சுகன்யா

உதவிப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர் - 641 004