இணையத் தமிழ் மொழியின் வளங்கள் எத்தகையது என்ற கேள்வியுமே ஆராய்ச்சிக்கு உரியது.
தமிழ்மொழியில் இணையத்தில் இடப்படும் சங்கப்பாடல் விளக்கங்கள், கதைகள், வகுப்புப் பாடங்கள் காப்புரிமையை மதிக்கின்றனவா என்பது காப்புரிமைப் பற்றிய ஒரு பெரிய கேள்வி.
ஐம்புலன்களால் உணரக் கூடியப் பொருளை உரிமைக் கொண்டாடுவது மிக எளிது. தட்டில் இருக்கும் உணவிலிருந்து படுக்கும் படுக்கைவரை அனைத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியும். ஒருவரது உரிமை சட்ட வழியாகவும் சமூக நடவடிக்கைகளினாலும் செயல்முறையினால் சுட்டிக் காட்டுவது மிக எளிது. உண்ணும் உணவின் ருசி, சமைத்தவரின் கைப்பக்குவம், சமைத்த முறை என்பதைக் காட்டிக் கொடுத்து விடும். படுக்கும் படுக்கையைப் பார்த்தும், படுத்தும், உணர்ந்தும் படுக்கையின் தன்மையைக் கூற முடியும். அதனுடைய விலைப்பட்டியல் அப்படுக்கையை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும் என்று அளவிட்டுக் கூறுகின்றது. அதை அனுபவிப்பரின் சொத்து எனவும், படைப்பவரிடமிருந்து அது உரிமையாகப் பெற்றுக் கொள்ளப்பட்டது என்ற ஆதாரமாகவும் வாங்கிய இரசீது இருக்கின்றது. மின்சாரம் கூட அளவெடுத்துப் பணம் கட்டித்தான் பயன்படுத்தப் படுகின்றது.
ஆனால், கண்ணால் காண முடியாத கருத்துக்கும் கற்பனைக்கும் எப்படி உரிமைக் கொண்டாட முடியும்?
இவை இரண்டும் ஒரு தற்புனைவு அல்லவா? ஒரு தற்புனைவு, எண்ண வடிவிலிருந்து, பிறர் உணரக்கூடிய வகையில் வெளிப்படுத்தப்பட்டு விட்டால் அது அவருடைய சொத்தாக மாறிவிடுகின்றது. நாவிலிருந்து உதிரும் சொல்லாக இருந்தாலும் சரி, சித்தரிக்கும் கதைகளாயினும் சரி, ஓவியங்களானாலும் திரைப்படங்களானாலும், எண்ண வடிவிலிருந்து மற்றவர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் வகையில் காட்டி விட்டால்அவை காப்புரிமைக்குள் வந்து விடுகின்றன.
தமிழ் பாடநூல்களின் செய்யுள் பகுதியில் நூல் குறிப்பு, ஆசிரியர்குறிப்பு இதற்காகத்தான் கொடுக்கப்படுகின்றது. பயனாளிகள் படைப்பாளிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகின்றது. கல்வி வளங்களுக்கு எவ்வாறு ஆதார வளங்களைக் கோடிட்டுக் காட்டுவது என்பது பள்ளிக் காலத்திலேயேத் தெரிந்திருந்தாலும், இன்று தமிழுக்கு இணையத்தில் கல்வி வளங்கள் தயாரிப்பவரின் கவனத்தில் இல்லை என்பது கவலைக்குரியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதும் ஆகும்.
இன்று தமிழ் மொழிசார்ந்த பல வளங்கள் வலைப்பூக்களாகவும் வலையொலி, வலையொளிகளாகவும் வந்து விட்டன என்பது ஆனந்தமான விஷயம் என்றாலும் கல்வியாளர்களிடம் கண்டிப்பாகப் பதட்டத்தை உருவாக்க வேண்டிய ஒன்று.
ஏதாவது ஒரு பொருண்மையைத் தமிழில் தேடினால் கிடைக்கும் வளங்கள் ஏராளம். ஆனால் கிடைக்கும் வளங்கள் ஏறத்தாழ, சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பிறத் தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக உள்ளன. இவை பொதுவாகத் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டத் தொகுப்புகளாகவோ அல்லது பிறரின் வலைப்பூக்களிலிருந்து அப்படியே எடுத்துப் போடப்பட்டவைகளாகவோ இருக்கின்றன. சித்திரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒருவரின் புகைப்படத்தை இணையத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் போதும் சரி, தங்கள் கருத்துக்கு வலிமைக் கொடுக்கக்கூடிய படங்களாயிருந்தாலும் சரி அவை பிறரின் படைப்புக்களே!
முக்கியமாக, இணையக் காணோலிகள், இவற்றில் ஒரு சங்கப் பாடலை விளக்கிச் சொல்லும்போது, அப்பாடலுக்கான விளக்கத்தைப் இணையத்திலிருந்து எடுத்தப் படங்களைப் பயன் படுத்துகின்றனர். இப்போது பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமன்றி, இன்று பல புதினங்களும் கதாசிரியர்களும் தங்கள் கதைக்கானப் படங்களை, இசையை மற்றத் தளங்களிலிருந்து எடுத்துச் போடுகின்றனர். பாடலில் உள்ளப் பொருண்மைகளை விளக்கப் படங்களைக் காட்டி காணொலியாக இடுவது மிகச் சிறந்தக் கற்பித்தல் உத்தி. ஆனால் பிறரின் படைப்புக்களைக் காட்டி வெறும் விளக்கம் மட்டும் கொடுத்தால் போதாது. காணொலியின் முதலிலோ அல்லது இறுதியிலோ படம் எடுத்தத் தளத்தைக் குறிப்பிட்டு நன்றி சொல்வது மிகவும் அவசியம்.
சொல்லப்படும் கருத்திற்கு, ஆதார வளங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் எது ஆதார வளம், எது சுயக் கருத்து, என்று வேறுபடுத்திக் காட்ட வேண்டியது அவசியம். அவ்வாறு ஆதாரம் காட்டாதபோது இப்படைப்புகள் கருத்துத் திருட்டுப் படைப்புகளாகக் கணக்கெடுக்கப்படும்.
ஒருவரின் கருத்து வெளிப்பட்ட உடனேயே அது அவருடைய உரிமை என்ற பட்சத்தில் அவரது அனுமதி இல்லாமல் அதைப் பயன்படுத்துவது சரியானதல்ல. ஒருவரின் படைப்பைப் பயன்படுத்த அனுமதிக் கேட்டுப் பெறுவது கடினமான விஷயம். அது சில சமயம் அதிகப் பொருள் செலவை ஏற்படுத்தும். எனவே அத்தகைய முயற்சியை இணையப் பயனாளிகள் எடுக்காமலிருக்கலாம். இணையத்தில் கிடைப்பதால் அனைவருக்கும் பொதுவானது என்ற எண்ணமும் பலருக்கு இருக்கலாம். தங்கள் படைப்பைத் தேடிக் கொண்டு யாரும் வரப்போவதில்லை என்ற குருட்டுத் தைரியமாகக் கூட இருக்கலாம்.
இந்தனை “இருக்கலாம்”களின் உள்ளேயும் ஒரு அபாயச் சங்கு ஒலிக்கின்றது.செயற்கைத் தொழில்நுட்பம், தமிழிலும் வளர்ந்து வருகின்றன இக்காலக் கட்டத்தில் பிறரின் வளங்களைத் தங்கள் படைப்பில் இடை இடையேச் செருகிக் கொள்வதும், சில இடங்களில் தன்னுடையக் கருத்தாகவே வெளியிடுவதும் உலகளாவியச் சட்டங்களின் படிக் குற்றமாகும்.இந்தியக் காப்புரிமைச் சட்டத்ஹ்டின் படி ஒருவர் காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகக் கொண்டால் அபராதம் சிறை தண்டனை போன்ற சட்டச் சிக்கல்களை எதிர் கொள்ள நேரும். காப்புரிமை மீறிய பயனாளர்களைத் தங்கள் சேவையைப் பயன்படுத்த விடாமல் கணினி நிறுவனங்கள் தடைகள் விதிக்கலாம்.
இன்று இணையத்திலிருந்து எடுக்கப்படும் வளங்கள் எந்த நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது என்று எவருக்கும் தெரியாது, ஆனால் அனைத்து உலக நாடுகளிலும் காப்புரிமைச் சட்டங்களும் இணையத் தரவுச் சட்டங்களும் மிகவும் கடுமையாக உள்ளன. இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் படி எந்த நாட்டவரின் படைப்புரிமை மீறப்பட்டதோ அந்த நாட்டின் சட்டங்களை இந்தியா நிறைவேற்றும். எனவேப் பிற வளங்களைப் பயன்படுத்தும்போது, ஆதார வளங்களைச் சரியாக அடையாளப்படுத்திப் போட வேண்டும்.
இல்லையேல் தனது தமிழ்ப் படைப்பிற்கான வளங்களைப் படைப்பாளர் புதியதாகத் தயாரிக்க முன் வர வேண்டும். இம்முயற்சி தமிழ்க் கணிமை வளங்கள் அதிகரிக்க உதவி செய்யும்.
பிற நாட்டு வளங்கள் என்றில்லாது, ஏற்கனவே இருக்கும் வளங்களைப் பயன்படுத்தினாலும், அதிலும் ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு முதலியவற்றை விளக்கமாகக் கொடுப்பது, இச்செயல், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு இணையாகத் தமிழும் நவீனமயமாக ஒரு வழி செய்கின்றது, இன்று இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “#” குறியிட்டு தமிழ் வளங்களைக் குறிப்பிடுவது சாலச் சிறந்தது.
இல்லையேல் இக்கணினி யுகத்தில் தமிழ் மொழிக்கு ஒரு தேக்கநிலை உருவாகும். உதாரணமாக
இன்று திருக்குறளுக்கு உரை என்று குறிப்பிடும்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன, இந்த உரைகளைப் பயன்படுத்தும்போது நாம் நூல் குறிப்பு ஆசிரியர் குறிப்பு என்று ஆதார வளங்களை அடையாளம் காட்டாவிட்டால் கால மாற்றத்தாலும் இயந்திரக் கணிமை வளர்ச்சியினாலும் இன்று பயன்படுத்திக் கொண்டு இருக்கும் வளங்கள் மறைய வாய்ப்புக்கள் அதிகம். கணினியில் பயன்படுத்தப்படும் வளங்களுக்குக் குறிப்புக் காட்டுவது என்பது இணையப் பாதையில் தமிழின் வீறுநடையைச் சுட்டிக்காட்டும் சிறு சிறு அறிகுறிகளாகும். எனவே இணையத்தில் ஆதாரவளங்களைச் சரியாகச் சுட்டிக்காட்டிப் பதிவிடுதல் மிக அவசியம்.
மொழி, கணினித் துறை மாணவர்கள் இவ்வாறு காப்புரிமை மீறியக் காணொலிகள் வலைப்பூக்கள் ஆகியவற்றை இணையத்தில் ஆராய்ந்து தங்கள் ஆராய்ச்சியாக வெளியிட முயற்சிக்க வேண்டும்.